Published:Updated:

``பேரன்பு சாதனா என் மகளின் தோழியாகி விட்டாள்" நிஜ பாப்பாவின் அம்மா மரியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பேரன்பு சாதனா என் மகளின் தோழியாகி விட்டாள்" நிஜ பாப்பாவின் அம்மா மரியா!
``பேரன்பு சாதனா என் மகளின் தோழியாகி விட்டாள்" நிஜ பாப்பாவின் அம்மா மரியா!

``பேரன்பு சாதனா என் மகளின் தோழியாகி விட்டாள்" நிஜ பாப்பாவின் அம்மா மரியா!

இயற்கை பிரமாண்டமானது மட்டுமல்ல, பாகுபாடற்றதும்கூட. உலகிலுள்ள அனைத்தும், தம் இயல்போடும் தனித்தன்மையுடனும் இருப்பதே இயற்கை. மனிதர்கள் இந்த எல்லைக்கோட்டை மீறி, இயற்கைக்கான வரையறையை இவர்களாகவே கொடுக்க ஆரம்பித்ததுமே, பிரிவினையும் பாகுபாடும் பிறந்துவிட்டன. அதிலும், செரிப்ரல்‌ பால்ஸி' போன்ற பல்வேறு ‌வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், நம் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் ஆயிரமாயிரம்! இப்படியாக, பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை‌, தன் வாழ்வில் சந்திக்கும் மிக நுணுக்கமான சவால்களை இயக்குநர் ராம், `பேரன்பு' திரைப்படத்தில் உயிரோட்டமாகப் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் படத்தைப்‌ பார்த்தவர்கள், நாம் இயல்பாய்ச் செய்யும்‌ தினசரி நிகழ்வுகளைக்கூடச் செய்துகொள்வதற்கு 'பாப்பா‌' படும் பாட்டைப் ‌பார்த்து கண் கலங்கினார்கள். 

2019 - ல் வெள்ளித்திரையில் சாத்தியமான `பேரன்பு'கான விதை 2004 -ல் விதைக்கப்பட்டது. ஆம்! இயக்குநர் ராம் இப்படியான ஒரு பிரச்னையை விவாதிக்கும் படத்தை எடுப்பதற்கு முக்கியமான காரணிகளில் ஒருவர்தான் பிரியா. இதை, இயக்குநர் ராம் தந்த நேர்காணல்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். பிரியாவும் குறைபாடுகளுடன், போராடி வருபவர்தான். பேரன்பு படத்தில், பாப்பா கதாபாத்திரம் விடுதிப் பள்ளியில் அவருக்கு உணவு ஊட்டும் காட்சியில் பிரியாவும் முகம் காட்டியிருப்பார். பிரியாவின் அம்மா, மரியாவிடம் பேசினேன். 

``என் பொண்ணு பிரியா, 40 வருடங்களுக்கு முன், செரிப்ரல் பால்ஸியாவால் பாதிக்கப்பட்டவர். 2004- ஆம் ஆண்டில் இயக்குநர் ராமை, தற்செயலாகச் சந்திக்கும் சூழல் அமைந்தது. அப்போதே, `பிரியா போன்ற குழந்தைகளுக்காக ஒரு படம் நிச்சயம் பண்ணுவேன்' என்று சொல்லியிருந்தார். இந்தப் படம் உருவாவதற்கான விதையாக என் மகள் இருந்திருக்கிறாள் என்பது பெருமைதான். அந்தப் படம் சமுதாயத்தில் மாற்றம் வர உந்துதலாய் இருக்கும் என நம்புகிறேன்" என்றவாறே மகளைப் பார்த்து புன்னகைக்கிறார். 

``பிரியாவைப் பற்றிச் சொல்லுங்க மேடம்?" என்றோம். ``எங்கள்‌ தேவதை பிரியா பிறந்து, நான்கு மாதமாகியிருந்த போது, இயல்புக்கு மாறாக நெற்றியில் அதிகளவில் வியர்த்தது. மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். பிரியாவின் தந்தை கப்பலில் வேலை செய்துகொண்டிருந்ததால், உடனே வர முடியவில்லை. பல நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது. இறுதியில்தான், பிரியாவுக்கு `செரிப்ரல்‌ பால்ஸி' என்று தெரியவந்தது.

அன்றிலிருந்து இப்போதுவரை பிரியாவையொட்டியே என் வாழ்வும் உலகமும். என் மகன், தன்னைக் கவனிக்காமல் ப்ரியாவை மட்டும்தான் கவனித்தேன் என்று‌ இன்னும் கூட ஏக்கமாய், எப்போதும் கூறுவான். பிசியோதெரபி‌, பேச்சுப் பயிற்சி... என அனைத்துக்கும் ஒற்றை ஆளாய் நான்தான் அழைத்துச் செல்வேன். பிரியாவின் அம்மாவாக அன்று தொடங்கிய என் பயணம், சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று, முதுகலை, முனைவர் பட்டம் பெற்று இன்று பிரியாவைப் போன்ற பல குழந்தைகளுக்கு உதவிசெய்துகொண்டிருக்கிறேன்" என்றவர் முகத்தில் பெருமிதம்.

``பிரியாவின் ஒருநாள்‌ எப்படிச் செல்லும்?"

``எங்களுக்கு முன்பே பிரியா விழித்து விடுவாள். மிக விரைவாகத் தயாராகியும் விடுவாள். தினமும் காலை பைபிள் படிப்பது அவளின் ‌வழக்கம். பைபிளை எடுத்து, எந்தப் பகுதியைப் படிக்கவேண்டும் என்று என்னிடம் காட்டுவாள். நான் அதைப் படித்துக் காட்டுவேன். அவளுக்கு எழுதுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதுவாள். வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், அதனால் ஒரு நாளில் ஐந்தாறு முறையாவது வீட்டைக் கூட்டி விடுவாள். வாக்கிங், யோகா, ஓவியம், நடனம்‌ என்று நாள் முழுவதும் பிஸியாகவே இருப்பாள். வரும், பிப்ரவரி 21ம் தேதி பிரியாவுக்கு 43-வது பிறந்தநாள். அவளின் பள்ளிப் பருவ நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன், அத்தனை நண்பர்களையும் அழைத்து, பிரியா விருந்து அளித்து மகிழ்ந்தாள். ஆனால், இப்போது ஒருவர்கூட அவளிடம் தொடர்பில் இல்லை என்பது அவளுக்கு மட்டுமல்ல. எனக்குமே வருத்தமாக இருக்கிறது. சமீபத்தில், பிரியாவும் தன் நண்பர்களுக்கு போன் செய்துபார்த்தாள். ஆனால், அவர்கள் இணைப்பில் வரவேயில்லை. அவள் அன்று சோர்ந்து போயிருந்தாள். பிரியா போன்ற குழந்தைகளின் அன்பு இயற்கையைப்போன்று எல்லையற்றது; எதிர்பார்ப்பற்றது. இதைத்தான்‌ பிறரிடமும் தங்களுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமூகம் அவ்வாறு, திரும்பித் தர முன் வராதபோதுதான் தனிமைப்படுத்தப்படுகின்றனர்." என்று மரியா வருத்தத்துடன் கூறுகிறார். அந்தச் சூழலை மாற்ற, பிரியாவின் ஓவியங்களைக் காட்டச் சொன்னோம். முகம் நிறைய  புன்னகையுடன் பிரியாவே, தான் வரைந்த ஓவியங்களையும், பெற்ற சான்றிதழ்களையும் காட்டினார். இவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கைக்குப் பின்னும் இத்தனை சாதனைகளா என்று வியக்க வைத்தது. சமீபத்தில் பாட்னாவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் பிரியா தங்கம் வென்றுள்ளார். பிரியாவின் `அழகு மலராட' எனும் பாடலுக்கான நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். பல சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்பாஸ்டிக் சொஸைட்டியின் முதல் மாணவியும் பிரியாதான். தேவதை‌ ப்ரியா கேன்சர் சர்வைவரும் கூட.

`பேரன்பு' படத்தில், குடும்பத்தைப் பிரிந்த தாய் மீண்டும் வரும்போது, கணவனிடம் மகளைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லையே என்று கதாநாயகன் புலம்புவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இப்படியான சூழல் நிஜத்தில் நடக்குமா?  

``ஒரு சிறப்புக் குழந்தைக்கு, இந்தச் சமூகத்தில் கிடைக்கும் முக்கியத்துவம்கூட அந்தக் குழந்தையின் தாயின் உணர்ச்சிகளுக்குக் கிடைப்பதில்லை. தன் குழந்தை, சிறப்புக் குழந்தை என்று முத்திரையிடப்பட்டவுடன் அந்தத் தாயின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தக் குழந்தையை நாள் முழுவதும் உடனிருந்து கவனிப்பதில் தொடங்கி, மருத்துவமனை மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது எனப் பல பொறுப்புகள் சேர்ந்துவிடுகின்றன. கணவன் அருகிலிருந்து குடும்பத்தினரின் அரவணைப்பும் இருந்தால் அந்தத் தாய் மன அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு. அப்படி இல்லாத பட்சத்தில் ஏற்படும் மிகை மன அழுத்தம் மற்றும் உறவினர்களின் பழி பேச்சு, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் விரக்தியை ஏற்படுத்தி விடும். இதுவே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கின்றது. இப்படியான நிகழ்வுகளும் நடப்பதைத்தான் படத்தில் காண்பித்திருப்பதாகவே கருதுகிறேன். எனக்குக் கிடைத்ததுபோல, அருகிருந்து உதவிய கணவர் மற்றும் உறவினர்கள் போல, அந்தத் தாய்க்கும் கிடைத்திருந்தாள். குழந்தையை விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டாள்"  

``பதின் பருவ மாற்றத்தைப் பிரியா எவ்வாறு எதிர்கொண்டார்?"

``சிந்தனையாளர் ஃப்ராய்டின் தத்துவக் கூற்றின்படி `பசி, கோபம், காமம் அனைவருக்கும் பொதுவானது'. மனவெழுச்சி மற்றும் உடல் சார்ந்த உணர்வுகளுக்குச் சிறப்புக் குழந்தைகளும் விதி விலக்கல்ல. அவர்களும் எல்லோரையும்போல மனவெழுச்சிகளுக்கு ஆட்படுபவர்கள்தான். பிரியாவுக்கு அதனை எதிர்கொள்ள முறையான வழிகாட்டலை அளித்தேன். மற்ற குழந்தைகளுக்கும் இது கிட்டும்பட்சத்தில் அவர்களும் சாதனை இளவரசியாகி விடுவார்கள். நான் பார்த்த வரையில், பார்வைக் குறைபாடு உள்ளவர்களையும், உடலளவில் சவால் உள்ளவர்களையும் மணம் செய்ய முன் வருபவர்கள் மத்தியில், செரிபரல் பால்ஸி உள்ளிட்ட வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை மணம் செய்ய முன்வருவதில்லை. எங்களுக்குப் பின், எங்கள் குழந்தையின் வாழ்வு கேள்விக்குறியாகி இருப்பதை எங்குச் சென்று சொல்வது?" 

`` `பேரன்பு' திரைப்படம் எவ்விதமான அனுபவத்தைத் தந்தது?"

``இந்தப் படத்தில் பாப்பாவாக நடித்திருக்கும் சாதனாவின் நடிப்பு அபாரமாக இருந்தது. மிக விரைவாகவே பிரியாவின் நெருங்கிய தோழியாகிவிட்டாள் சாதனா. எப்படி கையை வைத்துக்கொள்ள வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் பிரியாவும் நானும் கற்றுக் கொடுத்தோம். சாதனாவும் அர்ப்பணிப்போடு எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட படங்கள் எடுப்பதன் மூலமே, சமூகத்தில் இந்தக் குழந்தைகளின் சவால்களை அனைவருக்கும் உணர்த்த முடியும்." என்கிறார் நிறைவாக.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு