Published:Updated:

`` `ஐ லவ் யூ'னு அவர் அனுப்பிய மெசஜ்... பார்த்த என் தம்பி...!" ஆசிரியர் தம்பதியின் காதல் கதை

``ஒருநாள் `ஐ லவ் யூ'னு ஜோதிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போ ஜோதியின் செல்போன் அவங்க தம்பி கையில இருந்திருக்கு. அவர் என் மெசேஜைப் பார்த்துட்டு, `நீங்க அக்கா தங்கச்சியோடு பிறக்கலையா? இனிமேல் இப்படி மேசேஜ் அனுப்புற வேலை வேண்டாம்'னு திட்டி பதில் மெசேஜ் அனுப்பினார்."

`` `ஐ லவ் யூ'னு அவர் அனுப்பிய மெசஜ்... பார்த்த என் தம்பி...!" ஆசிரியர் தம்பதியின் காதல் கதை
`` `ஐ லவ் யூ'னு அவர் அனுப்பிய மெசஜ்... பார்த்த என் தம்பி...!" ஆசிரியர் தம்பதியின் காதல் கதை

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மவுன்ட் பேட்டன் - ஜோதி தம்பதியர், பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதலை வென்றவர்கள். தற்போது ஆசிரியர் பணியில் மிளிரும் இவர்கள் தங்கள் வெற்றிக் காதல் கதையைக் கூறுகிறார்கள்.

``என் பூர்வீகம், சென்னை. நான் டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் படிச்சேன். சீனியாரிட்டி அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் பிளாக் சேலியம்பேடு அரசுப் பள்ளியில் எனக்குப் பணி கிடைச்சுது. என் கணவரின் பூர்வீகம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மாநெல்லூர் கிராமம். டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் முடிச்சவர், சென்னையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பணியில் சேர்ந்தார். பிறகு, மீஞ்சூர் பிளாக் பள்ளிப்பாளையம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளிக்குப் பணிமாறுதல் பெற்றார். 

பொன்னேரியிலுள்ள அரசுப் பள்ளியில, ஆசிரியர்களுக்கான செயல்வழிக் கற்றல் முறை பயிற்சி வகுப்பு நடந்துச்சு. எங்க இருவருக்கும் அருகருகே இருக்கை. அங்கதான் நாங்க முதல் முறையா மீட் பண்ணிகிட்டோம். ஒருநாள் எங்கிட்ட குடிக்கத் தண்ணீர் கேட்டவர், வாட்டர் பாட்டிலை காலி பண்ணிட்டு கொடுத்தார். எனக்குச் கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கலை. இப்படி ஊடலில் தொடங்கி, நண்பர்களானோம். `தேசியக்கொடியைப் பற்றி மாணவர்களுக்கு எப்படிப் புரியும்படி சொல்லிக்கொடுப்பீங்க?'னு ஒருநாள் கேட்டாங்க. நான் ஆர்வமாக, `வாழை இலையிலுள்ள சாப்பாடுதான் சிறந்த உதாரணம். சாம்பார்தான் சிவப்பு நிறம்; சாதம்தான் நடுவிலுள்ள வெள்ளைநிறம்; இலைதான் பச்சை நிறம்'னு சொன்னேன். எல்லோரும் கைத்தட்டிப் பாராட்டினாங்க. அவரும் ஸ்பெஷலா என்னைப் பாராட்டினார். ஆறு நாள்கள் நடந்த அப்பயிற்சியில, எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு" என்று வெட்கத்துடன் தங்கள் காதலின் தொடக்கப் புள்ளியை நினைவு கூர்கிறார், ஜோதி.

அடுத்து பேசும் மவுன்ட் பேட்டன், ``அந்தப் பயிற்சி வகுப்புக்குப் பிறகு, ஜோதி மேல எனக்கு இனம் புரியாத அன்பு உண்டாச்சு. எங்க இருவரின் பள்ளிக்கும் இடையிலான இடைவெளி குறைவுதான். அப்போ, சேலியம்பேடு பள்ளியில ஜோதி புதுசா பணியில் சேர்ந்த  தொடக்கம். அதனால, ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம்னு அவங்க பள்ளிக்கு மதிய உணவு இடைவெளி நேரத்துல தவறாமப் போவேன். நட்பு அதிகமாகி, செல்போன் நம்பரை பரிமாறிகிட்டோம். எங்களுக்குள் காதல் இருந்தாலும், புரப்போஸ் பண்ணிக்கலை. ஒருநாள் `ஐ லவ் யூ'னு ஜோதிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போ ஜோதியின் செல்போன் அவங்க தம்பி கையில இருந்திருக்கு. அவர் என் மெசேஜைப் பார்த்துட்டு, `நீங்க அக்கா தங்கச்சியோடு பிறக்கலையா? இனிமேல் இப்படி மேசேஜ் அனுப்புற வேலை வேண்டாம்'னு திட்டி பதில் மெசேஜ் அனுப்பினார். பிறகு ஜோதியையும் திட்டியிருக்கிறார். தொடர்ந்து அந்த விஷயம் ஜோதியின் பெற்றோருக்கும் தெரிஞ்சுடுச்சு.  

எங்க வீட்டுல சம்மதம் வாங்கினேன். ஜோதி, இந்து மதம். நான், கிறிஸ்தவ மதம். என் அப்பா மற்றும் அண்ணனைக் கூட்டிட்டு ஜோதி வீட்டுக்குப் பொண்ணு கேட்கப் போனேன். `பொண்ணெல்லாம் கொடுக்க முடியாது. என் தங்கச்சி மகனுக்கு மகளைக் கல்யாணம் செய்துகொடுக்க முன்பே திட்டமிட்டிருக்கிறோம்'னு ஜோதியின் அப்பா சொல்லிட்டார்.  எங்க பகுதி ஆசியர்கள் கூட்டமைப்பின் தலைவரை அணுகினேன். அவர் மூலம் ஜோதியின் வீட்டில் பேசினோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதியின் வீட்டில் எங்க காதலுக்குச் சம்மதம் கிடைச்சுது. தொடர்ந்து 2008-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் எங்களுக்குக் கல்யாணமாச்சு. பின்னர் திருவள்ளூர் மாவட்டம் மாநெல்லூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ஜோதி பணிமாறுதல் வாங்கினாங்க. பின்னர் அதே பள்ளிக்கு 2011-ம் ஆண்டு நானும் பணிமாறுதல் வாங்கினேன்" என உற்சாகமாகக் கூறுகிறார். 

அரசுப் பள்ளியின் தரம் உயர, மாணவர் சேர்க்கை அதிகரிக்க... இவர்கள் இணைந்து புதிய முயற்சிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். நன்கொடை மற்றும் நண்பர்கள் மூலம் உதவி பெற்றுள்ளனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, டேபிள், சேர், ஏசி, புது சீருடைகள், மைக் செட், பெயின்ட் வேலைப்பாடுகள், தரமான குடிநீர் எனப் பல லட்சங்கள் மதிப்பில் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை 83-லிருந்து 123-ஆக உயர்ந்திருக்கிறது.

``நாங்க இருவரும் இப்போவரை மாநெல்லூர் பள்ளியிலதான் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். கணவர் குடும்பத்தினர் எங்களுக்கு எப்போதும் ஆதரவா இருக்காங்க. என் குடும்பத்தில் பெற்றோர் ஆதரவா இருந்தாலும், சில சொந்தங்களுக்கு மட்டும் எங்க கலப்பு திருமணத்தில் உடன்பாடில்லை. சீக்கிரமே எல்லாச் சொந்தங்களும் எங்களை ஏத்துப்பாங்கனு நம்புறோம். ஆனா, காதலிச்ச காலத்துல இருந்து இப்போ வரை என் கணவரும் நானும் ரொம்ப அன்போடு இருக்கிறோம். எங்க பள்ளியின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துறோம். தொடர்ந்து காதல் வாழ்க்கையும், ஆசிரியர் பணியும் அர்த்தமுள்ளதாக இருக்குது" எனப் புன்னகையுடன் கூறுகிறார், ஜோதி.