Published:Updated:

``ஒய்.எஸ்.ஆராக மம்மூட்டி செம்ம... ஆனால் படமாக 'யாத்ரா' எப்படி?!" #yatra

குணவதி
கார்த்திகா ராஜேந்திரன்

மகாநடி, என்,டி.ஆரின் பயோபிக்கான கதாநாயகுடு என பயோபிக்குகளை வரிசையாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் தெலுகு சினிமாவில் அடுத்த வரவு முன்னாள் ஆந்திர முதலமைச்சர் யெடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டியின் யாத்ரா. பிறந்து வளர்ந்த கதையை அதிகம் மையப்படுத்தாமல், ஆந்திர அரசியலின் முக்கியத் திருப்புமுனையான வொய்.எஸ்.ஆரின் பாதயாத்திரையையும், அதன் விளைவான மக்கள் நலத்திட்டங்களையும் மட்டும் அதிகம் பேசுகிறது யாத்ரா. 

``ஒய்.எஸ்.ஆராக  மம்மூட்டி செம்ம... ஆனால் படமாக 'யாத்ரா' எப்படி?!" #yatra
``ஒய்.எஸ்.ஆராக மம்மூட்டி செம்ம... ஆனால் படமாக 'யாத்ரா' எப்படி?!" #yatra

``நேனு வின்னானு, நேனு உன்னானு” என்ற மம்மூட்டியின் வசனம்தான் படம் முழுவதும் பயணமாகிறது. விவசாயிகள் தற்கொலையை, குழந்தை ஒன்றின் இறப்பை நேரில் பார்க்கும் ஒய்.எஸ்.ஆர் எப்படி மக்கள் நலத்திட்டங்களின் மூலமாக அசைக்க முடியாத மக்களன்பைப் பெறுகிறார் என்பதுதான் யாத்ராவின் கதை. அரசியல்வாதி ஒய்.எஸ்.ஆர் மிக குறைவாகப் பேசப்பட்டிருக்கிறார். எளிய மக்களை அணுகும் விதத்திலும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பண்பிலும் உறுதியானவர் என ஒய்.எஸ்.ஆரின் மனிதம் பேசப்பட்டிருக்கிறது. 

மகாநடி, சஞ்சு, கதாநாயகுடு, மணிகர்னிகா என விறுவிறு பயோப்பிக்குகளில் தெய்வமாக்கப்பட்ட கதாநாயகர்களைப் போல இல்லாமல், ஒய்.எஸ்.ஆரை மனிதராகவே காட்டியிருப்பது ஆறுதல். அனந்தோ ப்ரம்மா மற்றும் பாத்ஷாலா எனத் தனது முந்தைய படங்களில் காட்டிய இயல்புத்தன்மையை, வாழ்க்கை வரலாற்றைப் பேசுவதிலும் பின்பற்றியிருக்கும் இயக்குநர் மஹி வி.ராகவ், ஒய்.எஸ்.ஆரின் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் 30 விநாடிகளில் ஜம்ப் செய்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு `ஏன் சார் இப்படி?’ ரியாக்‌ஷன். `பாத யாத்திரை’ என்ற ஒரே சப்ஜக்டும், ஒய்.எஸ்.ஆர் என்ற ஒரே முக்கிய கதாபாத்திரமும் மட்டுமே தேர்ந்தெடுத்ததால், இது பயோபிக்கா கமேர்ஷியல் படமா என்று பாவம் இயக்குநரே கன்ஃபியூஸ் ஆகிறார்.

சிரமப்படாமல், இலகுவாக ஒய்.எஸ்.ஆரின் அதியன்புக்குரிய பிம்பத்தைத் தூக்கிநிறுத்தி கூஸ்பம்ப்ஸ் தருகிறார் மம்மூட்டி. ஒவ்வொரு காட்சியிலும் `வாட் எ மேன்’ நடிப்பு. மம்மூட்டியின் இந்த கம்பேக், ஒய்.எஸ்.ஆரின் ரோலுக்காக நிகழ்ந்திருப்பது தெலுகு ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட். ``வாக்கு கொடுக்குறதுக்கு முன்னாடியே யோசிப்பேன், கொடுத்தப்பறம் யோசிக்க ஒண்ணுமில்லை” போன்ற பஞ்ச் வசனங்கள் மூலமாக முதல் சில காட்சிகளிலேயே ஒய்.எஸ்.ஆருக்காகக் கூடியிருக்கும் கூட்டத்தைக் கட்டிப்போடுகிறார் மம்மூட்டி. இதுமட்டுமல்லாமல் கஷ்டப்பட்டு காட்சிக்குக் காட்சி மெதுவாக நகரும் இரண்டாம் பகுதியின் மொத்தச் சுமையையும் தன் தோளில் மாட்டி ஒற்றை ஆளாய் டஃப் கொடுக்கிறார். எல்லாத்தையும் கறுப்பு வெள்ளையாகக் காட்டியதில் மைனஸ் மார்க் வாங்குகிறது யாத்ரா. ஒய்.எஸ்.ஆரைத் தவிர மற்றவர்கள் பணத்தையும் பதவியையும் துரத்துவதாகப் பார்வையாளர்களை நம்ப வைப்பதைக் குறைத்திருக்கலாம். ஒய்.எஸ்.ஆரின் தங்கையாக சுஹாசினி மணிரத்னமும், தந்தையாக ஜகபதி பாபுவும், மனைவியாக அஷ்ரிதா வேமுகண்டியும் நினைவில் நிற்கிறார்கள். 

ஒய்.எஸ்.ஆர் கொடுத்த வாக்கு மாறாதவர், எளியவர்க்கு இறங்குபவர் என்று அவரது தனிப்பட்ட பக்கங்களை மட்டும் ஹைலைட் செய்யும் கேப்பில், அவருடைய இன்டெலெக்சுவல் பக்கங்கள் தொடாமல் நகர்ந்திருக்கிறார் இயக்குநர். மக்கள் நலத்திட்டங்களைப் பற்றியோ, அரசியலைப் பற்றியோ, கொள்கைகளைப் பற்றியோ எங்குமே ஒய்.எஸ்.ஆர் பேசாதது ``ஊப்ஸ்” மொமென்ட். அட அவர் அரசியல்வாதிங்க. அதெல்லாம் கொஞ்சம் பேசணும். அதற்கு பதிலாக நிஜ ஒய்.எஸ்.ஆர் பேசிய உரைகளை கடைசிப் பத்து நிமிடங்கள் ஆறுதல் பரிசாக வைத்திருக்கிறார்கள்! 

திரைப்படத்தின் ஒளிப்பதிவு சத்யன் சூரியன். ‘அடங்மறு’வில் பணியாற்றியவர். பாத யாத்திரை செல்லும் காட்சிகளுக்கான விஷூவல்களை சரியாக படம்பிடித்துள்ளார். .ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்துக்கு ப்ளஸ். தெலுங்கு படங்களுகே அடையாளமான ஸ்லோ-மோஷன் காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்து, கதையின் போக்கை கச்சிதமாக கோர்த்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத்

ஒய்.எஸ்.ஆரின் நடை, பாவனை, சின்னச் சின்ன உடலசைவு என மாஸ் செய்திருக்கிறார் மம்மூட்டி. ஒய்.எஸ்.ஆரின் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், மம்மூட்டி ஃபேன்ஸுக்கும் இது ட்ரீட்தான். மற்றவர்களுக்கு இன்னொரு கேள்வியும் இருக்கும்: இங்க அரசியல்வாதின்னு ஒருத்தர் இருந்தாரே, அவர நீங்க பாத்தீங்க? என்று கேட்க வைக்கிறது யாத்ரா.