Published:Updated:

இனி வேகம் இல்லை விவேகம்தான் தேவை - மாறியுள்ள F1 விதிமுறைகள்!

இனி வேகம் இல்லை விவேகம்தான் தேவை - மாறியுள்ள F1 விதிமுறைகள்!
இனி வேகம் இல்லை விவேகம்தான் தேவை - மாறியுள்ள F1 விதிமுறைகள்!

மார்ச் 17 அன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது, `2019 ஃபார்முலா ஒன் சீஸன்'. F1 என்றாலே வேகம்தான். இந்த ஆண்டு டிரைவர்களின் விவேகத்துக்கும் தீனிபோட வருகின்றன புதிய மாற்றங்கள். 2019-ம் ஆண்டில் என்னென்ன விதிமுறைகள் மாறியிருக்கின்றன எனப் பார்ப்போம்.

விங் (Wing)

F1 கார் வேகமாக இயங்குவதற்குக் காரணம், இதன் விங். முன் பக்கம் இருக்கும் விங் எதிர்வரும் காற்றைக் கிழித்து, கார் வேகமாக இயங்க உதவுகிறது. இந்த சீஸனில் விங்கின் அகலம்-200மிமீ, உயரம்-20மிமீ மற்றும் நீளம்-25மிமீ அதிகமாகியுள்ளது. உயரம் அதிகரித்திருப்பதால், காரின் வேகம் கூடும். அதேசமயம் நெருக்கமாகப் பின்தொடரும்போது காரின் முன் பக்கத்தில் கிரிப் அதிகமிருக்கும்.

எண்ட் பிளேட்ஸ் (End Plates)

காற்று முன்பக்க டயர்களுக்குப் போகாமல் தடுக்க, விங்கின் இரு முனைகளிலும் `End plates' பயன்படுத்தப்பட்டன. சிக்கலான வடிவம்கொண்ட இந்த எண்ட் பிளேட், இந்த ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், காரில் அதிக `Downforce' உருவாகி, முன் பக்கம் கிரிப் மேலும் அதிகரிக்கிறது.

Under-wing Strakes

விங்-ன் கீழ்ப் பகுதியில் காற்றின் அடர்த்தியைக் குறைக்க, ஸ்டிரேக் (under-wing strakes) வைக்கப்படுகிறது. `அதிகபட்சம் இரண்டு ஸ்டிரேக் மட்டுமே பொருத்தவேண்டும்' என விதி நிர்ணயித்துள்ளார்கள். அதிக ஸ்டிரேக் இருந்தால், கார்கள் மிக நெருக்கத்தில் இருந்து ஓவர்டேக் செய்ய முயற்சிக்கும்போது காரின் ஸ்டெபிலிட்டி பாதிக்கும் என்பதால் இந்த மாற்றம்.  

பின்பக்க விங்

பின்பக்க விங்கின் உயரம் 20மிமீ, அகலம் 100 மிமீ அதிகரித்திருக்கிறது. இதனால், பின்தொடரும் காரின் மீது காற்றின் விசை குறைவாக இருக்கும். பின்னால் இருக்கும் கார், நேர் பாதையில் சுலபமாக ஓவர்டேக் செய்ய முடியும். DRS திறக்கும் அளவை, 20 மி.மீ அதிகரித்திருக்கிறார்கள். இதனால், DRS பயன்படுத்தும்போது முன்பைவிட பவர் 25 சதவிகிதம் அதிகம் கிடைக்கும். 

பிரேக் டக்ட் (Brake Duct)

காரின் முக்கியமான பாகங்களில் ஒன்று பிரேக். பிரேக் பிடிக்கும்போது உருவாகும் வெப்பத்தைக் குறைக்க பிரேக் டக்ட் பயன்படுகிறது. பிரேக் டக்ட் பெரிதாக இருப்பதால், ஏரோ டைனமிக் பாதிக்கிறது. இதனால், பிரேக் டக்ட்டின் டிசைனை இன்னும் எளிமையாக மாற்றியுள்ளார்கள்.

பார்ஜ் போர்டு (Barge Board)

பார்ஜ் போர்டின் உயரம் 150மிமீ குறைக்கப்பட்டுள்ளது. 100 மிமீ முன்னோக்கி இருக்கும்படி பொருத்தியுள்ளார்கள். முன்னால் இருக்கும் காரில் இருந்து வெளியேறும் காற்று, பின்தொடரும் காருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இதனால், ஒரு கார் மற்றொரு காரை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர முடியும். 

எரிபொருள்

F1 காரில் அதிகபட்ச எரிபொருள் சேமிப்பு 105 கிலோவில் இருந்து 110 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் பற்றிக் கவலைப்படாமல் டிரைவரால் இன்ஜினை முழு பவரில் இயக்க முடியும். ரேஸின் கடைசித் தருணங்களில் போட்டி உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

எடை

இதுவரை இருந்த F1 விதிகளின்படி, போட்டிபோடுவதற்கு முன் டிரைவர்-கார் இரண்டையும் சேர்த்து எடை கணக்கிடப்படும். இதனால், எடை குறைவான டிரைவர்களுக்கு அட்வான்டேஜ் இருந்தது. இனி டிரைவர் மற்றும் காரின் எடையை தனித்தனியே கணக்கிடப்போகிறார்கள். காரின் எடை 733 கிலோவில் இருந்து 740 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. டிரைவர், சீட் மற்றும் எக்யூப்மென்ட் மூன்றும் சேர்த்து எடை குறைந்தபட்சம் 80 கிலோ இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், கூடுதல் எடை காக்பிட்டில் வைக்கவேண்டும் என்று புதிய விதிமுறை வந்துள்ளது. 

டயர் நிறம்

பிரெல்லி, கடந்த ஆண்டு ஏழு நிறங்களில் டயர்கள் வைத்திருந்தது. இந்த ஆண்டு வெறும் மூன்று நிறங்களில் மட்டுமே டயர்கள் வரப்போகின்றன. ரசிகர்கள், போட்டியாளர்களின் உத்தியை சுலபமாகப் புரிந்துகொள்வதற்காகவே இந்த மாற்றம். இனிவரும் F1 ரேஸ்களில் வெள்ளை-ஹார்டு டயர், மஞ்சள் - மீடியம் டயர், சிவப்பு - சாஃப்ட் டயர் என நிறத்தைப் பார்த்தே என்ன டயர் எனக் கண்டுபிடித்துவிடலாம். 

விங் லைட்ஸ்

மழை, பனி போன்ற மோசமான வானிலையில் ரேஸ் இருக்கும்போது, முன்னால் செல்லும் கார் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக விங் நடுவில் எமர்ஜென்சி லைட் ஒன்று பொருத்தியிருப்பார்கள். 2019 முதல் `விங்கின் இரு முனைகளிலும் எண்ட் பிளேட்டில் எமெர்ஜன்சி லைட் பொருத்தவேண்டும்' என விதிமுறை வந்துள்ளது. Intermediate அல்லது wet weather டயர் பயன்படுத்தும் காரில் இந்த லைட்ஸ், ரேஸ் முழுவதும் ஒளிரவேண்டும். 

2018-ம் ஆண்டு சீஸன் எப்படி இருந்தது... ஹைலைட்ஸ் இதோ!https://bit.ly/2DYu761