Published:Updated:

``அரை நிர்வாணம் பழகிருச்சு... தீபாவளி, பொங்கல் மறந்தே போச்சு!'' - ஆம்னி பஸ் `பரிதாப' டிரைவர்கள்

பளபள வென்ற பேருந்தை ஓட்டும் எங்கள் வாழ்க்கையில் 5 மணி நேரம் கூட நிம்மதியா உறங்க முடியாது என்கிறார் ஒரு ஆம்னி பேருந்து ஓட்டுநர்.

``அரை நிர்வாணம் பழகிருச்சு... தீபாவளி, பொங்கல் மறந்தே போச்சு!'' - ஆம்னி பஸ் `பரிதாப' டிரைவர்கள்
``அரை நிர்வாணம் பழகிருச்சு... தீபாவளி, பொங்கல் மறந்தே போச்சு!'' - ஆம்னி பஸ் `பரிதாப' டிரைவர்கள்

இரு நாள்களுக்கு முன்னதாக, ஊருக்குச் செல்ல பேருந்துக்காக ஆம்னி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். சற்று முன்னதாகச் சென்றுவிட்டதால், ஆம்னி பஸ் ஸ்டாண்ட்  நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கப்பல் போன்ற ஸ்கேனியாவில் இருந்து சாதாரண ஏர்பஸ் வண்டிகள் வரை பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நான் நின்ற பிளாட்ஃபார்ம் அருகே பேருந்து ஒன்று வந்து நின்றது. நடைமேடையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சட்டெனத் தன் ஆடைகளை களையத் தொடங்கினார். என் அருகே சில பெண் பயணிகளும் இருந்தனர். அவரோ, கொஞ்சமும் எங்களைப் பொருட்படுத்தாமல், துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேருந்தைவிட்டு அரை நிர்வாணமாகக் கீழே இறங்கினார். 

``ஏலே... மாப்பிள்ளை...''  - திடீரென ஒரு குரல் அவரிடத்திலிருந்து எழுந்தது. இது வழக்கமான சத்தம்போல. குரல் எழுந்த மறு விநாடி இளைஞர் ஒருவர் மின்னல் வேகத்தில் ஓடிவந்தார்.  அந்த இளைஞருக்குப் பிற்காலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநராவது  லட்சியமாக இருக்கலாம். மளமளவெனப் பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியை இளைஞர் திறந்தார். உள்ளே இருந்த தண்ணீர் கேனை இருவரும் சேர்ந்து இறக்கினர். அதே இடத்தில் ஓட்டுநர் பல் துலக்கினார். அங்கேயே வாய் கொப்புளித்தார். பாதி நனைந்தும் நனையாத நிலையில் சோப் போட்டு முடித்து, தலையைத் துவட்டிக்கொண்டார். சற்று நேரத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக பக்திப்பழமாக மாறியிருந்தது அவரின்  முகம். மீண்டும் ``ஏலேனு...'' ஒரு சத்தம் போட்டார். அதே இளைஞர் பூஜைப் பொருள்களுடன் வந்தார்.  பேருந்துக்கு இருவரும் சேர்ந்து பூஜைபோட்டனர். பேருந்துக்குள் ஊதுவத்தி புகை எழுந்தது. சரியாக 20 நிமிடத்தில் இதுவெல்லாம் நடந்து முடிந்துவிட்டன. பயணிகளுடன் பேருந்து புறப்பட்டு ஓடியதும் நமக்குள்  ஒரு கேள்வி எழுந்து ஓடத் தொடங்கியது. 

வாழ்வியல்முறையில் ஆம்னி பேருந்துகளும் கால ஓட்டத்தில் நம்மோடு இணைந்துவிட்டவை. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் அதிர்வே தெரியாமல் செல்லும் மல்டி ஆக்ஸில் பேருந்துகள், சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 8 மணி நேரத்தில் சென்றுவிடுகின்றன. ஆம்னி பேருந்துகளிலோ நாளுக்கு புதுப் புது வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மக்களும் ஆம்னி பேருந்துகளில் செல்வதையே இப்போதெல்லாம் விரும்புகின்றனர். பணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.  `எய்யா அந்த ஆம்னி பஸ்லயே எனக்கு டிக்கெட் போடு' என எங்க அம்மாகூட சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. எல்லா வயது மக்களையும் ஆம்னி பேருந்தில் கிடைக்கும் வசதி, சுகம் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 

அதே வேளையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் இந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்குக் கிடைக்கின்றனவா என்றால், சத்தியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசு ஆசிரியர், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பெரிய இடைவெளி உண்டு. அதேபோல, அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் சம்பளத்திலிருந்து சலுகைகள் வரை பெரிய வித்தியாசம் உள்ளது.  இருவரின் பணியும் மக்களின் உயிருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது. சற்று கவனம் பிசகினாலும் கணநேரத்தில் பல உயிர்கள் பறிபோய்விடும். இத்தகைய பணியில் இருக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் நிலைதான் என்னைச் சற்று யோசிக்கவைத்தது. 

நான் ஏறவேண்டிய  பேருந்தும்  வந்தது. ஓட்டுநர், பக்திப்பழமாகக் காணப்பட்டார். எப்படிக் குளித்திருப்பார்... எங்கே குளித்திருப்பார் என்ற கேள்விகள் என் மனதுக்குள் ஓடின.  சொந்த ஊர் நோக்கிப் பேருந்தும் ஓடத் தொடங்கியது. விழாக்காலமில்லாத சாதாரண நாளிலேயே எரிச்சலூட்டும் வகையில் சென்னை  டிராஃபிக் இருந்தது. ஒருவழியாக பஸ் செங்கல்பட்டு டோல்கேட்டைத் தாண்டி இருந்தது. இதற்கே இரண்டு மணி நேரம் பிடித்தது.

இருக்கையிலிருந்து எழுந்து ஓட்டுநர் கேபினுக்குச் சென்றேன். இருவருக்கும் ஒரே ஊர் என்பதால் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். பேருந்து ஓட்டுநர்களுக்கு, நல்ல உறக்கம் மிக மிக அவசியம். பெரும்பாலான ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், பஸ்ஸில் சரக்கு வைக்கும் பகுதியைத் திறந்துவைத்து உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். ``அண்ணே அந்த இடத்தில் உறங்குகிறீர்களே, நல்லா தூக்கம் வருமா?'' என்று கேட்டேன். அவ்வளவுதான் அத்தனையையும் கொட்டித்தீர்த்தார். 

``ஆம்னி பஸ் ஸ்டாண்ட்ல 30, 40 ஆபீஸ் இருக்குது. கிட்டத்தட்ட 500 டிரைவர், கண்டக்டர்கள் இருக்குறோம். பெரிய பஸ் கம்பெனிங்க  தனியா டெப்போ வெச்சிருக்காங்க. அதுல டிரைவரா ஓடுறவங்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கும். ஒரு பஸ், ரெண்டு பஸ் வெச்சிறவங்ககிட்ட வேலை பார்க்கிற பாடு கஷ்டம்தான். ஆம்னி பஸ் ஸ்டாண்டுல ஒரு நாளைக்கு  ஒரு பஸ்ஸுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கிறாங்க. ஆனா, எங்களுக்கு எந்த வசதியும் இல்லை. சில நேரத்துல பஸ் ஸ்டாண்டுல இருந்து வெளியே வரவே 30 நிமிஷம் ஆகும். அப்போகூட டிராஃபிக்க க்ளியர் பண்ண ஹெல்ப் பண்ண மாட்டாங்க.

கழிவறைகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கும். ஆனாலும், எங்களுக்கு வேறு வழியில்லாம அதையெல்லாம் பயன்படுத்தவேண்டி இருக்குது. நிறைய டிரைவர்கள் இப்படித்தான் பொது இடத்துல நின்னு குளிப்பாங்க. எங்களுக்கு அது பழகிப்போச்சு. அரசு பஸ் டிரைவர்களுக்குத் தங்குவதற்கு இலவசமாகவே எல்லாம் செஞ்சு தர்றாங்க. நாங்களும் அதே மாதிரி வேலைதான் பார்க்குறோம். ஓய்வெடுக்க நல்ல இடம் கிடைச்சா அதுவே போதும். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் நல்லா தூங்கினாலே 500 கிலோமீட்டர் சர்வசாதாரணமா பஸ் ஓட்டுவோம். ஆனா, அந்த உறக்கம்கூட எங்களுக்குக் கிடைக்காது. கண் எரிச்சல்ல எங்களை மறந்து உறங்கினாதான் உண்டு. இதனால எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுது. இது தெரியாம பயணிகள் எங்கள் சர்வீஸ் சரியில்லைனு திட்டுவாங்க. அவங்கள ஏதாவது சொன்னாக்கூட ஆன்லைனிலேயே புகார் செஞ்சுடுறாங்க. எங்களோட கஷ்டநிலை, குடும்பத்தின் நிலையைப் பற்றியெல்லாம் யோசிக்காம புகார் கூறி வேலையை காலி பண்றவங்ககூட உண்டு. நீங்க தீபாவளி கொண்டாடுவீங்க. எங்களுக்கு தீபாவளி, பொங்கல்லாம் மறந்தேபோச்சு''  என்றார் வேதனையுடன். 

பேசிக்கொண்டிருக்கும்போதே  ஒரு ஹோட்டலில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர்.  `எல்லா ஹோட்டலிலும்,  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குச் சாப்பாடு இலவசம்' எனச் சொல்வது எனக்கு நினைவுவந்தது. சாப்பிட்டுவிட்டு வந்தவரிடத்தில் மீண்டும் பேச்சுக்கொடுத்தேன். ``உங்களுக்கு  ஹோட்டல்ல சாப்படு ஃப்ரீயா?'' என்று கேட்டேன். டிரைவரிடத்திலிருந்து ஒரு நமட்டுச்சிரிப்பு வெளிப்பட்டது.

``அப்படித்தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, உண்மை அதுவல்ல. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் 300 கிலோமீட்டருக்கு ஒரு ஹோட்டல்ல சாப்பாட்டுக்கு நிப்பாட்டுவாங்க. அவங்களுக்குக் குறிப்பிட்ட கேன்டீன்ல நிப்பாட்டணும்னு எழுதப்படாத விதி இருக்கு. குறிப்பிட்ட கேன்டீன்ல நிப்பாட்டினதுக்காக அந்த கேன்டீன்காரங்ககிட்ட கையொப்பம் வாங்கிட்டு அதை அவங்க ஆபீஸ்ல கொடுக்கணும். அதனால, அரசு ஓட்டுநர்களுக்கு ஃப்ரீயா ஹோட்டல்ல எல்லாமே கிடைக்கும். நாங்க அப்படியெல்லாம் குறிப்பிட்ட இடத்துல நிப்பாட்ட மாட்டோம். ஒரு மாசமாவது ஒரே இடத்துல நிப்பாட்டி காட்டினாதான் கேன்டீன்காரங்க எங்களை நம்புவாங்க.

எங்களால குறிப்பிட்ட கேன்டீன்ல பஸ்சை நிப்பாட்ட முடியாது. அரசு ஓட்டுநர்களுக்குக் கிடைக்கிற சலுகைகள் பற்றிக் கேள்விபட்டு சாப்பாட்டுப் பணம் மிச்சமாகும், குடும்பத்துக்கு உதவும்னு நினைச்சுத்தான் நானும் அரசு பஸ் ஓட்டுநர் வேலைக்கு முயன்றேன். என் திறமையை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. `3 லட்சம் ரூபாய் கொடுத்தா வேலை'னு சொன்னாங்க. என்னால அதைத் தர முடியல. கடவுள் புண்ணியத்தால் பொழப்பு ஓடுது''  என்றவரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. 

``சம்பளம் எவ்வளவு வாங்குவீங்க?''

``அப் அண்ட் டவுனுக்கு 1,400 ரூபாய் படி கிடைக்கும். 30 நாளும் டூட்டி இருக்கும். லீவு எடுத்தால் சம்பளம் கிடையாது. சில நல்ல ஓனருங்க சரக்கு நிறைய ஏத்தினா படிய கூட்டித்தருவாங்க. மத்தபடி இந்தச் சொற்ப சம்பளத்துலதான் வாழ்க்கை ஓடுது'' என்றார்.

தயங்கியபடியே அந்தக் கேள்வியையும் அவரிடத்தில் கேட்டேன்... ``கேபினில் பயணிகளை ஏற்றிக்கொண்டு டிக்கெட்டுக்குரிய காசை வாங்கிக்கொள்வதாகச் சொல்கிறார்களே!'' என்றபோது

``நீங்க சொல்ற மாதிரிலாம் ஒரு காலத்துல இருந்துச்சு. ஆனா, இப்போ எல்லா வண்டிலயும் ஜி.பி.எஸ் கருவி இருக்குது. முன்னிருக்கையில் கேமராவும் உண்டு. நாங்க அப்படியெல்லாம் எதுவும் செய்ய முடியாது. சின்ன ஆக்ஸிடன்டுல பஸ் சேதமடைஞ்சாகூட எங்க சம்பளத்துல பிடிச்சுடுவாங்க.  சம்பளத்துல பிடிக்காத  நல்ல ஓனர்களும் இருக்காங்க. எங்க பஸ் ஓனரும் நல்ல ஓனர்தான்'' என்றார் விட்டுக்கொடுக்காமல். 

பேச்சு  சுவாரஸ்யத்தில் வண்டி திருச்சியைத் தாண்டியிருக்க,  நானும் சீட்டுக்குச் சென்று கட்டையைச் சாத்தினேன்!