Published:Updated:

``தற்கொலைக்கு துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா?!’’ - ரம்யவர்ஷினி வீழ்வேனென நினைத்தாயோ - 3

``தற்கொலைக்கு துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா?!’’  - ரம்யவர்ஷினி  வீழ்வேனென நினைத்தாயோ - 3
``தற்கொலைக்கு துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா?!’’ - ரம்யவர்ஷினி வீழ்வேனென நினைத்தாயோ - 3

குடிச்சுட்டேன், என்ன ஆசிட் தெரியுமா? சல்ஃப்யூரிக் ஆசிட். முதல் மார்க் மட்டும்தான் உலகம், வாழ்க்கையேனு நினைச்சு ஒரு நிமிஷ நேரத்துல செஞ்ச விஷயம். வாழ்க்கையே புரட்டிப் போட்ருச்சு..

முந்தைய பகுதிகள்

சமூக வலைதளங்களில் இந்த வருடம் அதிகம் விவாதிக்கப்பட்ட சப்ஜெக்ட்ஸ்... டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ். அர்த்தம் புரிந்தும் புரியாமலும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்த வார்த்தைகளைக் கடந்து போகாமல் யாரும் இருந்திருக்க முடியாது. சென்சேஷனலாக ஒரு விஷயம் நிகழும்போது, பலரும் திடீரென மனநல மருத்துவர்களாக மாறிவிடும் இந்த நேரத்தில், ரம்யவர்ஷினி கண்ணதாசன் தனித்துத் தெரிந்தார். பதின்வயது மாணவர்கள் இந்தக் கல்விமுறையில் சந்திக்கும் பல தடைகளை, மாணவர்களிடமே பேசிப் பேசிப் படிக்கிறார் ரம்யா. கலங்கும் மாணவர்களின் கைகளைப் பற்றிக்கொள்கிறார், அன்புடனும் ஆலோசனைகளுடனும்.

`சென்ட்டம் எடுக்காமல் போய்விட்டால் உயிர்வாழ்வதே பாவம்!' என்று மாணவர்களை குற்ற உணர்வில் தள்ளிவிடும் பள்ளியில் படித்திருக்கிறார் ரம்யா. ``200-க்கு 197 மார்க் எடுத்தாலும் நட்ட நடு க்ளாஸ்ல பொண்ணுனும் பார்க்காம அடிவிழும். சென்ட்டம் போகுதாம் அவங்களுக்கு. 11-ம் வகுப்புல 1,200-க்கு 1,111 மார்க் வாங்கினேன். அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போனா செமயா அடிவிழும்னு பயம். அது டெவலப்பாகி ஸ்ட்ரெஸ். அதுவும் டெவலப்பாகி டிப்ரெஷன். அப்போ `கடல்பூக்கள்'னு ஒரு படத்துல ஹீரோயின் கண்ணாடி வளையலை உடைச்சுச் சாப்பிடப் போவா. ஹீரோ வழக்கம்போல காப்பாத்திடுவாரு. நமக்கு ஹீரோலாம் இல்லையே! கண்ணாடிய சுக்கல் சுக்கலா உடைச்சுக் குடிச்சுட்டேன். சாவே வரலைங்க. அம்மா வந்தா வெச்சு செஞ்சிருவாங்கன்னு பயந்து, ஆசிட்டையும் குடிச்சுட்டேன். என்ன ஆசிட் தெரியுமா? சல்ஃப்யூரிக் ஆசிட்.

முதல் மார்க் மட்டும்தான் உலகம், வாழ்க்கையேனு நினைச்சு ஒரு நிமிஷ நேரத்துல செஞ்ச விஷயம், வாழ்க்கையே புரட்டிப்போட்ருச்சு. (40-மினிமல் இன்வேசிவ் சர்ஜரி, 4-மேஜர் ஓப்பன் சர்ஜரி) இதெல்லாம் கடந்து இன்னைக்கு பதின்வயதில் தற்கொலைத் தடுப்பு கவுன்சலிங்/சைக்கோ தெரபிஸ்ட்டா இருக்கேன்” என்று சொல்லி முடிப்பதற்குள், இருமல் வந்து அத்தனை சிரமப்படும் அவர், புன்னகைக்க மட்டும் மறக்கவில்லை. ``தற்கொலையே செய்ய தைரியம் இருந்த எனக்கு, இப்படி வம்படியா வாழப் போராட முடியாதா?” என்கிறார்.

எவ்வளவு வலி இருந்தாலும், விடாமுயற்சியோடு தன்னைப் பாதுகாக்கும் பெற்றோரிடமும் கணவரிடமும் தனக்கான ஆற்றலைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார் ரம்யா.

``அடிக்கடி அறுவைசிகிச்சைக்குத் தயாராகவேண்டிய நிலை, வலி இவற்றிலிருந்து நம்பிக்கையை மட்டும் எப்படி வடித்தெடுக்கிறீர்கள்?'' எனக் கேட்டால், மறுபடியும் அதே புன்னகை.

``வேறென்ன செய்ய முடியும்? வெண்ட்டிலேட்டர்ல இருக்கணும். தண்ணிகூட குடிக்கக் கூடாதுன்னு நிறைய கண்டிஷன்ஸ் இருக்கும். ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில அனுமதிக்கப்படுறப்பவும் இதுதான் நிலைமை. எங்கேயாவது சாப்பாடு வாசம் வந்தா, பக்கத்துல இருக்கிறவங்களை அடிக்கத் தோணும். சாப்பிட அவ்வளவு பிடிக்கும். ஆனா முடியாது. தண்ணி குடிச்சே ஆகணும்னு அடம்பிடிப்பேன். எல்லாத்துக்கும் கோபம் வரும். என்னைச் சுத்திப் பெரிய போராட்டமாதான் இருக்கும்” என்று சொன்ன ரம்யாவை சில வார்த்தைகள் மாற்றியிருக்கின்றன. 

``இப்பவும் எல்லாருக்கும் உன்னைப் பிடிக்குது. `அவ வலி. அவ கத்துறா. நமக்கு வந்தா ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாதில்லை'னு பொறுத்துக்குறாங்க. எப்டியும் ஒரு நாள் போயிடுவ. அப்ப, `பாவம், என்ன கஷ்டப்பட்டாளோ... கத்திட்டே இருப்பா. ஒருவழியா அவ வலி குறைய போயிட்டா'னு பெருமூச்சு விடுவாங்க. அதே அமைதியான ஸ்மைலோட இரு. அவங்கள அடிச்சாவோ திட்னாவோ வலி குறையாது. இரிட்டேட் ஆவ. கொஞ்சம் சிரியேன். யு வில் ஃபீல் பெட்டர்.  வேற யோசிக்கலாம். அவங்களும் பக்கத்துல வருவாங்க. நீ போனாகூட எஞ்சாமி இருக்க வரை அப்படி இருந்துச்சுன்னு கொண்டாடுவாங்க. `ப்பா.. போயிட்டா'னு சொல்றதுக்கும்... `போயிட்டாளே'னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு மாசம் டிரை பண்ணு. பிடிக்கலைன்னா என்னை ஃபர்ஸ்ட் அடிச்சு செகண்ட் இன்னிங்ஸை ஸ்டார்ட் பண்ணு” என்று வார்த்தைகளில் தேற்றியிருக்கிறார் பிசியோரெபிஸ்ட் ரஜினி.

ரம்யாவின் சிகிச்சைக்காக முயற்சிசெய்தாலும், சிகிச்சை செலவுகளுக்காக மெனக்கெட்டாலும், ``டிரீட்மென்ட்டை நிறுத்துங்க. உங்களுக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி” என சைகை செய்த ரம்யா, இப்போது பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஆதர்சம். எம்.எஸ்ஸி., ஐ.டி முடித்தாலும் குழந்தைகளுக்காகப் பயணிப்பதற்கு முதுகலை கவுன்சலிங் சைக்கோதெரப்பி படித்திருக்கிறார். மேலும், அதில் மூன்று சான்றிதழ் படிப்புகளும், நான்கைந்து மணி நேரத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் டியூஷனில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களிடம், ஸ்கேலைத் தூக்கிக்கொண்டு போய் திட்டி, மிரட்டி, கொஞ்சி வழிக்குக் கொண்டுவருகிறார் ரம்யா. 

`வந்தா ராஜாவாதான் வருவேன்’ என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸைப் போட்டுவிட்டு, ஹைதராபாத்துக்கு அடுத்த அறுவைசிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார் ரம்யா!

அடுத்த கட்டுரைக்கு