Published:Updated:

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"

'புல்லு  களஞ்சியம்’ எனும் பெயரில்  ஒரு சிறிய மகளிர் சுய  உதவிக் குழுவைத் தொடங்கி, அதன் மூலம் பல விழுதுகளை உருவாக்கிக்கொண்டு இருப்பவர் மதுரை 'சின்னப்பிள்ளை’. இவருடைய சேவைக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கையால் விருது பெற்றவர். விருதைவிட பிரதமரே காலில் விழுந்து வணங்கிய புகழுக்குச் சொந்தக் காரர். இங்கே தன் சொந்த ஊரான 'கள்ளந்திரி’ பற்றி கூறுகிறார் சின்னப்பிள்ளை!

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"
##~##

'அப்போ கள்ளந்திரியில தாராளமா ரெண்டு போகம் நெல் வெளையும். எல்லாக் குடியானவங்களும் கம்பு, கேழ்வரகு மகசூல் பண்ணுவாங்க. ஊர்ல எல்லார் வீட்டு சாப்பாட்டிலும் தானியங்கள்தான் முக்கியமானதா இருந்துச்சு. எங்க ஊர்ல கோயில் திருவிழாக்கள் அம்புட்டு விசேஷம். முத்தாலம்மன் கோயிலும் அஞ்சு கோயிலும் ரொம்பவே விசேஷம். முத்தாலம்மனுக்குச் உருவம்லாம் கிடையாது. திருவிழாவுக்காக மண்ணுல ஆத்தா உருவத்தைச் செய்வாக. ரெண்டு நாள் திருவிழா நடக்கும். மா விளக்கு போடுறது, கெடா வெட்டுறது மாதிரியான வேண்டுதல்களை மக்கள் பண்ணுவாங்க. சாயங்காலம் பாட்டுக் கச்சேரி, வள்ளித் திருமணம் நாடகம் நடக்கும். ரெண்டாம் நாள் சாயந்திரம் நாலு மணிக்கு எல்லா ஆட்டம், பாட்டத்தையும் நிறுத்திட்டு முத்தாலம்மனைக் கொண்டுபோயி பொட்டல்ல போட்டு உடைச்சிடுவாங்க. எங்க ஊர்,  கள்ளழகர் ஆத்துல இறங்கப்போற வழியில இருக்கிறதால இங்க சாமி இறங்குறதுக்கு நெறைய மண்டபம் இருக்குது. ஒவ்வொரு மண்டபமும் அழகர் வரும்போது மோர் பந்தல், நீர் பந்தல்னு களைகட்டும்.

நான் பொறந்ததுலேர்ந்து என் தாய் முகத்தைப் பார்த்தது இல்லை. எல்லாமே எம் அப்பாமார்தான். அம்மா முகத்தைப் பார்த்ததே இல்லைங்கிறதால, ரொம்ப நாள் என் அக்கா பேச்சியைத்தான் அம்மானு நினைச்சுட்டு இருந்தேன். அந்த அளவுக்கு அம்மா மாதிரி பாத்துக்கிட்டா பேச்சி அக்கா.

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"

நான்தான் வீட்டுல கடைக்குட்டி. அதனால வேலைவெட்டி பாக்க மாட்டேன். கடை கண்ணிக்குப் போக மாட்டேன். எப்போதும் புள்ளைகளோட சேர்ந்து 'கிளித் தட்டு’, 'பாண்டி’, 'பொம்மைச் சட்டி’ விளையாடுவேன்.

எங்க அப்பா பசினு யாரு வந்தாலும் உட்காரவெச்சு சோறுபோட்டு, வெத்தலைப் பாக்கு போடவெச்சு, பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்பிவைக்கும். அதைப் பார்த்துப் பார்த்துதான் மத்தவங்களுக்கு உதவுற குணம் எனக்கும் வந்துச்சு.

நான் பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்லை. ஆனாலும் எனக்குப் பல விஷயங்களை கத்துக்கொடுத்தது என் ஊருதான். ஒரு சாவு  வீட்டுக்குப் போனேன்னா, செத்தவங்களை விட்டுட்டு ஒப்பாரி வெக்கிறவங்களைக் கவனிப்பேன். கல்வெட்டுல செதுக்குன மாதிரி பாட்டு மனசுல பதிஞ்சிரும்.  

அப்போ ஊர்ல வயசான ஐயா ஒருத்தர் இருந்தாரு. அவருதான் எங்களுக்கு மகாபாரதம், ராமாயணம் எல்லாம் வரி வரியாப் படிச்சு அர்த்தம் சொல்வாரு. நான் அவரு நாற்காலிக்குப் பக்கத்துல கீழ உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்பேன். அந்தப் பழக்கம்தான் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவை சொன்னாலே எனக்கு மனசில பதிஞ்சிரும்.

அப்ப எல்லாம் ஊருக்குள்ள மக்களுக்கு ரெண்டே ரெண்டு வியாதிதான் வரும். ஒண்ணு அம்மை. இன்னொன்னு காலரா. சோளம், தட்டைப் பயறு, மொச்சைப் பயறு இதெல்லாம் இல்லாம ஒரு கவளம் சோறு சாப்பிட மாட்டோம். வயலுக்குப் பருத்திப் புண்ணாக்கைத் தவிர வேற எதையும் உரமாப் போட மாட்டோம். அதனால சோத்துக்குத் தண்ணி ஊத்தி வெச்சு அடுத்த நாள் திறந்து பார்த்தாலே 'கம கம’னு வாசம் வரும். இப்ப அப்படியா இருக்கு? வந்ததெல்லாம் நோய்... தொட்டதுக்கெல்லாம் மருந்து.

நான் இன்னைக்கு இந்த அளவுக்குக் கொஞ்சம் மதிப்பா, ஆரோக்கியமா இருக்கேன்னா அதுக்கு என் ஊர்தான் முழு காரணமும்!''

"கிளித் தட்டும் பொம்மைச் சட்டியும்..!"

- உ.அருண்குமார்
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு