Published:Updated:

`` `அம்மா' எனது அமைச்சர் பதவியைப் பறித்தபோது..." - மனம் திறக்கும் வைகைச் செல்வன் #LetsRelieveStress

கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர்தான் போவது வழக்கம். ஆனால், பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சிக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த என்னை அனுப்பிவைத்தார் `அம்மா'. அத்தனை அசாத்தியமான ஞாபக சக்தி உள்ளவர். சட்டமன்றத்தில் கலைஞருக்கோ திமுக உறுப்பினர்களுக்கோ பதில் சொல்வதென்றாலும், அறிக்கை தயாரிப்பதென்றாலும் எனக்குத்தான் போன் செய்வார். 

`` `அம்மா' எனது அமைச்சர் பதவியைப் பறித்தபோது..." - மனம் திறக்கும் வைகைச் செல்வன் #LetsRelieveStress
`` `அம்மா' எனது அமைச்சர் பதவியைப் பறித்தபோது..." - மனம் திறக்கும் வைகைச் செல்வன் #LetsRelieveStress

``எண்பதுகளின் இறுதி... அப்போது நான் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தேன். கவிதை, இலக்கியம் என்று சுற்றிக்கொண்டிருந்த நேரம். பொதுவாக, கல்லூரி மாணவர்கள் திமுக இலக்கிய அணியில்தான் இருப்பார்கள். நான், சீனியர் ஐசரி கணேஷ், எல்லாம் அதிமுக இலக்கிய அணியில் இருந்தோம். அப்போதுதான் கவிஞர் இளந்தேவன், அமரர் பா.காளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்திருந்தது..."- புன்னகை மாறாமல் நிதானமாகப் பேசுகிறார் வைகைச் செல்வன். 

அ.தி.மு.க பிரசாரக் குழுப் பொறுப்பாளர். கவிஞர். பட்டிமன்றப் பேச்சாளர்... இப்படிப் பல முகங்கள் கொண்டவர். ``உங்கள் வாழ்வில் மன அழுத்தம் தந்த தருணங்களையும், அவற்றைக் கடந்த வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று கேள்வியை உற்சாகமாக எதிர்கொள்கிறார் வைகைச் செல்வன். 

"பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஜி.ஆர் உருவப் படத்தைத் திறப்பதற்காக `அம்மா'வை அழைத்திருந்தோம். பல எதிர்ப்புகளுக்கு இடையில் `அம்மா'வும் வந்து எம்.ஜி.ஆர் படத்தைத் திறந்து வைத்துவிட்டுப்போனார். ஆனால், அப்போதிருந்த ஒரு சில மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரத்திலேயே எம்.ஜி.ஆர் படத்தைக் கழற்றி உடைத்து சேத்துப்பட்டு ரெயில்வே டிராக்கில் வீசிச் சென்றனர். 

எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பாகிவிட்டது. கல்லூரியை சில நாள்களுக்கு மூடிவிட்டனர். அன்றைக்கு முழுவதும் என் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே' என்னும் அவரின் தத்துவப் பாடல்தான் ஆறுதல் தந்தது. அதன் பிறகு கல்லூரி திறந்தபோது, மீண்டும்  எம்.ஜி.ஆர் படத்தை அதே இடத்தில் திறந்தோம். 

இதெல்லாம் நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. காலம் என்னை அதிமுகவில்  'அம்மா'வின் அமைச்சரவையில் இடம் பெறச்செய்தது. கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர்தான் போவது வழக்கம். ஆனால், பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த என்னை அனுப்பிவைத்தார் `அம்மா'. அத்தனை அசாத்தியமான ஞாபக சக்தி உள்ளவர். சட்டமன்றத்தில் கலைஞருக்கோ திமுக உறுப்பினர்களுக்கோ பதில் சொல்வதென்றாலும், அறிக்கை தயாரிப்பதென்றாலும் எனக்குத்தான் போன் செய்வார். 

ஒருமுறை ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க `அம்மா'விடம் நான் ஏற்கெனவே ஒப்புதல் பெற்றிருந்த நிலையில், நிகழ்ச்சிக்குக் கிளம்பி போய்விட்டேன். அந்த நேரத்தில் `அம்மா', என்னைத் தேடி இருக்கிறார்கள். "நான் கிளம்புவதற்குள் அவர் எங்கே போனார்?" என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்தவர்களும் சரியான விவரத்தைச் சொல்லவில்லை. இதனால் 'அம்மா' மிகவும் கோபமடைந்தார். 

நான் ஜெமினியைத் தாண்டிச் செல்லும்போதே, 'அந்த நிகழ்ச்சிக்குப்போக வேண்டாம்' எனத் தகவல் வந்தது. என் வளர்ச்சியை விரும்பாத யாரோ சிலர் என்னைப் பற்றி தப்பும் தவறுமாக கூறி விட்டார்கள். நான் நேராகப் பசுமை வழிச்சாலையில் இருக்கும் அமைச்சர்களின் குடியிருப்புக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு, என் உதவியாளர்களை அழைத்து ``அநேகமாக என்னை இன்னும் சில மணி நேரத்தில் பதவியிலிருந்து விடுவித்து விடுவார்கள். உங்களின் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்'' எனக்கூறிவிட்டு, என் அறைக்குப்போய்விட்டேன்.       
நான் கூறியதுபோலவே தொலைக்காட்சியில் என் பதவிப் பறிப்பு பற்றிய செய்தி வெளியானது. நண்பர்கள், உதவியாளர்கள் எல்லாம் கண் கலங்கினார்கள். ஆனால், அதை நான் அதனை எளிதாகவே எடுத்துக்கொண்டேன். அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.எந்தத் தவறும் செய்யாத போது அதில் கவலைப்பட என்ன இருக்கிறது?

பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலைதான். அரசனாக இருப்பது வேறு அரச மனநிலையில் இருப்பது வேறு. இங்கு மனநிலைதான் முக்கியம். வழக்கம்போல் எழுத்து, மேடைப்பேச்சு, கட்சிப்பணி என்றிருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து `அம்மா'வே என்னை அழைத்தார்கள். குடும்பத்தினருடன் சென்று பார்த்தேன். 

``உங்களின் மேல் தவறில்லை என்பதை அறிந்துகொண்டேன். தொடர்ந்து பணியாற்றுங்கள்'' என்று கூறினார். உடல் நலம் குன்றுவதற்கு 11 நாள்களுக்கு முன்பாக அம்மா என்னை அழைத்து அதிமுகவின் செய்தி தொடர்பாளராக நியமித்தார். என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட பணியைச் சிறப்பாகச் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் வைகைச் செல்வன். 
அவரின் வாசிப்புப் பழக்கம் குறித்துக் கேட்டோம்.

``புத்தகங்கள் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை வாங்கி இருப்பேன். இங்கே 7 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. மதுரையில் 10 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. உலக அளவிலான அரசியல், சமூகம் சார்ந்த நூல்கள், கதை கவிதை எனத் தேர்ந்த நூல்களை வாசிப்பேன். 

வாசிப்புப் பழக்கம்தான், பொறுமை, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பக்குவமான மனநிலையை உருவாக்கும்.  ஆனால், தோல்விகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது நாம் சாதனையாளனாக மாறும் ரகசியம்.

இதுவரை நான் 12 நூல்கள் எழுதி இருக்கிறேன். எழுத்து, வாசிப்பு, பாடல்கள் கேட்பது, கட்சிப்பணி, மேடைப்பேச்சு, சுற்றுப்பயணம் எனத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதால், மனப்புழுக்கம் மன அழுத்தம் இவையெல்லாம் என்னை அண்டவே அண்டாது'' என்று புன்னகை ததும்ப விடை கொடுக்கிறார் வைகைச் செல்வன்.