Published:Updated:

40% பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது ஏன்! - கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிர்ச்சி

40% பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது ஏன்! - கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிர்ச்சி
40% பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது ஏன்! - கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிர்ச்சி

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், செல்போன் டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் இருந்து திருமழபாடிக்கு செல்லும் வழியில் உள்ளது வேட்டக்குடி பறவைகள் சரணாலயம். கரைவெட்டி, வெங்கனூர், சுத்தமல்லி ஆகிய 3 பஞ்சாயத்துக்களை சுற்றி 450 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது வேட்டைக்குடி பறவைகள் சரனாலயம். இந்த ஏரியில் அக்டோபர் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் 250 இனங்களுக்குமேல் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துசெல்கின்றன.

சைபீரியா, மங்கோலியா, சீனா, ஐரோப்பியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பலநாடுகளில் இருந்து சின்னவெள்ளை கொக்கு, உன்னிகொக்கு, மடையான், வக்கா, பாம்புதாரா, நிர்காகம், ராமச்செருவி, முக்குளிப்பான்சிறவி, நாமக்கோழி, கூலிக்கோடா, வெள்ளை அரிவாள் மூக்கான், கரண்டி மூக்கான் போன்ற பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் இச்சரணாலயத்துக்கு வருகை தருகின்றன.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இங்கு வரும் பறவைகள் இச்சரணாலயத்தில் தங்கி, கூடுகட்டி, அருகில் உள்ள வயல்களில் தானியங்களையும், ஏரியில் உள்ள சிறுமீன்களையும் உணவாக உண்டு வாழும் இப்பறவைகளை இனப்பொருக்கம் செய்து குடும்பத்துடன் மீண்டும் மே மாதத்தில் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்கின்றன.

இந்தநிலையில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் இனங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி வனத்துறை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் சார்பில் 2 நாள்கள் நடைபெற்றது. இதில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வரக்கூடிய பறவைகளின் இனங்கள், அதன் எண்ணிக்கை, அதன் இருப்பிடம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சரணாலயத்துக்கு அருகில் உள்ள வெங்கனூர் ஏரி உள்ளிட்ட அருகில் உள்ள ஏரிகளிலும் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து வன அலுவலர் கூறும்போது, "கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 40 சதவீத வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளின் வரவு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கஜா புயலின் தாக்கம் மற்றும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வரும் செல்போன் கோபுரங்கள் உள்ளது. நீண்ட தொலைவிலிருந்து வரும் வெளிநாட்டு பறவைகள் செல்போன் கோபுரங்களில் மோதி இறந்து விடுவதும் உண்டு. இதனால் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என்று கூறினார்.