Published:Updated:

ஹாய் மதன் கேள்வி -பதில்

ஹாய் மதன் கேள்வி -பதில்

பிரீமியம் ஸ்டோரி

 எஸ்.ஏ.கேசவன், கோவில்பட்டி.

##~##

அதிர்ஷ்ட தேவதைக்கு எங்கேனும் கோயில் உண்டா?

இல்லை! ஆமா, அவள் ஒரு இடத்தில் தங்குவது இல்லையாமே?!

சு.சங்கர், போத்தனூர்.

எத்தனையோ 'மை’ என முடியும் வார்த்தைகள் தமிழில் உள்ளன. அதில் எது உமக்குப் பிடித்த 'மை’, கடைப்பிடிக்கும் 'மை’, மதிக்கும் 'மை’... சொல்லுங்க மதன்ஜி?

'வார்த்தை’ என்ன பெரிய?! அந்த ஓர் எழுத்தே எனக்குப் பிடித்தமானதுதான். அது இல்லாவிட்டால், நான் கார்ட்டூனும் போட முடியாது. உங்களுக்குப் பதிலும் எழுத முடியாது. விகடனில் எதையும் அச்சிடவும் முடியாது!

வண்ணை கணேசன், சென்னை-110.

வாழ்க்கையில் ஒருவர் முதன்முதலாகச் சொல்லும் பொய் எது?

அழுகைதான்! குழந்தை அழுகிறது. அம்மா ஓடி வந்து பால் தருகிறாள். குழந்தைக்குப் பசி வந்துவிட்டது என்று எப்போதும் அர்த்தம் இல்லை. அம்மாவைப் பார்ப்பதற்கான பொய் அழுகையாகக்கூட இருக்கலாம்!

ஹாய் மதன் கேள்வி -பதில்

வாழ்க்கையில் சட்டென்று ஆசையை அடக்கத் தெரிந்தவர்கள் ஆண்களா, பெண்களா?

ஆசையை அடக்குவது என்பது வளர்த்துக்கொள்ள முடிந்த ஒரு பண்பு - குணநலன். அதற்கு ஆண்பால் - பெண்பால் கிடையாது. ஆனால், சில விஷயங்களில் ஒருவரைவிட ஒருவர் 'வீக்’காக இருப்பது உண்டு. காமம் என்று எடுத்துக்கொண்டால் - உடற்கூறு (பயாலஜி)படி - பெண்ணால் ஆசையை அடக்க முடியும். அதுவே, இன்று புடவை வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு 'உடம்பு சரியா இல்லே... நாளைக்கு வாங்கித் தர்றேனே..!’ என்று சொல்லிப்பாருங்கள். அவளால் தாங்க முடியாது!

அ.குணசேகரன், புவனகிரி.

தோல்விகளை எதிர்கொள்வது எப்படி?

நீங்களே பதில் சொல்லிவிட்டீர்களே... எதிர்கொள்வதன் மூலம்தான்!

ரேவதிப்ரியன், ஈரோடு.

இந்தப் புத்தாண்டில் - நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது?

இது வரை கேள்விகளை எல்லாம் மனசுக்குள்ளேயே முல்லைப் பெரியாறு அணை நீர் மாதிரி தேக்கிவைத்துக்கொண்டு, எதையுமே எழுதி அனுப்பாமல், என் பதில்களை மட்டும் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்களே, இந்தப் புத்தாண்டில் இருந்தாவது சற்று மெனக்கெட்டு கேள்விகளை எழுதி அனுப்ப என்  இனிய வாழ்த்துக்கள்!

ராஜமழை, சின்னமனூர்.

'ஹாய் மதன்’ பகுதியில் ஒரு வித்தியாசமான போட்டி வைக்கலாமே. அதாவது, ஏதேனும் ஒரு வாசகர் கேட்கும் கேள்விக்கு, பதிலை மட்டும் பிரசுரம் செய்துவிட்டு - அந்த உங்களின் பதில், அந்த வாசகர் கேட்ட கேள்வியாக மட்டும் இன்றி, பல கேள்விகள் எழுப்பும்படி இருந்து... பின் அந்த வாசகர் கேட்ட கேள்வி எது என்று பரிசு அளிக்கலாமே?

எடுத்த எடுப்பில் பார்த்தால்... ஐடியா நல்லாத்தான் இருக்கு! போகப் போக வாசகர்கள் கடுப்பாகிவிடுவார்கள். (உதாரணமாக, இந்தப் பதில் மட்டும் வெளியிட்டு, உங்கள் கேள்வியைக் கண்டுபிடிக்கச் சொன்னால் முடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான்!)

கணேஷ், பொன்னியம்மன்மேடு.

கேள்விக் குறி எப்போது முற்றுப்புள்ளி ஆகிறது?

தலை சாய்ந்த பிறகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு