Published:Updated:

``காதலுக்கு சாதி, மதம் மட்டுமல்ல... பாலினமும் தடை இல்லை!" LGBT ஆதரவாளர்கள் #ValentinesDay

"இந்தக் காதலர் தினம் பேரன்பு கொண்ட எல்லோருக்குமானது."

``காதலுக்கு சாதி, மதம் மட்டுமல்ல... பாலினமும் தடை இல்லை!" LGBT ஆதரவாளர்கள் #ValentinesDay
``காதலுக்கு சாதி, மதம் மட்டுமல்ல... பாலினமும் தடை இல்லை!" LGBT ஆதரவாளர்கள் #ValentinesDay

ஆண் - பெண் இடையிலான காதல் என்னவெல்லாம் செய்ய வைக்கும்?

கல்லூரி வாசல்களில் கால்கடுக்கக் காத்திருக்க வைக்கும்; கிறுக்கல்களை கவிதையாக்கும்; தனிமையில் சிரிக்க வைக்கும்; செல்ஃபிகளில் நாள்களைக் கரையச்செய்திடும் பேருந்து நிலையங்களே `கதி' எனக் கிடத்திப்போடும்; ராஜாவையும் ரஹ்மானையும் பின்னிரவுகளில் `டூயட்' பாட அழைக்கும்; அந்தக் கடைசி `மிஸ் யூ'வில் ஆனந்தியையும் திவ்யாவையும் யுவன் இசையில் தலையை வருடிக் கொடுக்க துணைக்கு அனுப்பும். இப்படி எத்தனை மாற்றங்களைத்தான் விதைக்கிறது அந்த ஒற்றைச்சொல்... காதல்! 

வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையைச் சாத்தியப்படுத்தும் காதல், ஆண், பெண் இருவருக்குள் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றா? நிச்சயமாய் இல்லை. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கொருவர் கொள்வதும், திருநங்கை மீதும், திருநம்பி மீதும் கொள்வதும் காதல்தான். மனித உணர்வுகள் ரீதியாகவும் சரி, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதைக் குற்றமாக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ கடந்த ஆண்டு ரத்து செய்து சட்டரீதியாகவும் சரி, காதலுக்கு பாலின பேதமும் இல்லை என்பது இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும்.

`இனி நீதான்டா எனக்கு!' என இறுகப் பற்றிய கைவிரல்களின் மென்சூடு உணர்த்தும் நெருக்கமும், முதல் முத்தம் தரும் மின்னலும், காதலும் காமமும் இவர்களுக்கும் இயல்பானதுதான் எனப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு LGBT சமூகத்தினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிலரிடம் பேசினோம்.

மாலினி ஜீவரத்தினம் - ஆவண பட இயக்குநர் மற்றும் LGBT ஆர்வலர்.

``377 சட்டம் ரத்து செய்த பிறகு வரும் முதல் காதலர் தினம் இது. பொதுவாக, காதலர் தினத்தில் பசங்களும் பொண்ணுங்களும் காபி ஷாப்லேயும் பீச்லேயும் புரபோஸ் பண்ணிக்கிறதைப் பார்க்க முடியும். அதுபோலவே இனி, சமபாலினத்தைச் சேர்ந்தவங்களும், திருநங்கைகளும் திருநம்பிகளும்கூட பொது இடங்களில் இயல்பாகச் சந்தித்துக்கொண்டு, அன்பு பரிமாறிக்கொள்ளும் சூழல் வரணும். இது இயற்கை தீர்மானித்தது. சில மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்கள் தோற்றுப்போனதைத்தான் 377-பிரிவு ரத்து செய்யப்பட்டது நமக்கு உணர்த்துகிறது. இந்தக் காதலர் தினம் பேரன்பு கொண்ட எல்லோருக்குமானது." 

`உங்களுடைய காதலைப் பற்றி...?'

``பார்த்தவுடனே காதல் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. எனக்கு, சமபால் ஈர்ப்பு இருக்கு. ஒரு மாற்றுப் பாலினத்தவர்ன்னா பார்க்கிற எல்லோர்கிட்டையும் காதல்ல விழுந்திருவாங்கனு சமூகத்துல ஒரு பிம்பம் இருக்கு. ஆனா, என் காதலைத் தேர்ந்தெடுக்க எட்டு மாசம் எடுத்துக்கிட்டேன். மரியா! - இவதான் என் காதல். பேரன்பின் பெருங்காதலி! அவளைப் புரிஞ்சிக்க எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. தொடர்ந்து நெறைய பயணிச்சோம். ஒருநாள் கடைத்தெருவுக்குப் போறப்போ பூச்செடி ஒண்ணு வாங்க ஆசைப்பட்டு மரியாகிட்ட கேட்டேன். அவளும் சரின்னு சொல்லிட்டா. அந்தச் செடியில ஓர் ஓரத்துல கருகிப் போயிருந்ததுனால அதை ஒதுக்கிட்டு வேற செடியைத் தேடுனேன். உடனே அந்தச் செடியை என் கையில இருந்து பறிச்சுக்கிட்டு, ``ஒரு செடியில பாராபட்சம் பார்க்கக் கூடாது மாலினி"னு சொன்னா. அந்த இடத்துல என்னோட மொத்தப் போராளித்தனத்தையும் உடைச்சிட்டா என் மீசைக்காரி. ஒரு செடி எப்படி இருக்கோ, அதை அப்படியே ஏத்துக்குற மனநிலை அவளுக்கு இருக்குன்னா... என்னையும் அவளால புரிஞ்சுக்க முடியும் இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் கேட்கும் மாலினி அன்றிரவே மரியாவிடம் `நமக்கான வாழ்க்கையைத் தொடங்கலாம் மரியா!' எனக் கூறி காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். 

`பொதுச்சமூகத்திடம் நீங்கள் சொல்ல நினைப்பது?'

``உங்களுக்கு ஒரு திருநங்கையைப் பிடிச்சிருக்கா? அதை காதலர் தினத்தில், ஆயிரம் பேர் கொண்டாடிட்டு இருக்கிற இடத்துல கம்பீரமா, வெளிப்படையா உங்க காதலை வெளிப்படுத்துங்க. அதே மாதிரி ரிங் மாத்திக்கோங்க. செல்ஃபி எடுத்துக்கோங்க. காதல் எல்லோருக்குமானது. ஒருத்தர் வாழ்க்கையை அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ விடுங்க. உங்களோட பேச்சாலேயும் செயலாலேயும் எங்களை ஒடுக்காதீங்க. நாங்க தற்கொலை மனநிலைக்குத் தள்ளப்படுகிறதுக்குக் காரணமும் இரக்கமே இல்லாத இந்தப் பொதுச் சமூகத்தில் உள்ள பலரும்தான். நீங்களே முன்வந்து, எங்களோட டைரியில், உங்களைக் கொடுமைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் எழுதிட்டுப் போறீங்க. இதை வாசிச்சு உங்க மனசுல சின்ன மாற்றம் ஏற்பட்டால்கூட எனக்குச் சந்தோசம்தான்." என்கிறார் மாலினி.

நமிதா -  LGBT ஆர்வலர், கல்லூரி மாணவி

``நான் பலர் பால் ஈர்ப்பு கொண்ட ஒரு பொண்ணுதான். காதலோ சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்தான்னு கட்டுப்பாட்டுக்குள்ள வரும்போது, ஒரு ஆணாதிக்க முறைக்குள் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கு. காதலும் யாருக்குன்னாலும் எப்போ வேணாலும் எப்படினாலும் வரலாம். இவருக்கு, இப்படித்தான் வரணும் என்று தடை போட முடியாது"

`திருமணம், சடங்குகளைப் பற்றிய உங்கள் கருத்து?'

``சாதிக்கும், சமூகத்திற்கும் கட்டுப்பட்டுத்தான் கல்யாணம் நடக்குது. நம்ம எல்லாருடைய காதலிலும் நெறைய அரசியல் இருக்கு. அந்த அரசியலை நம்ம எப்படி எடுத்துட்டுப் போறோம் என்பதுதான் முக்கியம். என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம் சமூகத்திற்காகச் செய்யுற விஷயம். பழங்காலத்துல கல்யாணம் மாதிரியான சடங்குகளே கிடையாது. ஒரு பொண்ணு யாரோட குழந்தை பெத்துக்கணும்ன்னு அந்தப் பொண்ணுதான் முடிவு பண்ணுவா. இந்த மாதிரியான எல்லாச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் அப்பாற்பட்டதுதான் காதல்! "

`பொதுச் சமூகத்தைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறீர்களா?'

``நான் அப்படி இல்லனா என்னைத் தூக்கிச் சாப்பிட்டுருவாங்க. சின்ன வயசிலிருந்தே என்னைத் தனித்தன்மையோட காட்டிக்க நெறைய முயற்சி பண்ணுவேன். அதனால, எனக்கு இப்படி இருக்கிறது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. என்னால என்னைப் பத்தி வெளிய சொல்ல முடியுது. அதுக்கான சூழலும் இப்ப இருக்கு. ஆனா, பலருக்கு அது வாய்ப்பதே இல்ல. மனசுலயே வெச்சிட்டு தேக்கிப்பாங்க. இனியாச்சும் எல்லாரும் வெளிய வரணும். 377-சட்டப் பிரிவு ரத்து செய்திட்டதாலேயே ஒரே நாளுல எல்லோரையும் மாத்த முடியும்னு நான் நினைக்கல. இது மாதிரி ஒருத்தங்க வாழ நினைச்சா, அவுங்களை வாழ விடுங்க" 

பிரீத்தீஷா - திருநங்கை, நடிகை

``நான் இந்தச் சமூகத்தை ஒரு கண்ணாடியாகத்தான் பார்க்கிறேன். நான் அதுகிட்ட எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் சமூகமும் எனக்கிட்ட இருக்கும்ன்னு நம்புறேன். எனக்கு நடிப்புமீது ஆர்வம். அதனால, சில படங்களில் நடிச்சிருக்கேன். கொஞ்சம் வாய்ப்புகள் கம்மியா கிடைக்கிறனால நானும் என் கணவர் பிரேமும் (திருநம்பி) சேர்ந்து இப்போ டெலிவரி ஏஜென்ட்டாவும் வேலை பார்க்குறோம். எங்களுக்குள்ள சாதி, இனம், மதங்களைக் கடந்த புரிதல் இருக்கு. நாங்க எங்களுக்கான வாழ்க்கையைச் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கோம். இதுதான் எங்களுக்குத் திருப்தியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கு. வரும் மார்ச் 8-ம் தேதி, எங்களுக்கு முதல் திருமண நாள். இன்னும் இன்னும் தூரங்களைச் சேர்ந்தே பயணிப்போம்" என்று நம்பிக்கையுடன் சிரித்தவரிடம் அட்வான்ஸ் வாழ்த்துகள் தெரிவித்து விடைபெற்றோம்.

அன்பிற்குமுண்டோ அடைகுந்தாழ்?