Published:Updated:

``ஆவணங்கள் என்கிட்ட இல்லாமப் போனாலும், உங்ககிட்ட இருக்கும்!" - `கீழடி' அமர்நாத்!

``ஆவணங்கள் என்கிட்ட இல்லாமப் போனாலும், உங்ககிட்ட இருக்கும்!" -  `கீழடி' அமர்நாத்!
``ஆவணங்கள் என்கிட்ட இல்லாமப் போனாலும், உங்ககிட்ட இருக்கும்!" - `கீழடி' அமர்நாத்!

"தமிழர்களிடம் எழுத்துப் பதிவு அதிகமில்லாததால் கடல் பயணம் உள்ளிட்ட பயணக் குறிப்புகள் அதிகம் பெற முடியவில்லை. ஆனாலும், தற்போதும் இனியும் தொல் ஆய்வில் கிடைப்பன யாவும் பாடப்புத்தகத்தின் வரலாற்றை நிறையவே திருத்தி அமைக்கப் போகின்றன."

ண்மை வரலாறுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற மெய் விளக்கத்தை எல்லாவிதமான காதுகளுக்குமாய்ச் சேர்த்து ஒரேமூச்சில் ஒப்பித்திருக்கிறது, கீழடி குறித்த 100-வது `பசுமை நடை'த் திருவிழா! காலையில் சமணர் மலை நடை, நூல் வெளியீடுகள், செயற்பாட்டாளர்கள் சிற்றுரை மற்றும் மாலையில் `தொல்லியல் திருவிழா' எனக் களைகட்டியது இந்தக் கொண்டாட்டம்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வரலாற்று இடங்களுக்குப் பொதுமக்களையும் ஆர்வலர்களையும் அழைத்துச்செல்வது, அந்த இடங்களின் உண்மையான சிறப்புகளை, முக்கியத்துவங்களை விளக்குவது எனப் பெரும் பண்பாட்டுப் பணிகளைச் செய்துவருகிறது `பசுமை நடை' அமைப்பு. மதுரையின் பழங்காலத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு சரித்திர இடத்தைத் தெரிவுசெய்து, ஞாயிறன்று அதிகாலையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், வயது முதிர்ந்தோர், பேராசிரியர்கள், துறை வல்லுநர்கள் எனப் பலர் அங்கே குழுவாகக் கூடுகின்றனர். வரலாறு, அரசியல், அறிவியல், சூழலியல் என்று பலதரப்பட்ட உரையாடல்கள்  நிகழ்கின்றன. 

2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், மதுரை யானைமலைப்பகுதியில் சிற்பக் கலைநகரம் அமைக்க தொல்லியல்துறை முனைந்து வந்தது. இதனால் மலையின் தொன்மையும், சிறப்புகளும் சீர்கெட்டுப்போகும் அபாயம் உள்ளதெனக் கூறி, மலையடிவாரப்பகுதியில் உள்ள ஒத்தக்கடை, அரும்பனூர், நரசிங்கம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்புச் சூழலைக் கண்டு திட்டத்தைக் கைவிட்டது, தொல்லியல்துறை. இதன் தொடர்ச்சியாக, வரலாற்று இடங்களைக் காக்க வேண்டும் எனும் நோக்கோடு 30 பேர் கூடி, முதல் நடையாக யானைமலையில் தொடங்கியதுதான், `பசுமை நடை'. 2010-ம் வருடம் செப்டம்பர் 10-ம் நாள் யானைமலையில் முதல் எட்டு வைத்த `பசுமை நடை'யின் கால்கள், தற்போது 100-வது எட்டில் நிற்கின்றன. இந்த அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள், திண்டிவனத்தில் அஹிம்சா நடை, இலங்கையில் தொன்ம நடை என வரலாற்றைப் பேசும் நடைகளுக்கான அமைப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

கீழக்குயில்குடி சமணர்மலை குகைப்பகுதியில் 200 பேரோடு, பசுமை நடையின் 100-வது நடையை, எதிர்பாராத மழை வந்து தொடங்கி வைத்தது. சுடச்சுட ஏற்பாடு செய்யப்பட்ட பருத்திப்பால் நாக்குக்கும் குளிருக்கும் இதம். நடை தொடங்கி குகையை அடைந்ததும், பசுமை நடை வெளியீடான `மதுர வரலாறு' நூலின் ஆறாம் பதிப்பும், சித்திரவீதிக்காரனின் `திருவிழாக்களின் தலைநகரம், மதுரை' நூலும் வெளியிடப்பட்டன. பசுமை நடையின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன், அமைப்புத் தோன்றலுக்குக் காரணமான தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றிட, நடை வெகுவிரைவாய் முடிந்தது. காலை உணவோடு கலைந்தனர்.

மாலை 4 மணி, மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகம். வெளியே மாணவர்கள் சிலம்பம், வாள்வீச்சு எனத் தமிழர் கலைகளைக் காற்றில் வரைந்துகொண்டிருக்க, வாயிலுக்குள் வரவேற்றது, `மதுரை மரம்'. மரம் முழுவதும் பழைய மதுரையின் பண்பாடுசார் அரிய  புகைப்படங்கள். 'மரத்திற்குள் அடங்கிவிடாததே, மதுரைப் புகைப்படங்கள். மதுரை, தொல்லியல், வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியொன்றும் தனியாகத் திறக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.   இளந்தளிர் கைநெளிவுகளில் கைவினைப் பொருள்கள், வண்ண ஓவியங்கள் மற்றும் அவர்களுக்கான விளையாட்டுகள் என முதல் தளத்தில் `குழந்தைகள் திருவிழா' ஆகப்பெறும் நிகழ்த்துக் கலைகளாய் வடிவெடுத்துச் சூடுபிடித்தது. தரைத்தள அரங்கு, தொல்லியல் திருவிழாவின் முக்கிய நிகழ்வுக்குத் தயாரானது. பழைமை அறிதல், அதை நோக்கிச் செல்லுதல் குறித்த அறிஞர்கள் உரை வீச்சுகள் ஏற்பாடாகின.

மைக்பிடித்துத் தொடங்கி வைத்த முத்துக்கிருஷ்ணன், ``நாங்க ஞாயிறு நடை போறோம்ன்னு செய்தியைச் சொல்வோம், அவ்வளவுதான். எப்படி 400 பேர் வர்றாங்கன்னு எங்களுக்கே தெரியலை" என்று சொல்லிக் கலகலப்பூட்டினார்.

சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ``முதன்முதலில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட இரண்டு நூல்களில் தமிழ்மொழி நூலும் ஒன்று. அத்தகைய பெருமை மிக்கது தமிழ்ச் செம்மொழி. வரலாற்றின் தோற்றமும் தொடர்ச்சியும் உண்மையாக ஆராயப்படுதல் அவசியம். புதியனவற்றிற்காகப் பழைய வரலாற்றைத் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்துகொண்டே இருக்க வேண்டும்" எனக் கூறி முடிக்க, அவரைத் தொடர்ந்து வந்த சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன், ``எல்லாவற்றின் வேர்களும் வரலாற்றில்தான் உள்ளன. ஊர்ப்பெயர் வரலாறுகளை அதிகம் எழுத வேண்டும். மரணமற்றது என்ற பொருள்படும் வகையில் புத்த பெயரில் அமைந்த நதிதான், `அமராவதி'. இதுபோலப் பல பெயர்கள் மாபெரும் சரித்திரச் சான்றுகளாய் இன்றும் விளங்குகின்றன" என்றார்.

தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ``தொல் நகரமான மதுரையில் மட்டுமே மொத்தம் 60 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.மு 600-களிலேயே தமிழர்களிடம் மொழிப் பயன்பாடுகள் இருந்ததற்கான பெருமளவுச் சான்றுகள் கிடைக்கின்றன. இந்தப் பசுமை நடைகள் மூலம் தொடர்ந்து மக்களிடம் தொல்லியல் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இனியும் இந்தப் பணியைத் தொடர்வோம்" என உறுதியளித்தார். தமிழறிஞர் பேராசிரியர் சுந்தர்காளி, ``தமிழகம் மற்றும் ஈழத்தில் இருந்துதான் பிராமி எழுத்துகள் வடக்குப் பக்கம் சென்றன. தமிழர்களிடம் எழுத்துப் பதிவு அதிகமில்லாததால் கடல் பயணம் உள்ளிட்ட பயணக் குறிப்புகள் அதிகம் பெற முடியவில்லை. ஆனாலும், தற்போதும் இனியும் தொல் ஆய்வில் கிடைப்பன யாவும் பாடப்புத்தகத்தின் வரலாற்றை நிறையவே திருத்தி அமைக்கப் போகின்றன" என்றார். 

மதுரையில் தன் ஓவியக் கனவுகளைச் சிறகடிக்க விட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார், டிராஸ்கி மருது. இளம் வயதில், தனக்கு மிகவும் நெருக்கமான தெப்பக்குளத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ``மைய மண்டபத்தினுடைய வரலாற்று ஓவியத்தை அழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து உடைந்தே போனேன்" என்று நினைவுகளில் கரைந்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் பிரஜ்னா ``மாணவர்களுக்கு வரலாற்றை யதார்த்தத்தோடு கற்றுத்தர வேண்டும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என நம் முன்னோர்கள் கலை அமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்" எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

`காலத்துக்கும் பசுமையாய் இருக்கும்' எனப் பசுமை நடையை ஊடகவியலாளர் ஆறு. மெய்யம்மை வாழ்த்த, நிகழ்வு அரங்கில் கூடியோர் எண்ணிக்கையில் பெண்கள் சரிசமமாய் நிறைந்திருந்ததாகப் பெருமிதம் கொண்டார், மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா. அவருக்குப் பதில்சொல்ல வந்த முத்துக்கிருஷ்ணன் "உணவு ஏற்பாடு செய்துவிடுவதால், சமையல் பிரச்னை இருக்காது என்ற நம்பிக்கையும்தான் நடைகளிலும், அமைப்பின் இதுபோன்ற நிகழ்வுகளிலும் பெண்களை இறுத்திவைத்திருக்கின்றது" என நகைச்சுவையோடு சமூகப் போக்கைச் சித்திரித்துச் சென்றார். தொடர்ந்து, மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ``இந்த அமைப்பு, அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது. வரலாறுகள் அத்தனையும் தமிழாக்கம் செய்யப்படவேண்டும். இதன் மூலம், மொழித் தடைகளின்றி மாணவர்களுக்கு அவை போய்ச் சேரும்." எனப் பாராட்டும் கோரிக்கையுமாய்ப் பேசினார். மேடையில் மீனாட்சிக் கோயில் இணை ஆணையர் நா.நடராஜனையும் தங்களோடு இணைத்துக் கொண்டு `என் மதுரை', `ஐ லவ் மதுரை' எனப் பொறிக்கப்பட்ட வெள்ளைநிற டீ-ஷர்ட்டுகளை அறிமுகம் செய்தனர்.

அடுத்து பேசிய ஆய்வாளர் பி.கே.பெரியசாமி ராஜா, ``வரலாற்றை ஒற்றைச் சார்போடு பார்க்கக் கூடாது. எல்லா மதங்களுக்கும், மதப்பாகுபாடு ஒதுக்கிய பகுத்தறிவுச் சிந்தனைக்கும் தன்னை முழுதாய்க் கொடுத்தது, தமிழ்மொழி. எனவேதான் அது தனித்தும் நிலைத்தும் நிற்கிறது. `பள்ளி' என்ற சொல் நம் மண்ணின் வரலாற்றோடு தொடர்புடையது. கற்றல் தலம் எனப் பொருள்படும் சமணச் சொல்லாட்சி. பின்னாளில், ஸ்கூல் என்ற ஆங்கிலப் பதத்துக்குமே `பள்ளிக்கூடம்'தானே நிலைத்துவிட்டது!" என்று சொல்லி முடிக்க, அத்தனை கண்களும் மேடை வரிசைப்பக்கம் திரும்பின. நிறைவாய் அந்தப் பெயரை அறிவித்தார், முத்துக்கிருஷ்ணன். 

அரங்கம் அதிரும் கரவொலிகளுக்கு மத்தியில் பேச எழுந்து வந்தார் கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். பசுமை நடையையும் முத்துக்கிருஷ்ணனையும் பாராட்டியவர், ``இவர்களைப் போன்ற செயற்பாட்டாளர்களின் முயற்சியால்தான் கீழடி குறித்த செய்திகள் எல்லா நிலை மக்களுக்கும் சென்றடைந்தன" என்றார். மேலும், ``தமிழகத்தில் 1947-ல் அரிக்கமேட்டிலும், 1965-ல் காவிரிப்பூம்பட்டினத்திலும், 2005-ல் ஆதிச்சநல்லூரிலும்தான் பெரியளவில் அகழாய்வு நடைபெற்றது. 2013-ல் பெங்களூருவில் ஒரு அகழாய்வு நடந்தது. வைகை நதிக்கரையில் ஆய்வு நடத்தக் கருதினோம். குறிப்பாக, புதைப்பிடங்களைத் தவிர்த்து, மக்கள் வாழிடப்பகுதிகளை எங்கள் ஆய்வுக் களமாகக் கொண்டோம். உதவி ஆய்வாளர்கள் இருவர், ஆய்வு மாணவர்கள் அறுவர் எனச் சிறிய குழுதான் எங்களிடம் இருந்தது. வைகை பாய்கின்ற 5 மாவட்டங்களிலும் ஆய்வு செய்தோம். வைகையின் இரு கரையிலும் 8 கி.மீ அளவுக்கு 293 இடங்களில் தொல்லியல் எச்சங்களைச் சேகரித்துச் சோதித்தோம். பெரும்பாலும், ஆய்வுக்குச் சாதகமாயின. அவற்றுள் நாங்கள் தேர்ந்தெடுத்து அகழாய்வு செய்ததுதான், கீழடி!" என்று அவர் சொல்லி முடிக்க, அரங்கம் முழுவதும் ஆரவாரம் எழுந்தது.

தொடர்ந்து, ``நாங்கள் ஆய்வுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தினோம். வருகின்ற எல்லோருக்கும் பொறுமையாய் விளக்கத் தொடங்கினோம். என்னவென்றே அறிந்திராத மக்களுக்குத் தொல்லியல் ஆய்வு குறித்தத் தெளிவு இதன்மூலம்தான் கிடைத்தது. அரசாங்கம் செய்ய வேண்டிய விழிப்புஉணர்வை இதுபோன்ற அமைப்புகள் செய்கின்றன" எனச் சொன்னவர், `கீழடிக் களத்தை போட்டோ எடுக்கக் கேட்டதற்கு நாங்கள் தாராளமாக அனுமதித்தோம். காரணம், என்னிடம் இருந்த ஆவணங்கள் போய்விட்டாலும் உங்களிடம் இருக்கும்' என்று சிரித்துக்கொண்டே அமர்நாத் சொல்ல, `அரசியல் அங்கதத்தில்' அரங்கமும் சிரிப்பலைகளோடு கைதட்டல்களுமாய் கலந்து நிறைந்தது. பேச்சின் இடையே கீழடியைக் குறிப்பிடுகையில் `என்னுடைய கீழடி' என்றார் அமர்நாத். இந்த உரிமை, அவருக்குரியதே! வாகனச் சாவிகள், கைப்பைகள், கைப்பேசிகளோடு வரலாற்றையும் ஏந்திக்கொண்டு கலைந்தனர். 

பல்லாயிரம் எட்டுகளை எடுத்து வைக்கட்டும், 'பசுமை நடை'!

அடுத்த கட்டுரைக்கு