Published:Updated:

``இந்திரா காந்தி முன்னால் பாடியதைப் பெருமையாக உணர்கிறேன்” சிலிர்க்கும் பாடகி ராஜ ராஜேஸ்வரி

``இந்திரா காந்தி முன்னால் பாடியதைப் பெருமையாக உணர்கிறேன்” சிலிர்க்கும் பாடகி ராஜ ராஜேஸ்வரி
``இந்திரா காந்தி முன்னால் பாடியதைப் பெருமையாக உணர்கிறேன்” சிலிர்க்கும் பாடகி ராஜ ராஜேஸ்வரி

"சின்னச் சின்னக் குழந்தைகளை சினிமா பாடல்களாகவே தொடர்ந்து பாட வைக்கிறோம். கமர்ஷியலும் தேவைதான். அதற்காக அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது!"

சூப்பர் சிங்கர், சரிகமப லிட்டில் சாம்பியன், சன் சிங்கர் எனப் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் பட்டி தொட்டியெங்குமுள்ள இசை ஆர்வமிக்கவர்களுக்கென ஒரு பிளாட்பாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி என்பவரும் தனியொரு பெண்ணாக நின்று பல குழந்தைகளின் இசை ஆர்வத்தை மெருகேற்றி அவர்களைச் சர்வதேச அளவிலான பாடல் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கிறார். குறிப்பாக, குழுவாகச் சேர்ந்து பாடும் பாடல்களில் புகழ் பெற்றவர் இவர். 

``புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் ஐயாவை என்னோட குருன்னு சொல்லலாம். அவர் முன்பு சென்னையில் `சென்னை இளைஞர் இசைக்குழு' என்ற ஒரு குழுவை நடத்திட்டு இருந்தார். அவரோட குழுவில்தான் நான் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா கோரல் சிங்கிங் (Choir/Choral Singing) பாடினேன். எனக்குச் சின்ன வயசிலிருந்தே இசை மீது ஒரு ஆர்வம் இருந்தது. அஞ்சு வயசிலே பெரம்பூர்ல `கிருஷ்ணா கான நிலையம்' நடத்திட்டு இருந்த எம்.என்.சுந்தரவரதன் ஐயாகிட்டதான் நான் முதல் முதல்ல பாடல் கத்துக்கப் போனேன். இப்போதெல்லாம் மூணு வயசிலேயே மேடை ஏறிப்பாடுற குழந்தைகள் மாதிரி எல்லாம் அப்போ பாடிட முடியாது. என்னைப் பாத்துட்டு, `அஞ்சு வயசுதானே ஆகிறது. இப்போவே எதுக்காக சங்கீதம் கத்துக்கணும். ரொம்பச் சின்னக்குழந்தையா இருக்காளே' ன்னு ஐயா சொன்னார். ஆனாலும், என் அம்மா, `அவளுக்கு நீங்க ஒருமுறை சொல்லிக் கொடுங்கோ. நல்லா பாடினாள்னா தொடர்ந்து அழைச்சிட்டு வர்றேன்'னு சொல்லிட்டா. நான் நல்லா பாட ஆரம்பிச்சதும் அவரு எனக்குச் சங்கீதம் கத்துத் தர முடிவு பண்ணிட்டார். அவர்தான் எனக்கு முறைப்படி சாஸ்திரிய சங்கீதம் கற்றுத்தந்த குரு. அங்கே ஆரம்பிச்ச என்னோட இசை வாழ்வு ராணி மேரிக் கல்லூரியில் பி.ஏ இசை படிக்க வெச்சது. அதுக்கு முன்பே கே.சி.தியாகராஜன், நீடாமங்கலம் வி.வி சுப்ரமணியம், சீதாமணி சீனிவாசன் ஆகிய மூன்று ஜாம்பவான்கள்கிட்டயும் எனக்கு நல்ல அறிமுகம் இருந்துச்சு. இவங்க எல்லோருமாதான் என் இசை ஆர்வத்துக்கு விதை தூவினவங்க.

நாட்டுப்புறப் பாடல்கள், வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி என மூன்றையும் முறையாகக் கற்றுக்கொள்ள இவர்கள் பெரிதும் உதவினார்கள். பாடல்தான் என்னை இயங்க வெச்சது. அதுதான் மெட்ராஸ் யூத் கொயர்ல என்னை ஆரம்ப உறுப்பினரா தேர்ந்தெடுத்தது. கோரல் சிங்கிங்குக்காக நாங்கள் இந்திரா காந்தி அம்மையார் முன்னிலையில் பாடல் பாடியதையும், `ஹீரோ ஆஃப் ஜாலியன் வாலாபாக்' என்று போற்றப்படும் சைபுதீன் கிச்சுலு அவர்களுடைய மகள் சஹிதா எழுதிய இந்திப் பாடலைப் பாடியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதேபோல, பிரளயன் அவர்களுடைய நவீன நாடகங்களிலும் மு.ராமசாமியின் சில நாடகங்களிலும்கூட பாடியிருக்கிறேன்” என்றவரிடம் தற்போது கோரல் சிங்கிங்கிற்காக தாங்கள் எடுத்து வரும் முயற்சி பற்றிச் சொல்லுங்கள் என்றோம். 

``இப்போதுள்ள குழந்தைகள் எல்லோருமே பாடல் பாடுறதுல நல்ல ஆர்வமா இருக்கிறாங்க. ஆனா, அவர்களுடைய ஆர்வத்தை நாம எந்த அளவுக்கு உபயோகமுள்ளதா ஆக்கிக்கணும்ங்கிறதுலதான் நம்மோட எதிர்காலத் தலைமுறையே இருக்கு. சின்னச் சின்னக் குழந்தைகளை சினிமா பாடல்களாகவே தொடர்ந்து பாட வைக்கிறோம். கமர்ஷியலும் தேவைதான். அதற்காக அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் பாடும் பாடலானது நம்முடைய பாரதி, பாரதிதாசன், ராமலிங்க அடிகளார் என இவர்களுடையதாக இருந்தால் அது எல்லோர் மத்தியிலும் போய்ச் சேருமல்லவா. அப்போது இயல்பாகவே தமிழ்ப்பாடங்கள் மீது மாணவர்களுக்கு ஒரு ஈடுபாடு வருமே. அந்த எண்ணத்தை மனதில் வைத்துத்தான் நான் என் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பற்றுள்ள பாடல்களைக் கற்றுக் கொடுக்கிறேன். யுவபாரதி, வைரமுத்து இவர்கள் எழுதிய சிந்தனை கொண்ட கவிதைகளை பாடலாக கம்போஸ் செய்கிறேன். அதோடு, திருக்குறளையும் மகாத்மா காந்தியின் வரலாற்றையும் பாடலாக கம்போஸ் செய்து குழந்தைகளுக்குக் கற்றுத்தரும்போது அடுத்த தலைமுறையினரிடம் நம் தமிழ் எளிதில் சென்று சேருகிறது” என்றவர் இறுதியாக, ``தற்போது எங்கள் கமலா இசைப் பள்ளிக் குழந்தைகளோடு இண்டர்நேஷனல் கோரல் சிங்கிங்கிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறோம். அங்கு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட இருக்கிறார்கள். அப்போது காந்தியின் வாழ்க்கை குறித்த தொகுப்பை எங்கள் குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து பாட இருக்கிறார்கள். நிச்சயமாக அங்குச் சென்று வரும்போது வெற்றியாளர்களாக எங்கள் பிள்ளைகள் திரும்பி வருவார்கள்” என்கிறார் புன்னகையோடு. 

ஐந்தில் இசை கற்ற இவர் ஐம்பதைத் தாண்டியபின் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ராஜ ராஜேஸ்வரி ஓர் இசைக்களஞ்சியம். 

அடுத்த கட்டுரைக்கு