Published:Updated:

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!
பிரீமியம் ஸ்டோரி
News
தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

மாடித்தோட்டம்

“என் பொண்ணு சின்ன வயசுல இருக்குறப்போ சூப்பர் மார்க்கெட்ல மிஷின்லதான் காய்கறிகளைத் தயார் பண்ணுவாங்களானு கேட்பா. அதுதான் நான் வீட்டுத்தோட்டம் அமைச்சதுக்கு முக்கியக் காரணம். விவசாய நாட்டுல இப்படியொரு நிலைமையானு யோசிச்சு... பிள்ளைகளுக்குச் சொல்லித் தரணுங்கிறதுக்காகவே இந்தத்தோட்டத்தை உருவாக்கினேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், சென்னை, கோவிலம்பாக்கம் அருகே உள்ள சுண்ணாம்புகொளத்தூரைச் சேர்ந்த அகிலா குணாளன்.

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

“என்னோட சொந்த ஊர், விருதுநகர். என் அப்பா காலத்திலேயே சென்னையில் குடியேறிட்டோம். அதனால, எனக்கு விவசாய அனுபவமெல்லாம் கிடையாது. ஆனாலும், காய்கறிகள், செடிகள் பற்றி ஓரளவுக்குத் தெரியும். 2015-ஆம் வருஷம், தோட்டம் போடலாம்னு முடிவு செஞ்சு நாட்டு விதைகளைத் தேட ஆரம்பிச்சேன். என் அண்ணன், அண்ணி மூலமா, நாட்டு விதைகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு அதை வாங்க மதுரை, கோயம்புத்தூர்னு போயிட்டு வந்தேன். அப்படிப் போனப்போதான், இயற்கை முறையில விளைவிக்கிறது பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் வீட்டுத்தோட்டத்தை இயற்கை முறையில பராமரிக்க ஆரம்பிச்சேன்” என்று சொன்ன அகிலா, தோட்டத்தில் உள்ள செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

“வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ஒன்றரை கிரவுண்டு இடத்தில்தான் தோட்டம் போட்டிருக்கேன். தொழுவுரம், மட்கின இலைதழைகள் எல்லாத்தையும் போட்டு ஜீவாமிர்தத்தைத் தெளிச்சுவிட்டேன். அதுக்கப்புறம் விதைகளை விதைச்சேன். 

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

மிளகாய், தக்காளி, வெண்டை, அவரை, பீர்க்கன், சுரை, திப்பிலி, சர்க்கரைக்கொல்லி, தூதுவளை, பூனைமீசை, ஆவாரம்பூச் செடி, நன்னாரி, வெட்டிவேர், நொச்சி, நரிமிரட்டினு காய்கறிகள், மூலிகைகள்னு சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். வெண்டைக்காய்ல மட்டும் 20 வகைகள் இருக்கு. அதேபோல 15 வகையான தக்காளி ரகங்கள் இருக்கு. ஆறு பிரண்டை ரகங்கள் இங்க இருக்கு.

தோட்டம் எப்பவுமே குப்பையாத்தான் இருக்கும். இலை, சருகுகளை எப்பவுமே கூட்டி சுத்தப்படுத்துறது இல்லை. தோட்டத்தைச் சுத்தி சப்போட்டா, பப்பாளி, மா, சீத்தா, வாழைனு பழ மரங்களை வெச்சுருக்கேன். மூன்று ரகங்கள்ல மாவும் எட்டு ரகங்கள்ல வாழையும் இங்க இருக்கு. மேட்டுப்பாத்தியில கரும்புச்சக்கை, காய்ஞ்ச இலைச் சருகுகள், தொழுவுரம் எல்லாத்தையும் போட்டு ஜீவாமிர்தம் தெளிச்சு, 15 நாள்கள் மட்க வெச்சு காய்கறிப் பயிர்களைக் கலந்து விதைப்பேன். 

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

நடுவுல சாமந்திப் பூச்செடிகளையும் நடவு செய்வேன். அதனால, இயற்கை முறையில பூச்சிகள் கட்டுப்படுது. தேவைப்பட்டா வேப்பெண்ணெய் கரைசல், மஞ்சள்+பூண்டுக் கரைசல் தெளிப்பேன். களைச்செடிகளைப் பிடுங்கி மரங்களோட அடியில மூடாக்காகப் போட்டுடுவேன். குழந்தைகளுக்கு வர்ற சின்னச்சின்ன வியாதிகளுக்கு, இங்க இருக்குற மூலிகைகளை வெச்சே மருத்துவம் பார்த்துக்குவேன்” என்ற அகிலா நிறைவாக,

“நான் வேலைக்குப் போய்ட்டுருக்குறதால, தினமும் காலையில மட்டும்தான் தோட்ட வேலைகளைப் பார்ப்பேன். என் மாமியார், கணவர் எல்லோரும் அவங்கவங்களோட ஓய்வு நேரத்துல தோட்டத்துல பராமரிப்பு வேலைகளைச் செஞ்சுடுவாங்க. குடும்பமே சேர்ந்து பராமரிக்கிறதால, நல்லபடியா பார்த்துக்க முடியுது. பயிர்களுக்குக் காய்ச்சலும், பாய்ச்சலுமாத்தான் தண்ணீர் கொடுப்போம்.

தினமும் காலையில தோட்டத்தைச் சுத்தி வந்து, அதுல இருக்குற காய்களைப் பறிச்சு சமையல் செய்வேன். தினமும் ஏதாவது காயும், கீரையும் கட்டாயம் தோட்டத்துல கிடைக்கும். வெங்காயம் மாதிரியான காய்களைத்தான் வெளியில வாங்குவேன். எல்லாக் காயையும் உற்பத்தி செய்யுற அளவுக்கு இங்க இடவசதி இல்லை. விருதுநகர்ல இருக்குற விவசாய நிலத்துல இப்போதான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கேன். கூடிய சீக்கிரம் இயற்கை விவசாயியா மாறிடுவேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அகிலா குணாளன், செல்போன்: 96770 21161.

துரை.நாகராஜன் - படங்கள்: பெ.ராக்கேஷ்

தினமும் ஒரு காய்... ஒரு கீரை!

மஞ்சள்+ பூண்டுக் கரைசல்!

2
ஸ்பூன் மஞ்சளை அரைலிட்டர் தண்ணீரில் கலந்து பாதியாகச் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கி 10 பூண்டுகளைத் தட்டி போட வேண்டும். கரைசல் ஆறிய பிறகு, அதை வடிகட்டி 5 லிட்டர் தண்ணீர் சேர்த்துப் பயிர்களில் தெளிக்கலாம். இது பூச்சி மற்றும் வைரஸ் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்துகிறது.