Published:Updated:

இன்னும் நூறு வருடங்கள்தான்; மொத்தப் பூச்சியினமும் `குளோஸ்' - புது ஆய்வு #WeekInScience

கணக்குக் கற்றுக்கொள்ளும் தேனீக்களில் தொடங்கி, ஓட்டைக் கழற்றிப் போட்ட நண்டு வரை கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. இந்த வார #WeekInScience பகுதியில் அவற்றைப் பார்க்கவிருக்கிறோம்.

இன்னும் நூறு வருடங்கள்தான்; மொத்தப் பூச்சியினமும் `குளோஸ்' - புது ஆய்வு #WeekInScience
இன்னும் நூறு வருடங்கள்தான்; மொத்தப் பூச்சியினமும் `குளோஸ்' - புது ஆய்வு #WeekInScience

1. கூட்டல், கழித்தல் கணக்கு போடும் தேனீக்கள்!

பூவிலிருந்து தேன் எடுப்பது மட்டும்தான் தேனீக்களுக்குத் தெரியும் என்று பலரும் நினைத்திருப்போம். கூட்டல், கழித்தல் கணக்குகளையும் அவற்றால் செய்ய முடியும் என்று கண்டறிந்துள்ளது ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வுக் குழு. 

ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆராய்ச்சியாளர் ஸ்கார்லெட் ஆர்.ஹோவர்ட், ``மூளையின் அளவுக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்று இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இதுவரை சிம்பன்சி குரங்கு, ஆப்பிரிக்கச் சாம்பல் நிறக் கிளிகள், சிலந்திகளுக்கு மட்டுமே கூட்டல், கழித்தல் கணக்குகளைச் செய்ய முடியும் என்று கருதியிருந்தோம். தேனீக்களும் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதிகத் திறனுள்ள சிறிய, சுலபமான கம்ப்யூட்டர்களை உருவாக்குவதற்கு இந்த ஆய்வு பயன்படும்." என்றார்.

இந்த ஆய்வில், நீல நிறமென்றால் கூட்டல், மஞ்சள் நிறமென்றால் கழித்தல் என்று நிறத்தைக் கொண்டு கூட்டல், கழித்தல் கணக்குகள் தேனீக்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. `ஒய்' வடிவ அறைக்குள் முதலில் 14 தேனீக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அறையின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் போர்ட்டில் நீலம் அல்லது மஞ்சள் நிறம் வைக்கப்பட்டிருக்கும். வாசலில் உள்ள துளை வழியாகச் செல்லும் தேனீக்களின் முன்பாக இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றில் நீல நிறத்திலும், மற்றொன்றில் மஞ்சள் நிறத்திலும் பலகை வைக்கப்பட்டிருக்கும். வாசலில் தான் பார்த்த நிறத்தைப் புரிந்து கொண்டு, அந்த நிறப் பலகை உள்ள அறைக்குள் நுழைந்தால் தேனீக்களுக்கு ஒரு சொட்டு இனிப்பு சிரப் வழங்கப்படும். தவறாக நுழையும் தேனீக்கு கசப்பு மருந்து வழங்கப்படும். இந்த ஆய்வில் 63 முதல் 72 சதவிகிதம் சரியான தேர்வையே தேனீக்கள் செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  

2. கொசு கடிக்காமல் இருக்க புதிய மருந்து

இது ஏதோ புதிய வகை குட்நைட், ஆல் அவுட் விளம்பரம் என்று நினைத்துவிடாதீர்கள். கொசுக்களின் ரத்த தாகத்தை தணித்து, அவற்றுக்குக் கடிக்கும் நினைப்பையே மாற்றும் புதிய மருந்தை அமெரிக்காவின் ராக்கபெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

`ஏடிஸ் ஏஜெப்தி' வகை பெண் கொசுக்கள் மனிதர்களின் ரத்தச் சுவையில் அலாதி பிரியம் கொண்டவை. அவற்றின் முட்டைகள் வளர்வதற்கான புரோட்டீன் சத்தை மனிதர்களின் ரத்தமே கொடுப்பதால், எத்தனைதான் கொசு மருந்து தெளித்தாலும் தேடிவந்து ரத்தத்தை உறிஞ்சிவிடுகின்றன. ஒருமுறை ரத்தத்தைக் குடித்த பிறகு பல நாள்களுக்கு அவற்றுக்குப் பசிப்பதில்லை. அச்சமயத்தில் மட்டும் மனிதர்கள் மீது படுத்து உருண்டாலும் அக்கொசுக்கள் கடிப்பதில்லை. 

அவற்றுக்கு தேவைப்படும் புரோட்டீன் சத்தை மருந்து மூலமாக அளித்து, மனிதர்களைக் கடிக்கும் எண்ணத்தை மாற்றியுள்ளது ராக்கபெல்லர் பல்கலைக்கழகக் குழு. இதன் மூலம் மலேரியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் ரத்த தாகத்தையும் அடக்கி, நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். முதற்கட்ட ஆராய்ச்சியில் உள்ள இந்த மருந்து, இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3. செவ்வாய் கிரகத்தின் உயிரினங்கள் ஆராய்ச்சிக்குப் பறக்கும் ரோபோ

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா, அல்லது வாழ்ந்துள்ளதா என்பதைக் கண்டறிய 2020ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி மையம் ரோபோ ஒன்றை அனுப்புகிறது. 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இந்த ரோபோவுக்கு, புகழ்பெற்ற டி.என்.ஏ. விஞ்ஞானி ரோசலின்ட் ப்ராங்களினின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் பெயர்களை பரிசீலித்த பிறகு, ரோசலின்ட்டின் பெயரை இறுதி செய்துள்ளனர். ஓர் ஆய்வகத்துக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் செல்லும் இந்த ரோசலின்ட் ரோபோ, செவ்வாய் கிரகத்தில் ஏற்கெனவே ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்ற ரோபோக்களுடன் இணைந்து செயல்படும். 

4. 100 வருடத்தில் பூச்சிகள் அழிந்து போகும் அபாயம்

பூமியில் பூச்சி இனம் மிக வேகமாக அழிந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன வகைகள் இறப்பதைக் காட்டிலும், எட்டு மடங்கு அதிகமாகப் பூச்சிகள் அழிந்து வருவதாகவும், இதே வேகத்தில் அழிந்து கொண்டிருந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் பூச்சி என்கிற இனமே பூமியில் இருக்காது என்று எச்சரித்துள்ளனர். 

மொத்தப் பூச்சிகள் தொகையில், ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் மடிந்து வருவதாக சிட்னிப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூச்சிகள் அழிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம், வாழ்விடம் பறிபோவது, புதிய நோய்களும் பூச்சிகள் அழிவுக்குக் காரணமாக அடுக்கப்படுகிறது. 

கடந்த பத்து ஆண்டுகளில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை 53 சதவீதமும், தேனீக்களின் எண்ணிக்கை 46 சதவீதமும் குறைந்துள்ளது. தட்டான்பூச்சி என்று கிராமத்தில் அழைக்கப்படும் பூச்சியினம், நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு 1000 கொசு முட்டைகளை உண்ணும் திறன் படைத்தவை. நகரமயமாக்கலும், மாசுபடிந்த காற்றும் அவற்றை நகரத்திலிருந்து மட்டுமல்ல, கிராமத்திலிருந்தும் ஓட வைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பூச்சியினம் மட்டும் 68 சதவிகிதத்துக்குக் குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். டைனோசர் அழிந்து போனதுக்குப் பிறகு, நடைபெறும் மிகப்பெரிய இன அழிப்பாக பூச்சிகளின் அழிவு பார்க்கப்படுகிறது.

5. ஓட்டைக் கழற்றிப் போட்ட நண்டு

உலகிலேயே மிகப்பெரிய நண்டாக ஜப்பானின் சிலந்தி நண்டு அறியப்படுகிறது. இதன் மொத்த நீளம் 5.5 அடி. சட்டையை மாற்றுவது போல, தன் உடம்பில் ஒட்டியிருக்கும் ஓட்டை மொத்தமாக உதறிவிட்டு, நண்டு வெளியேறும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் சான் டியாகோ கடல் அருங்காட்சியகத்தில் உள்ள சிலந்தி நண்டு, தன் கண் அருகே உள்ள துளை வழியாக மொத்த உடலையும் ஓட்டை விட்டு வெளியே எடுத்து வெளியேறும் காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்புகள் அவ்வப்போது தங்களது தோலை உரித்துக் கழற்றிவிடும். அதுபோல, தன்னுடைய ஓட்டை கழற்றிவிட்டு, நண்டு மட்டும் வெளியேறியுள்ளது. 

நண்டின் ஓடுகள் உறுதியானவை. அவை வளர்ச்சியடையாது என்பதால், ஓட்டைக் கழற்றிவிட்டு புதிய உடம்புடன் சிலந்தி நண்டு உலாவுவதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய ஓடு இறந்து போன நண்டின் உடல் போல காட்சியளிக்க, புதிய ஆரஞ்சு நிற உடம்போடு உற்சாகமாக நீச்சலடிக்கிறது சிலந்தி நண்டு.

இந்த வாரப் புகைப்படம்:

நிலவின் மறுபக்கத்தோடு, பின்புறத்தில் பூமி சுழலும் இந்தப் புகைப்படத்தை, சீனாவின் லாங்ஜியாங் 2 செயற்கைக்கோள் எடுத்துள்ளது. தற்போது அறிவியல் உலகில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.