Published:Updated:

''உலகில் மனைவிக்குப் பெயர் வைத்த முதல் கணவர் இவர்!'' - பிரஜனாவின் காதல் கதை #Valentine'sDay

``அன்பினிக்கு நான்தான் பிரசவம் பார்த்தேன். எங்க மூத்தப் பையனை என் கையாலேயே பிரசவம் பார்த்து, நானே குழந்தை மேலே இருந்ததையெல்லாம் துடைச்சு, தொப்புள் கொடி நறுக்கி, குளிப்பாட்டின்னு...அந்த அனுபவத்துக்கு இணையே கிடையாதுங்க.''

''உலகில் மனைவிக்குப் பெயர் வைத்த முதல் கணவர் இவர்!'' - பிரஜனாவின் காதல் கதை #Valentine'sDay
''உலகில் மனைவிக்குப் பெயர் வைத்த முதல் கணவர் இவர்!'' - பிரஜனாவின் காதல் கதை #Valentine'sDay

காதல், அதை கொண்டாடுபவர்களுக்கு அவர்கள் கேட்ட அன்பையும் தரும். கேட்காத உலகின் உன்னதங்களையும் தரும். அப்படிப்பட்ட காதலால் ஆசீர்வதிக்கப்பட்ட வெற்றிமாறன் - 'அன்பினி' பிரஜனா தம்பதியிடம், காதல் அவர்களுக்கு என்னவெல்லாம் தந்தது என்று பகிரச் சொன்னோம். அதிகாலை நேர மல்லிகை மொட்டின் புத்தம் புது வாசனையாய், மணம் கமழக் கமழ தங்கள் காதலை விவரிக்க ஆரம்பித்தார்கள். 

``நான் இப்போது, நம்மாழ்வார் ஐயாவுடைய வானகத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும் அறங்காவலராகவும் இருக்கேன்.  நான்  பயிற்சியாளரா இயங்கிக்கிட்டு இருந்த நேரத்துலதான் அன்பினியை சந்திச்சேன். வானகத்தில் 3 நாள் பயிற்சி எடுத்துக்கிறதுக்காக  வந்திருந்தாங்க. எல்லோருக்கும் பயிற்சி கொடுக்கிறப்போ இயற்கை வேளாண்மையோட சுகப் பிரசவம் பத்தியும் பேசியிருக்கேன். அன்பினி மாற்று மருத்துவமான அக்குபஞ்சர் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டிருந்ததால, என் பேச்சு அவங்களை ரொம்ப ஈர்த்து இருக்கு. இது எனக்குத் தெரியாது. மறுபடியும் ஒரு மாத பயிற்சிக்கு வந்தாங்க. இந்தத் தடவை என்கிட்ட சமூகம் தொடர்பா பேச ஆரம்பிச்சதோட, என் மேலே வெளிப்படையா அக்கறை எடுத்துக்கவும் ஆரம்பிச்சாங்க. அதனால, அவங்க என்னை நேசிக்கிறாங்க அப்படிங்கிறது எனக்கு புரிஞ்சுப்போச்சு'' என்று சிரிக்கிற வெற்றிமாறனை இடைமறித்து அன்பினி பேச ஆரம்பித்தார். 

``உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்குப் பெற்றோர் வைச்சப் பேரு பிரஜனா. இவர்தான் எனக்கு அன்பினி அப்படிங்கிற பேரை வைச்சார். அந்த வகையில் மனைவிக்குப் பெயர் வைச்ச கணவர் உலகத்திலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார்'' என்று கலகலத்தவர், தான் வெற்றிமாறனிடம் காதல் சொன்ன அந்தத் தருணத்தைச் சொல்ல ஆரம்பித்தார். 

``நான் பார்மஸி படிச்சவ. எட்டு வருஷம் அந்தத் துறையில்தான் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அதுல நான் பார்த்த சில சம்பவங்களால மனசு நொந்து இயற்கை சார்ந்த விஷயங்களில் தீவிரமா இயங்க ஆரம்பிச்சேன். அப்போதான் இவரை சந்திச்சேன். இவரோட தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கும். அதுதான் முதலில் என்னை ஈர்த்துச்சு. அப்புறம் இவருடைய வாழ்வியல் முறை ரொம்பப் பிடிச்சது. இவர்கூட பயணிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு. நாளைக்கு நான் சமூகத்துக்காக போராடும்போது அதுக்கு இவர் தடை போட மாட்டார்னு தெரிஞ்சதும், ஒரு ரயில் பயணத்தப்போ, 'வாய்ப்பிருந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா'ன்னு கேட்டுட்டேன். அதுக்கு அவர், `எங்க வீட்டில் எனக்கு பொண்ணுப் பார்த்துக்கிட்டு இருக்காங்களே' என்றார். `அப்ப விடுங்க'ன்னு நான் அதோட அந்தப் பேச்சை விட்டுட்டேன். ஆனா, இவரும் என்னை மனசுக்குள்ள நேசிச்சிருக்கார். அதனால, உடனே அவரோட அம்மா, அப்பாக்கிட்டே என்னைப் பத்தி சொல்லிட்டார். அவங்களுக்குப் பிள்ளையோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணுங்கிறதால், என் போட்டாவைக்கூட பார்க்காம, என் வீட்டில் வந்து முறைப்படி பொண்ணு கேட்டாங்க. கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த பொண்ணு, காதலிக்கிறாளேன்னு எங்க வீட்டில் எல்லோருக்கும் பயங்கர ஆச்சர்யம். அப்புறம், என் அப்பா இவர்கிட்ட பேசிப் பார்த்துட்டு அடுத்த ஒரு மாசத்துலேயே திருமண தேதியைக் குறிச்சிட்டாரு. அந்தளவுக்கு இவரை எங்கப்பாவுக்குப் பிடிச்சுப் போச்சு'' - அன்பினி பேச்சை நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, வெற்றி பேச ஆரம்பித்தார். 

``காதல் வந்துட்டா உடனே பரஸ்பரம் தெரியப்படுத்தி, அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை திருமணப் பந்தத்தில் இணைச்சிடுங்க. இன்னிக்கு, ஒரு காதல் பிரிவதற்கான பல சந்தர்ப்ப சூழ்நிலைகள் சமூகத்தில் நிறைஞ்சு இருக்கு'' என்று அக்கறைப்பட்டவர், மறுபடியும் தன்னுடைய காதல் வாழ்க்கைப் பற்றி பேச ஆரம்பித்தார்.  

``அன்பினிக்கு சுகப் பிரசவம்தான் நடக்கணும் என்பதற்காக, அவங்களுக்கு வீட்டிலேயே நான்தான் பிரசவம் பார்த்தேன். எங்க மூத்தப் பையனை  என் கையாலேயே பிரசவம் பார்த்து, நானே குழந்தை மேலே இருந்ததையெல்லாம் துடைச்சு, தொப்புள் கொடி நறுக்கி, குளிப்பாட்டின்னு... அந்த அனுபவத்துக்கு இணையே கிடையாதுங்க. இப்ப மறுபடியும் கர்ப்பமா இருக்காங்க. இந்த முறையும் நான் தான் அவங்களுக்கு பிரசவம் பார்க்கப் போறேன். இயற்கையும் காதலும் துணையிருக்க, வேறு என்னங்க வேணும் எங்களுக்கு'' என்று கேள்வியெழுப்புகிற வெற்றிமாறனுக்கு அன்பினியின் ஆசை முகம்  `இது போதும்' என்று புன்னகையால் பதிலளிக்கிறது.