Published:Updated:

"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா?" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்!

"சாயந்திரம் 6 மணிக்கு வேலை முடியவும் கிளம்பலாம்னு பார்த்தா, நாம எதுக்கு கிளம்புறோம்னு தெரிஞ்சுக்கிட்டே, ``இந்த ஒரு வொர்க்கை மட்டும் முடிச்சுக் கொடுத்துடுங்க, இன்னைக்கு இதை கண்டிப்பா டெலிவரி பண்ணியாகணும்"னு சொல்லி கடுப்பேத்துவாய்ங்க. மீறி, நாம கிளம்பினா, நம்ம கேரக்டர் சரியில்லைன்னு ரிப்போர்ட் பண்ணி மொத்தமா வேட்டுவைப்பாய்ங்க!"

"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா?" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்!
"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா?" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்!

காதலர்களின் உலகமே தனி! அது ரொம்ப ஜாலியான உலகம்! யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் அவங்க பிழைப்பே என்றெல்லாம் நாம நம்பிட்டு இருக்கோம்! உண்மையிலேயே அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்களான்னு காதலிக்கிறவங்ககிட்டயே கேட்டப்ப, ரொம்பவே பொங்கிட்டாங்க பாஸ்! அவங்க பொங்கலை கொஞ்சம் பார்ப்போமா?!

கல்யாணம் பண்றவங்களுக்கு விதவிதமா, பிரமாண்டமா கல்யாண மண்டபம் கட்டி வெச்சிருக்காங்க. ஆனா, காதலிக்கிறவங்களுக்காக, அவங்க சந்திச்சுப் பேசுறதுக்காக எங்கேயாவது காதலர் மண்டபம்னு கட்டியிருக்காங்களா? பீச், பார்க்குன்னு போனா இப்பல்லாம் போலீஸே துரத்தியடிக்குதுன்னு பேப்பர்ல செய்தி படிச்சிருப்பீங்க. அப்படி என்னங்க பெரிய தப்பு பண்ணிட்டோம்? நம்ம சங்க காலத்துலயிருந்தே இந்தக் காதல் இருந்துட்டுதான் இருக்கு! ஆனாலும் அதை மரியாதையா பார்க்கத்தான் நமக்குத் தெரியல!

சின்னப்பசங்களுக்காகக்கூட சிறுவர் பூங்கா அங்கங்க இருக்குது. அதுல பெரியவங்கள்லாம் வந்து ஆக்கிரமிச்சு வாக்கிங் சுத்திட்டு இருக்காங்க. ஆனா, நாங்க அங்கே இருக்கிற பெஞ்சுல உட்கார்ந்து காதலோடு பேசிட்டு இருந்தாத்தான் மத்தவங்களுக்குக் கடுப்பாகுது. ``இவங்க தொல்லை தாங்க முடியலப்பா!"ன்னு எங்களோட காதுபடவே திட்டுறாங்க! வீட்டுல மனைவி மேல, மாமியார் மேல இருக்கிற கோபத்துல நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்ததும் பொறாமைப்பட்டுக் கடுப்பாகுறாங்க! நாங்க சந்தோஷமா இருக்கிறது என்ன உலகமகா குத்தமாங்க? பின்ன எப்படித்தான் சந்திச்சுக் காதலிக்கிறதாம்?!

அடுத்ததா ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க காதலிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க! கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள் விழான்னால் ஆபீஸ்ல ஈஸியா பர்மிஷனோ, லீவோ எடுக்க முடியாது! அட, வேலைபார்க்கும் அலுவலகத்துலயாவது சந்திக்கலாம்னு பார்த்தா, நம்ம அப்பா - அம்மாவைவிட கெடுபிடியான டீம் லீடரும் புராஜெக்ட் லீடரும் இருப்பானுங்க! வேலையில நம்ம மேல இருக்கிற காண்டையெல்லாம் நம்ம காதலைப் பிரிச்சுவிடுறதுலதான் காட்டுவாய்ங்க. சாயந்திரம் 6 மணிக்கு வேலை முடியவும் கிளம்பலாம்னு பார்த்தா, நாம எதுக்கு கிளம்புறோம்னு தெரிஞ்சுக்கிட்டே, ``இந்த ஒரு வொர்க்கை மட்டும் முடிச்சுக் கொடுத்துடுங்க, இன்னைக்கு இதை கண்டிப்பா டெலிவரி பண்ணியாகணும்"னு சொல்லி கடுப்பேத்துவாய்ங்க. மீறி, நாம கிளம்பினா, நம்ம கேரக்டர் சரியில்லைன்னு ரிப்போர்ட் பண்ணி மொத்தமா வேட்டுவைப்பாய்ங்க!

காதலிக்கிறதுக்கு இடம் கிடைக்கிற பிரச்னையால செலவும் அதிகமாயிடும் சார். சிம்பிளா பீச்ல மீட் பண்ணலாம்னு பார்த்தா, சொந்தக்காரப் பயக எவன் கண்ணுலயாவது பட்டு, பிரச்னையாகிடும். அதுக்காகவே ஏதாவது மெகா மால், ரெஸ்டாரன்டுன்னு போயி சில மணி நேர சந்திப்புக்காக ஏகப்பட்ட ரூபாய் அழுதாகணும். ஆக, ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள்ள லவ் பண்றதுங்கிறதே ரொம்ப கஷ்டமான வேலை. எல்லா காதலர்களுமே டைரக்டர் ஷங்கர் மாதிரி வசதியானவங்களா சார்?

சரி, தூரமா எங்கேயாவது போய் மீட்பண்ணலாம்னு பைக்ல டிராவல் பண்ணினா, இந்த டிராஃபிக் போலீஸ்காரங்க தொல்லை அதிகமா இருக்கும். காதலர்களோட பைக்னு தெரிஞ்சாலே என்னவோ திருடர்களைப் பிடிக்கிற மாதிரி வழிமறிப்பாங்க... எல்லா டாகுமென்ட்டும் இருந்தாலும்கூட ஓவர் ஸ்பீடு அது இதுன்னு சொல்லி வசூலிக்கப் பார்ப்பாங்க. லவ் பண்றவங்க வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதால எப்படி வேணாலும் மிரட்டலாம்னு ஒரு குருட்டு தைரியம்தான். இந்த உலகமே இப்படித்தான் சார் எங்களைப் பார்க்குது.

வீட்டுல என்னடான்னா செல்போன்ல பேசுறதுகூட ரொம்ப கஷ்டம். இவங்க இல்லாதப்ப செல்லுக்கு கால் வந்தால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் அலர்ட் ஆகி, யார்ட்டருந்து கால் வருதுன்னு பார்க்க வந்திடுவாங்க. ஆக, ஒரு நிமிஷம்கூட செல்போனை விட்டுட்டு பாத்ரூமுக்கோ, டாய்லெட்டுக்கோகூட போக முடியாது. என்ன கொடுமை சார்! வீட்ல இருக்கிறவங்க சொந்தக்காரங்ககூட எவ்ளோ நேரம் வேணாலும் போன் பேசலாம். ஃப்ரெண்ட்ஸ்கிட்டகூட வம்பளக்கலாம். அட, பிசினஸ் விஷயமா யாரையாவது காட்டுத்தனமாக்கூடத் திட்டலாம். ஆனா, லவ்வர்கூட மட்டும் ஜஸ்ட் பத்து நிமிஷம் யாருக்கும் தொந்தரவு இல்லாம முணுணுப்பாகக்கூட பேச முடியாது. உடனே, 'யார்டா அது? யாருடி அது?'ன்னு குறுக்கு விசாரணை தொடங்கிடும்!

ஆகமொத்தத்துல, காதலிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறது, கல்யாணம் பண்றதெல்லாம் க்ளைமாக்ஸ் விஷயம்தான். அதுக்கும் முன்னால காதலர்கள் சந்திக்கிறதுக்கும், காதலை டெவலப் பண்றதுக்கும் ஒரு இடம் கிடைக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு பாஸ்! இதுல காதலை எதிர்க்கிற கலாசாரக் காவலர்கள் தொல்லை வேற ஓவரா போயிட்டு இருக்குதுங்க. நேரம் பார்த்து காதலைச் சொல்லி, அந்தப் பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கி காதலிக்கத் தொடங்கி, அதுக்குப் பிறகு அவங்க வீட்டுல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றதுதானே காதலின் சுவையே. இதுல இவனுங்க வேற புகுந்து காதலிக்கிற உங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைப்போம்னு குட்டைய குழப்புறாங்க பாஸ்!  

இனியாவது காதலித்து திருமணம் செய்துகொண்ட வசதி படைத்த யாரேனும், பொறுப்பா யோசிச்சு, காதலர்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது பூங்கா, கடற்கரைன்னு இட ஒதுக்கீடு பண்ணினா தேவலை. ஆதார் அட்டையக் காட்டினால்தான் உள்ளே அனுமதின்னு சொன்னால்கூட ஓகேதான்!