Published:Updated:

`நஷ்டத்துக்கு காரணம் அதிகாரிகள்தான்!'- வயலில் இறங்கிய போராடி விவசாயிகள்

`நஷ்டத்துக்கு காரணம் அதிகாரிகள்தான்!'- வயலில் இறங்கிய போராடி விவசாயிகள்
`நஷ்டத்துக்கு காரணம் அதிகாரிகள்தான்!'- வயலில் இறங்கிய போராடி விவசாயிகள்

போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டு கடும் நஷ்டத்தைச் சந்திக்க இருக்கிறோம். எங்களது நஷ்டத்துக்கு அதிகாரிகளும் காரணம் என்று அதிகாரிகளின் மெத்தனத்தை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கிப் போராடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் பெரியஏரி. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்த 250 ஏக்கர் நெல் சாகுபடி முற்றிலும் பாதிப்படையும் தருவாயில் உள்ளன. விவசாயத்தில் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் எங்களுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்கப் போகிறது" என்று ஆதங்கத்தில் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று செந்துறை அருகே வயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், அரியலூர்- செந்துறை சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "அரசு தரப்பில் பாசன ஏரிகள் தூர்வாரப்படும் என அறிவித்து ஏரிகளை முறையாகத் தூர்வாரப்படவில்லை. 364 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்கான நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என்பதை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மணியிடம் பேசினோம். ”ராயம்புரம் பெரிய ஏரியானது 364 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை நம்பிதான் இங்குள்ள விவசாயிகளே இருக்கிறார்கள். இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் வண்டல் மண் எடுக்கவேண்டும் என்று பல அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் மனுக்கொடுத்தோம். ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடு விதித்ததால் போதிய அளவுக்கு மண் எடுக்க முடியவில்லை. இதனால் மழை நீரைக்கூடச் சேமித்து வைக்கமுடியவில்லை. இந்த அதிகாரிகள் முறையாகத் தூர்வாரியிருந்தாலோ அல்லது எங்களை மண் எடுக்க அனுமதித்திருந்தாலோ கொஞ்சமாவது தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கலாம். இந்த அதிகாரிகள் செய்வது நியாயமா. எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நீங்கள்தான் காரணம்" என்றார்.