Published:Updated:

பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!
பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!

டிசைனர் உடைகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்!பிருந்தா

பிரீமியம் ஸ்டோரி

வள் விருதுகள் விழா ஹைலைட்களில் ஒன்று `அகபெல்லா இசை’. அதிலும் ஒரு ஹைலைட்டைக் கவனித்திருக்கலாம், பாடியவர்களின் உடைகள். ப்ளூ ஷேடில் ஒரே மாதிரியான கவுனில் கவனம் ஈர்த்தார்கள் அனைவரும். அந்தப் பெண்களின் உடைகளை வடிவமைத்தவர் `ப்ரிஷாஸ்’ ஸ்டுடியோஸின் டிசைனர் பிருந்தா.

விருது நிகழ்ச்சியில் பெரிதும் கவனம் ஈர்த்த அந்த உடைகளை, உபயோகமில்லாத பழைய சேலைகளிலிருந்து டிசைன் செய்ததாகச் சொல்லும் பிருந்தா, இதுபோன்ற இன்னும் பல புதுமையான கனவுகளுடன் உழைத்துக்கொண்டிருப்பவர்.``பி.காம் முடிச்சுட்டு கார்ப்பரேட் கம்பெனியில வேலைபார்த்திட்டிருந்தேன்.

பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!

14 வருஷங்களுக்குப் பிறகு வேலையை விட்டேன். எனக்கு இயல்பிலேயே பேஷனில் ஆர்வம் உண்டு. பொழுதுபோக்கா பேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். அங்கே தையல் மட்டுமல்லாம, எம்ப்ராய்டரிங், கலரிங், கலம்காரி வொர்க், பிளாக் பிரின்ட்டிங், ஸ்க்ரீன் பிரின்ட்டிங்னு சகலத்தையும் கத்துக்கிட்டேன். அப்படியே ரெண்டு, மூணு பேஷன் ஷோஸுக்கு வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அந்த அனுபவம்தான் பேஷன் இண்டஸ்ட்ரியை அறிமுகம் செய்துவெச்சது’’ - பேஷன் ஷோஸில் ஆரம்பித்த பயணம், பொட்டீக் உரிமையாளர், அவள் அவார்ட்ஸில் டிசைனர், மிஸஸ் இந்தியாவில் டிசைனராகப் பங்கேற்பு...  இப்படி வெவ்வேறு அடையாளங்களை இவருக்குத் தந்திருக்கிறது. 

``கெல்லீஸ்ல நான் குடியிருந்த இடத்துக்குக் கீழே இருந்த டெய்லர் அந்தக் கடையைக் காலி பண்ணினார். அந்த நேரம், எங்க ஏரியாவுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பொட்டீக்கூட இல்லை. அந்த இடத்தையே வாடகைக்கு எடுத்து 2016-ல என்னுடைய `ப்ரிஷாஸ்’ ஸ்டுடியோவை (9710931737) ஆரம்பிச்சேன். தொழில் தெரியும்னாலும் பிசினஸா ஆரம்பிச்சப்போ எல்லாமே புதுசா இருந்தது. ஆட்களை வேலைவாங்குறது, கஸ்டமர்களை வரவழைக்கிறதுனு சவால்களுக்கும் பஞ்சமில்லை.

முதல் வருஷம் ரொம்ப சுமாராத்தான் போச்சு. கலம்காரி, புதுவிதமான எம்ப்ராய்டரிங்னு வாடிக்கையாளர்களைக் கவரும் பல விஷயங்களை அறிமுகப்படுத்தினேன். என் கஸ்டமர்ஸுக்கு எந்த பேப்ரிக், எந்த டிசைன்ஸ் நல்லா இருக்கும், அவங்களுக்கு நான் ஏன் அதைப் பரிந்துரைக்கிறேன்னு புரியவைப்பேன். நான் சொன்னா சரியா இருக்கும், என்னுடைய டிசைனர் டிரஸ் அவங்களுக்குப் பொருத்தமா இருக்கும்னு  அவங்க நம்ப ஆரம்பிச்சாங்க’’ - இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூடுபிடித்திருக்கும் தன் பிசினஸில், பெரும்பாலான வாடிக்கையாளர் களைக் கவர்ந்திருப்பது `புடவை கான்செப்ட்’தான் என்கிறார் பிருந்தா.

பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!

``என் கஸ்டமர் ஒருத்தர் அழகான ஒரு துப்பட்டாவை எடுத்துட்டு வந்து, `இதோட டிரஸ் பழைசாயிடுச்சு. துப்பட்டா அப்படியே இருக்கு. இதைவெச்சு ஏதாவது டிசைன் பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. க்ராப் டாப்பும் குர்தியும் தைச்சுக் கொடுத்தேன். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதே கான்செப்டை என் சேலைகள்ல முயற்சி செய்து பார்த்தேன். என் புடவையில பேனல்ஸ் வெச்சு அனார்கலி மாடலில் லாங் கவுன் தைச்சேன். `சேலையில டிசைன் பண்ணது’னு சொன்னதும் நிறைய பேர் அவங்கவங்க சேலைகளைக் கொண்டுவந்து டிசைன் பண்ணக் கொடுத்தாங்க. அவள் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கும் அதே சேலை கான்செப்டைத்தான் யூஸ் பண்ணினேன்.

எல்லோருக்கும் இன்னிக்கும் டிசைனர் உடை அணியணும்னு ஆசை இருக்கு. ஆனா, நல்ல மெட்டீரியல், ஓரளவுக்கு டீசன்ட்டான டிசைன், தையல்கூலி, எம்ப்ராய்டரி அல்லது ஸ்டோன் வொர்க்னு அதுக்கான பட்ஜெட் எக்குத்தப்பா எகிறிடும். ரெடிமேட்ல வாங்கிறதானாலும் குறைஞ்சது 5,000 ரூபாய் செலவாகும். உபயோகமில்லாத சேலையில டிசைனர் டிரஸ் பண்ணினா பாதிக்குமேல செலவு மிச்சமாகுமே.

அவள் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில பங்கேற்ற 14 பெண்களிடமும் என் ஐடியாவைச் சொன்னேன். அவங்கம்மா அல்லது பாட்டியின் பழைய சேலைகளைக் கொண்டுவரச் சொன்னேன். சாதாரண காட்டன்லேயிருந்து கல்யாணி காட்டன், சில்க் காட்டன், டிசைனர் சேலைனு எல்லாவகையான மெட்டீரியல்கள்லயும் ஆளுக்கொரு சேலை கொண்டுவந்தாங்க. அவங்கவங்க உடல்வாகுக்கு ஏற்றபடி இண்டோ-வெஸ்டர்ன் டைப்பில் டிசைன் பண்ணித் தந்தேன். அந்த உடைகள்ல மகள்களைப் பார்த்த அம்மாக்களுக்கு அவ்வளவு சந்தோஷம். `என் பொண்ணு சேலையே கட்டுறதில்லை. அவளுக்காக வாங்கிய சேலை வருஷக்கணக்கா அப்படியே இருந்தது. இப்படியாவது அந்தச் சேலைகள் பயன்படட்டுமே’னு சந்தோஷப்பட்டாங்க.

அவள் அவார்ட்ஸைப் பார்த்த பிறகு நிறைய பேர் இந்தப் புடவை கான்செப்ட்ல ஆர்வமாகி என்னைத் தேடி வர்றாங்க.  ஜம்ப் சூட், பலாசோ, குர்தி, ப்ராக்ஸ்... இப்படி சேலையில நிறைய டிசைன் பண்ணலாம்’’ - வார்ட்ரோப் நிறைய சேலைகளை அடுக்கிவைத்துக்கொண்டு உடுத்தாமல் இருப்போருக்கு நல்ல சேதி சொல்கிறார் பிருந்தா. இவரது அடுத்த முயற்சி  மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கான டிரஸ் டிசைனிங்.

``மாற்றுத்திறனாளி கஸ்டமர் ஒருத்தங்க  என்கிட்ட வந்தாங்க. அந்தப் பெண்ணுக்கு லெஹங்கா டிசைன் பண்ணித் தந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அளவெடுக்கும்போது சில விஷயங்கள்ல கவனமா இருக்கணும். நடக்கும்போதும் நிற்கும்போதும் உடை அவங்களை உறுத்தக் கூடாது. கால்ல கேலிப்பர் போட்டிருப்பாங்க.  அந்த ஷூ அளவையும் பார்த்துதான் டிரஸ் தைக்கணும். எல்லாத்தையும் பார்த்து டிசைன் பண்ணித் தந்தேன். அந்த டிரஸ்ல அவங்களுடைய தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிச்சதா சொன்னப்போ, நிறைவா இருந்தது. அடுத்தடுத்து வேற வேற நிகழ்ச்சிகளுக்கும் அவங்களுக்கு வேற வேற உடைகள் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். டிசைனர் உடைகள்ல மகளைப் பார்த்த அவங்கம்மா, பூரிச்சுப்போய் என்னை ஆசீர்வதிச்சதை மறக்க முடியாது.

பேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்!

இந்த அனுபவம், `ஏன் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கும் டிசைன் பண்ணக் கூடாது?’னு நினைக்கவெச்சது. அப்படியொரு வாய்ப்புக்காக நான் காத்திருக்கேன். அதேமாதிரி திருநங்கைகளுக்கும் டிசைன் பண்ணணும்னு ஆசை. தன்னம்பிக்கையோடு எல்லா துறைகள்லயும் களமிறங்கும் திருநங்கைகளை டிசைனர் உடைகள்ல இன்னும் தன்னம்பிக்கை அதிகமானவங்களா பார்க்க முடியும்’’ - கனவுகளோடு காத்திருப்பவருக்கு இன்னோர் ஆசையும் இருக்கிறது.

``இந்த எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிற மாதிரி ஒரு புரொடக்‌ஷன் யூனிட் ஆரம்பிக்கிறதுதான் என் எதிர்காலத் திட்டம். அதுல என் பிராண்டுலேயிருந்து பெண்களுக்கான இன்ஸ்கர்ட்டும், குழந்தைகளுக்கான ஷிம்மீஸும் கொண்டு வரணும். வெளியில போட்டுக்கிற உடைகளுக்குக் காட்டும் அக்கறையை உள்ளாடைகள்ல காட்டுறதில்லை. ஆனா, உள்ளாடைகள்தாம் நேரடியா சருமத்தோடு தொடர்புடையவை. அவற்றைத் தேர்ந்தெடுக்கிறதுல அதிக அக்கறை அவசியம். அவற்றை தரமானவையா கொடுக்கணும்னு நினைக்கிறேன்.  இந்த புரொடக்‌ஷன் யூனிட் மூலமா ஒடுக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர முடியும்னு நம்புறேன்.

நான் கடை திறந்த நாள்லேருந்து சாஜிதா என்கிற பெண், என்கூடவே இருக்காங்க. அவங்கதான் அவங்க குடும்பத்தைத் தாங்குறாங்க. குழந்தைகளைப் படிக்க வைக்கிறாங்க. அவங்களைப்போல நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்க்கையும் கொடுக்கிற மாதிரி என் புரொடக்‌ஷன் யூனிட்டை அமைக்கணும்கிறதுதான் ஆசை. அதுல பெண் டெய்லர்ஸ், டிசைனர்ஸ்னு பலதரப்பினருக்கும் வாய்ப்பளிக்கக் காத்துட்டிருக்கேன். புரொடக்‌ஷன் யூனிட் செட் பண்றதுக்கு யாராவது முதலீட்டாளர்கள் முன்வந்தாலும் அவங்களோடு சேர்ந்து செய்ய, தயாரா இருக்கேன்’’ என்கிறவரின் அத்தனை கனவுகளும் நனவாகட்டும்!

-சாஹா

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு