Published:Updated:

டிக் டொக் தடைசெய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதா? #TikTok

கருவறை கூட இல்லை. கரு உருவாகும் இடத்தில் கூட டிக் டாக் நுழைந்துவிட்டது. ஒரு தம்பதி தங்கள் முதலிரவு அறைக்குள்ளிருந்து ஒரு டிக் டொக் வீடியோ போட்டிருந்தனர். இன்னொரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதைக் கணவனிடம் சொல்லும் முன்பு டிக் டொக் வீடியோவில் சொல்லியிருந்தார்.

டிக் டொக் தடைசெய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதா? #TikTok
டிக் டொக் தடைசெய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதா? #TikTok

ருவறை முதல் கல்லறை வரை வரக்கூடியது எது?

போன வருடம் வரை இதற்கு வேறு பதில் இருந்திருக்கலாம். எதுவுமே இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது இதற்கு ஒரே பதில்தான். அது, டிக் டொக்.

கருவறை கூட இல்லை. கரு உருவாகும் இடத்தில் கூட டிக் டொக் நுழைந்துவிட்டது. ஒரு தம்பதி தங்கள் முதலிரவு அறைக்குள்ளிருந்து ஒரு டிக் டொக் வீடியோ போட்டிருந்தனர். இன்னொரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதைக் கணவனிடம் சொல்லும் முன்பு டிக் டொக் வீடியோவில் சொல்லியிருந்தார். பிறந்த குழந்தையைக் கையிலேந்திய கணம் தொடங்கி இடுகாட்டில் பிணம் எரிக்கப்படுவதற்கு முன் எடுத்த வீடியோ வரை டிக் டொக்கில் ஏகப்பட்ட வெரைட்டி. கோயிலோ, திருமணமோ, அலுவலகமோ, குளியலறையோ... எல்லா இடங்களிலிருந்தும் டிக் டொக் வீடியோக்கள் வந்திருக்கின்றன. 

ஏன் டிக் டொக்கிற்கு இப்படியோர் ஆதரவு? மற்ற சமூக வலைதளங்களில் இல்லாத சிறப்பு டிக் டொக்கில் என்ன இருக்கிறது? 

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு வருவதற்கு முன்பு பிளாக் எனப்படும் வலைப்பூக்கள்தான் நம் நாட்டில் புகழ் பெற்றன. அதில் இயங்க நமக்கு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பு என்பதே நம் நாட்டில் மைனாரிட்டி என்னும்போது எழுதுபவர்கள் அதைவிடக் குறைவுதானே? அதனால் பெரும்பான்மை மக்கள் அந்தப் பகுதிக்கு வரவேயில்லை. அதைத் தொடர்ந்து வந்தவை ஃபேஸ்புக் , ட்விட்டர். ஃபேஸ்புக்கில் பிளாகு போல எழுத வேண்டிய தேவை குறைவாக இருந்தது. பிழைகளுடன் எதையாவது எழுதி படங்களை இணைக்கலாம். அல்லது 'Now watching Petta' என அப்டேட் தந்துவிடலாம் என்பதாலும், புகைப்படங்களைப் போட்டே லைக்ஸ் அள்ளலாம் என்பதாலும் கூடுதல் பார்வையாளர்களை ஃபேஸ்புக் பெற்றது. ஆனாலும், இந்தியாவின் மெஜாரிட்டி மக்கள் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இயங்கவில்லை. ``எனக்கும் அக்கவுன்ட் இருக்குப்பா” என்ற ரேஞ்சில்தான் இருந்தார்கள். ட்விட்டர் வேற லெவல். சொல்ல வேண்டியதை சொல்வதே சிரமம் என்னும்போது, அதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றதால் ட்விட்டருக்கும் ஒப்பீட்டளவில் பெரிய ஆதரவு இங்கே கிடைக்கவில்லை. பிளாகு, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் கன்டென்ட் உருவாக்குபவர்கள் குறைவு. அதை நுகர்பவர்கள் அதிகம்.

அடுத்து வந்தவை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப். நல்ல புகைப்படங்கள் எடுக்கத் தெரிந்தவர்களே இன்ஸ்டாவில் ஹிட் அடித்தார்கள். எழுதுவதைவிடப் படங்கள் எடுப்பது, அதுவும் நல்ல கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால், கொஞ்சம் எளிதுதான். அதனால், இன்ஸ்டாவுக்கு நல்ல மவுசு. வாட்ஸ் அப் இன்னும் எளிதானது. யாராவது எழுதி அனுப்புவார்கள். நம் வேலை ஃபார்வர்டு செய்வது மட்டும்தான் என்பதால் மேலே சொன்ன நெட்வொர்க்குகளை விட வாட்ஸ்அப் பயனர்கள் அதிகமானார்கள். ஆனால், வாட்ஸ் அப்பில் அங்கீகாரம் என்பது கிடையாது. மற்ற மூன்றிலும் திறமை இருந்தவர்கள் பிரபலம் ஆனார்கள். இந்தச் சூழலில் வெளியானதுதான் டிக் டொக்.

எழுத, படிக்கத் தெரிய வேண்டியதில்லை. எந்தக் கலையின் நுணுக்கங்கள் பற்றி தெரிய வேண்டியதில்லை. பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆனால், சிம்ரன் பாடலுக்கு ஆடி நாமே சிம்ரன் ஆகலாம். ரஜினியின் பன்ச் பேசி நாமே சூப்பர் ஸ்டார் ஆகலாம். புதிதாக எதையும் யோசிக்கக் கூட தேவையில்லை. யாராவது ஒருவர் ஒரு புது டிரெண்டிற்கான ஐடியா யோசிப்பார். அது ஹிட் ஆனதும் அதைப் பின்பற்றி அதே போல நாமும் ஒரு வீடியோ செய்துவிடலாம். இங்கே முன் நிற்கப்போவது நம் முகம். ``எல்லா வேலையும் செய்தாலும் நடிகருக்குக் கிடைக்கும் புகழ் இயக்குநருக்குக் கிடைப்பதில்லை” எனப் புலம்புவார்களே, அது போல. மற்ற சமூக வலைதளங்களில் இல்லாத ஸ்பெஷல் இதுதான். இங்கே, நம் முகம்தான் பிரதானம்.

ஃபேஸ்புக் காலத்தில் ஹிட்டடித்த இன்னொரு சமூக வலைதளம் யூட்யூப். அதுவும் வீடியோவிற்கான களம்தான். ஆனால், அதில் நம் ஒரு வீடியோ அப்லோடு செய்ய மெனக்கெட வேண்டும். ஆடியோ மற்றும் விஷுவல்களுக்கும் நாமே போராட வேண்டும். டிக் டொக் அந்த வேலையை எளிதாக்கியது. அதனால்தான் அது யூட்யூப் இத்தனை ஆண்டுகளில் செய்ய முடியாததை டிக் டொக் சில வருடங்களில் செய்துவிட்டது.

இப்போது டிக் டொக்கிற்குத் தடை என்பது பற்றி பேச்சு வந்திருக்கிறது. அதுவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரே இதைப் பேசியிருக்கிறார் என்பதால் இது அதிக கவனத்திற்குள்ளாகிறது. தடை போடும் அளவுக்கு டிக் டொக் ஆபத்தானதா? டிக் டொக்கில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அவை தனி நபர் சார்ந்தது மட்டும் அல்ல. சமூகம் சார்ந்தவை.

டிக் டொக் ஒரு வித அழுத்தத்தை உருவாக்குகிறது. Peer pressure என்பார்களே அது போல. எப்படியாவது நாம் அதிக கவனத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற அழுத்தம் அது. ``மேல் வீட்டில இருக்கு.. கீழ் வீட்டுல இருக்கு.. உங்க வீட்டுல இல்லையா” என டேபிள்மேட்டை விற்றது போலதான். சுற்றியிருக்கும் அனைவரும் டிக் டொக் வீடியோக்களில் கலக்கும்போது நாம் சும்மா இருந்தா எப்படி என யோசிக்கிறார்கள். டிக் டொக் மூலம் சிலருக்கு சினிமா வாய்ப்பு கிடைப்பது, செம வைரலாகி இந்திய அளவில் கவனம் பெறுவது ஆகியவையும் அவர்களை வெறிகொண்டு இயங்க வைக்கிறது. அந்தக் கவனத்தைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராவதுதான் டிக் டொக்கின் மிகப் பெரிய பிரச்னை. இதே பிரச்னை பிளாகு, ஃபேஸ்புக்கிலும் இருந்தது உண்மைதான். ஆனால், அங்கே கன்டென்ட் உருவாக்குபவர்கள் குறைவு. சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான நுண்ணுணர்வு கொண்டவர்களே அங்கே அதிகமாக இருந்ததாலும், அவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும் பிரச்னை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் டிக் டொக்  அப்படியில்லை. அதனால்தான் சுடுகாட்டில் பிணத்துடன் வீடியோ எடுக்கிறார்கள். பெண்கள் தங்கள் உடலைக் காட்டி கவனம் ஈர்க்க நினைக்கிறார்கள்.

டிக் டொக்கில் இயங்கும் பலருக்கும் இணையத்தின் சூத்திரங்கள் புரிவதில்லை. இணையத்தில் நடக்கும் ட்ரோல்களுக்கு இவர்கள் பழகியதில்லை. இவர்கள் பதிவேற்றும் வீடியோக்களுக்கு வரும் டிரோல்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். திரும்பத் திரும்ப அவற்றுக்குப் பதில் சொல்கிறேன் என மேலும் மேலும் சிக்கலாக்குகிறார்கள். இது தரும் மன உளைச்சலிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். இது அடுத்த பிரச்னை. டிஜிட்டல் உலகிற்கு நாம் தரும் எல்லா விஷயங்களும் அமரத்துவம் வாய்ந்தவை. அது அழிக்கவே முடியாது. அது காலம் கடந்தும் நம்மைத் துரத்தி வரக்கூடும் என்பதையும் இவர்கள் உணர்வதில்லை. நிறைய இணையதளங்கள் ``Tiktok aunties", Tiktok sex videos" என்ற தலைப்புடனே இயங்கி வருகின்றன. இதற்கெல்லாம் தேவையான வீடியோக்களை அவர்களே தந்திருக்கிறார்கள் என்பதுதான் முரண்.

சட்டத்துக்கு எதிராக எந்த விஷயமும் இல்லாதபோது டிக் டொக்கிற்கு தடை என்பது தவறானதுதான். இதற்குத் தடை என யோசிப்பது தற்காலிகமான விஷயம். டிஜிட்டல் இந்தியா எனக் கெத்து காட்ட விரும்புகிறவர்கள் முதலில் குடிமக்களை அந்த டிஜிட்டல் யுகத்திற்கு தயார்படுத்த வேண்டும். அது பற்றிய விழிப்புஉணர்வை அதிகரிக்க வேண்டும். அதைச் செய்யாமல் டிக் டொக்கிற்குத் தடை போடுவதால் எதுவும் மாறாது. ஏனெனில், இன்று டிக் டொக்கைத் தடை செய்தாலும் நாளையே அது தாட்பூட் என்ற பெயரில் இன்னொரு ஆப் ஆக வரும். 

டிக் டொக்கைப் பயன்படுத்துபவர்கள் சராசரியாக இருப்பது பெரிய பிரச்னை இல்லை. அதைத் தடை செய்ய வேண்டும் எனப் பேசுபவர்களும் அப்படியே இருப்பதுதான் உண்மையில் பெரிய பிரச்னை. 

இந்தப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?