Published:Updated:

'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை!

"இன்றைய இந்தத் தேநீர் புதிய சுவையில் இருந்தது. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. ஒரே தேயிலைதான், ஆனால் ஏதோ மாற்றம். உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா, தினமுமே நான் இப்படித்தான் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய சுவையை. "

'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை!
'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை!

"வாழ்வில் நிறைய நாள்களை வீணாக்கிவிட்டேன். இனி தடம் மாற முடியாது. அதே பழைய வேலை அதே பழைய ஊதியம்... அதே பழைய பற்றாக்குறை. இனி திரும்பவே முடியாத பாதைக்குச் சென்றுவிட்டது வாழ்க்கை. சொல்லப்போனால் இப்படி வாழ்வதையே வெறுக்கிறேன்."

தன் முன்னால் நின்று புலம்பியழுபவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

மனிதர்களில் இரண்டு வகை. ஒருவகையினர், தங்கள் வாழ்க்கை குறித்த தெளிவு கொண்டவர்கள். மற்றொரு வகை தங்கள் வாழ்க்கை குறித்த குழப்பம் கொண்டவர்கள். முதல் வகையினரை விட எண்ணிக்கையில் இரண்டாம் வகையினரே அதிகம். 

"நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 15 ஆண்டுகளாக... தொடர்ந்து ஒரே வேலைதான். நல்ல சம்பளம். ஆனால் போதவில்லை"
" நண்பா... உன் வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. அது என்ன, 'நல்ல சம்பளம் ஆனால் போதவில்லை'."

"நல்ல சம்பளம் என்றால் இந்த வேலைக்கு இன்று சந்தையில் கிடைப்பதிலேயே இதுதான் நல்ல சம்பளம். இதைவிட அதிகம் எங்கும் கிடைக்காது. ஆனால் எனக்குப் போதவில்லை"

"எனக்கு என்றால்..."

"எனக்கும் , என் குடும்பத்துக்கும்..." 

"ஓ... குடும்பத்துக்கு என்பதை விலைவாசி தொடர்பானதாகப் புரிந்துகொள்கிறேன். உனக்கும் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?"
நின்றால் நன்றாக இருக்கும் என்பது போல உணர்ந்தான் அவன். எழுந்து கொண்டான்.

"ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப இயந்திரம் போலச் செய்வது போன்ற வெறுப்பான செயல் என்ன இருக்கிறது. சிலர் இந்த இயந்திரத் தனத்தை மறக்கக் குடிக்கிறார்கள், புகைபிடிக்கிறார்கள், இன்னும் என்ன என்னவோ செய்கிறார்கள். ஆனால் எனக்கு அவற்றிலெல்லாம் விருப்பம் இல்லை. எனவே நான் சுமக்கும் வேலை என்னை அப்படி அழுத்துகிறது. அதுவும் இந்த வாழ்வையே வெறுக்குமளவுக்கு!"

"நண்பா, அமைதி கொள். வாழ்க்கையின் சுமையை கொஞ்சம் மற, அல்லது இறக்கிவை. நாம் ஏன் இப்போது ஒரு நல்ல தேநீர் அருந்தக் கூடாது? என்னால் சூடாக மணம் பறக்கும் தேநீரை உனக்குத் தயாரித்துத் தரமுடியும். அதைப் பருகிக்கொண்டே பேசலாமே?"
குரு எழுந்து போனார். 

அவன் குருவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தேநீரை நிதானமாகத் தயாரித்தார். தேநீர் கொதிக்கும் வாசனை அவன் நாசியை வருடியது. அதை அவன் மனம்நிறையச் சுவாசித்தான். மனம் முழுக்க தேநீரின் நறுமணம். மனம் கொஞ்சம் இலகுவானாற்போல் இருந்தது. ஒரு வாசனை மனிதனை இத்தனை இலகுவாக்குமா? 

அவர் இரு கோப்பைகளை எடுத்து ஒரு தாள் கொண்டு சுத்தப்படுத்தினார். பின் அவற்றில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்து அமர்ந்தார். ஒரு கோப்பையை அவன் பக்கம் தள்ளினார். மற்றொன்றை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி அருந்தினார். தேநீர் தீர்ந்தது. 

"தேநீர் சுவையாக இருந்ததா?"

"ஆமாம்!"

"இன்றைய இந்தத் தேநீர் புதிய சுவையில் இருந்தது. அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறது. ஒரே தேயிலைதான், ஆனால் ஏதோ மாற்றம். உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா, தினமுமே நான் இப்படித்தான் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய சுவையை".

தேநீரின் சிறு துவர்ப்பு அவன் நாவில் நின்றதை உணர்ந்தான். நல்ல தேநீர், சொல்லப் போனால் இதுவரை இத்தனை சுவையும் மணமும் மிக்க தேநீரை அவன் அருந்தியதில்லை. 

"நண்பா, ஒவ்வொரு முறையும் புதிய தேநீரைத் தயாரிக்கவே நான் முயல்கிறேன். இது நான் விரும்பிச் செய்யும் செயல் என்பதால்தான் தினம் தினம் புதிய தேநீர் கிடைக்கிறது என்று நம்புகிறேன். ஒருவேளை தேநீரின் மீது எனக்கு வெறுப்பு தோன்றிவிட்டால் எத்தனை முயன்றாலும் ஒரு நல்ல தேநீரை என்னால் தயாரிக்கவே முடியாது. செய்வதை அனுபவித்துச் செய்யவேண்டும் என்பதும் ஒரு போதனைதான். ஆனால், அதை நான் சொல்வதில்லை. காரணம், எனக்குத் தேநீர் வெறுக்கும் நாளில் நான் தேநீர் தயாரிப்பதை அல்லது அருந்துவதை நிச்சயம் நிறுத்தி விடுவேன். அதை விடு. உன் பிரச்னைக்கு வருவோம்" குரு ஒரு சிறு இடைவெளிவிட்டார்.   

"இதைவிட எதையும் சிறப்பாகச் செய்யத் தெரியாது என்கிற பயம்தான் உன் பிரச்னை. அதை வெற்றிகொள்ளவேண்டும் என்றால் நீ முரட்டு வைத்தியம் ஒன்றை உனக்கு நீயே செய்துகொள்ளவேண்டும். விருப்பம் இல்லாத உன் வேலையை விட்டுவிடு. வேலையை வெறுப்போடு செய்து அந்தச் சோர்வில் நீ இருதயம் வெடித்துச் சாவதைவிட அதை நீ விட்டு விடுவது மிகவும் நல்லதாக இருக்கும். 

நீ இல்லாமல் போவதால் உன் குடும்பத்துக்கு ஏற்படும் நிலையை விட அது பரவாயில்லை, இல்லையா? உன் விருப்பம் எது என்பதை யோசி. அதில் உன்னை ஈடுபடுத்து. ஈடுபடுவதென்றால் 10 முதல் 6 வரை செய்யும் வேலையாக அல்ல. கிடைக்கும் எல்லா நேரத்திலும், நாள் முழுவதும்... ஏன் உன் வாழ்க்கை முழுவதையும் அதற்குப் பணயம் வைத்துச் செலவிடு. 

மனிதர்கள் பயணப்படாத வழிகளில் எல்லாம் அழகும் வளமும் கொட்டிக்கிடக்கும். முதன் முதலில் அந்த வழிப் பயணப்பட்டவன் அதைச் சுவீகரித்துக் கொள்வான். அதுபோலத்தான் வாழ்க்கையும். நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வழிகளில் துணிந்து பயணப்பட எதிர்பாராத புதிய புதையல்கள் கிட்டும். அதற்குத் தேவை கொஞ்சம் துணிச்சலும் நிறைய ஆர்வமும்தான்."

அவன் மனம் அமைதியானான். 

"சொல் நண்பா, இப்போது நீ என்ன நினைக்கிறாய்?"

என்ன சொல்வது? தனக்கு என்ன தெரியும் என்கிற பெருங்கவலை கொஞ்சம் தீர்ந்து சுமையை இறக்கிய உணர்வு.

"ஒன்றுமில்லை. இன்னுமொரு தேநீர் அருந்தலாமா...? ஆனால் அதை நான் தான் தயாரிப்பேன்"

"அட, இன்னுமொரு புதிய தேநீரை இன்று சுவைக்கப்போகிறேனா..."  என்று சொல்லிச் சிரித்தார் குரு..!