Published:Updated:

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

கேள்வி - பதில்

நானும், எனது மனைவியும் இணைந்து வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கவுள்ளோம். வங்கிக் கடனை இணைந்து வாங்கினால், இருவருமே வரிச் சலுகை பெற இயலுமா?

ராஜேந்திரன், திருச்சி

எஸ்.பாலாஜி, ஆடிட்டர் 

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

“கணவன் மனைவி இருவருமே இணைந்து வீட்டுக் கடன் தவணையைச் செலுத்துவதால், அந்த வீட்டு உரிமைக்கான விகிதாச்சார அடிப்படையில் வரிச் சலுகையைப் பெறலாம். ஆனால், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு இருவரும் இணைந்தே வீட்டுக் கடனுக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால், இரு உரிமையாளர்களும் வட்டித்தொகை மட்டுமன்றி, முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக்கட்டணம் உள்ளிட்ட வற்றையும் வரிச் சலுகைக்குக் காட்டலாம். சொத்துக்கு இருவரும் உரிமையாளர்களாக இருப்பதுபோலவே, வீட்டுக் கடனையும் இருவரும் இணைந்து வாங்கியிருப்பது அவசியம்.”

நான் நடத்தும் மினி ஆப்செட் நிறுவனத்துக்காக நகரின் மையப்பகுதியில் ஒரு கடையை வாடகைக்குப் பார்த்துள்ளேன். இந்தக் கடையை இன்னும் 10 ஆண்டுக் காலத்துக்கு எனக்கே வாடகைக்கு விடும்படி ஒப்பந்தம்போட சட்டப்படி வாய்ப்புள்ளதா?
 
அன்வர்தீன், சென்னை

என்.ரமேஷ், வழக்கறிஞர்


``சட்டரீதியாக ஒப்பந்தம் போடலாம். அந்தக் கடைக்கான வாடகை, முன்பணம், ஒவ்வோர் ஆண்டும் வாடகை உயர்வு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டு பத்திரத்தில் பதிந்து ஒப்பந்தம் போடலாம். ஒருவேளை, அந்தக் கடைக்கான வாடகையைத் தரத் தவறுவது, தவறான செயல்களுக்கு அந்தக் கடையைப் பயன்படுத்துவது என ஒப்பந்தத்தை மீறி நீங்கள் செயல்பட்டால், அதை நீதிமன்றத்தில் தெரிவித்து, சட்டப்படி உங்களை வெளியேற்றவும் வாய்ப்புண்டு. எனவே, ஒப்பந்தத்தை முறையாகச் செயல்படுத்தினால் சிக்கல்கள் வராது.’’

வயது 30. மாதந்தோறும் 8,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 20 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். நல்ல வருமானம் பெறுவதற்கேற்ற ஆலோசனை கூறவும்.

தினேஷ்குமார், ராஜபாளையம்.

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர் 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

``தாங்கள் வருவாய் ஈட்டும் வயதில் இருப்பதாலும், நீண்டகால முதலீடு செய்ய விரும்புவதாலும், உங்களுடைய முதலீட்டுத் தொகை 8,000 ரூபாயை நான்காகப் பிரித்து தலா ரூ.2,000 என்ற அளவில், பின்வரும் இரண்டு மிட்கேப் மற்றும் இரண்டு ஸ்மால்கேப் திட்டங்களில் முதலீடு செய்யவும். ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்.’’

என் வயது 28. மூன்று வயதுடைய என் மகளின் உயர்கல்விச் செலவுக்காக மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைப் பரிந்துரைக்கவும்.

நரேந்தர், கோயம்புத்தூர்

கனகா ஆசை, நிதி ஆலோசகர்


“உங்கள் மகளுக்கு 18 வயதாகும்போது உங்கள் முதலீட்டு வருமானம் கிடைப்பதை இலக்காகக் கொண்டால், முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாகும். முதலீட்டுத் தொகை 5,000 ரூபாயை ரூ.2,500 என்ற விகிதத்தில் இரண்டாகப் பிரித்து ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரீ்ட் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் எல் & டி மிட்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும்.

இந்த இரண்டிலும் நீண்ட காலமாக 13 ஆண்டுகளுக்கு முதலீடுசெய்து, வரும் வருமானத்தைக் கடன் சார்ந்த ஃபண்டுகளுக்கு மாற்றி இரண்டாண்டு காலம் முதலீடு செய்யவும். 5,000 ரூபாயை 13 ஆண்டு காலம் முதலீடு செய்து, தோராயமாக 12% வருமானம் கிடைத்தால் ரூ.18,79,655 வரை எதிர்பார்க்கலாம். மேலும், இரண்டு ஆண்டு காலத்துக்குத் தோராயமாக 8% வருமானம் கிடைத்தால் ரூ.21,92,430 வரை எதிர்பார்க்கலாம்.”

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

பங்கு விலை 136 ரூபாயில் வாங்கப்பட்ட ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் 600 பங்குகள், 157 ரூபாயில் வாங்கப்பட்ட க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் 400 பங்குகள் மற்றும் 197 ரூபாயில் வாங்கப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் 300 பங்குகளை வைத்துள்ளேன். இவற்றை என்ன செய்யலாம் என ஆலோசனை கூறவும்.

கிறிஸ்டோபர், நாகர்கோவில்


ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்


“ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகள், தற்போது ரூ.110-160 விலை வரம்புக்குள் இருக்கின்றன. லாப வரம்பு பாதகமாக இருப்பதால், விலை ஏற்றத்தைப் பாதிக்கிறது. எனவே, லாப நோக்கம் கருதி தற்போதைய நிலையின் உச்சத்தில் விற்பனை செய்யவும்.

க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் பங்குகள் தற்போது ரூ.115-150 விலை வரம்புக்குள் இருக்கின்றன. இதன் விலை 150 ரூபாயைத் தாண்டி அதிகரிக்கும் வரை காத்திருக்கலாம். எனவே, தற்போது விற்பனை செய்ய வேண்டாம்.

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு 175 ரூபாய்க்கு அருகிலேயே நிலைத்திருக்கிறது. இந்த இடத்துக்கு மேலே பிரேக் அவுட்டானால் ரூ.200 /211 /231 என்ற விலை வரம்புகள் வரை உயரக்கூடும். எனவே, தற்போது விற்பனை செய்யாமல் காத்திருக்கலாம்.”

வயது 35. எனது ஆண்டு வருமானத்தைவிட ஆறு மடங்குக்கு 30 லட்சம் ரூபாய்க்கான 30 ஆண்டுகால டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். காப்பீட்டுத் தொகை மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பாலிசி காலம் ஆகியவற்றை மாற்ற இயலுமா?

சக்திவேல், மதுரை


ஸ்ரீதரன், வெல்த்லேடர்


“டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, வருட வருமானத்தைப்போல குறைந்தபட்சம் பத்து மடங்கு, அதிகபட்சமாக 20 மடங்குக்கு கவரேஜ் இருப்பது நல்லது. நீங்கள் ஆறு மடங்குக்குக் காப்பீடு எடுத்திருப்பதால், இதை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒரு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து மற்றொரு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற முடியாது. அதேபோல, பிரீமியம் கட்டும் ஆண்டுக் காலத்தையும் மாற்ற முடியாது. ஆகவே, நீங்கள் ஒரு புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேவையான மதிப்புக்கு எடுத்துக்கொண்டு, தற்போதுள்ள டேர்ம் இன்ஷூரன்ஸை நிறுத்திவிடுவது உகந்தது.”

நான் பொதுத்துறை ஊழியர். பணி ஓய்வின்போது, வருங்கால வைப்புநிதியில் மூன்றில் ஒரு பங்கை   பெற்றுக்கொண்டேன். மீதித் தொகையை இன்ஷூரன்ஸ்  நிறுவனத்தின் திட்டம் மூலம், வருமானம் பெறும் வகையில் செய்திருக்கிறார்கள். இந்த  வருமானத்திற்கு  சம்பளத்தைப் போன்றே வரிப் பிடித்தம் செய்வார்களா அல்லது இதர வருமானமாகக் கணக்கிடப்படுமா?

சந்திரசேகர், சென்னை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்


“மாத சம்பளம் என்பது, பணியாளருக்கும், அவரது நிறுவனத்திற்கும் இடைப்பட்ட உறவாகும். ஆனால். இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம், அப்படியானதல்ல. எனவே இது, இதர வருமானக் கணக்கில் கொள்ளப்பட்டு, அந்தக் கணக்கீட்டின் படி வரிப் பிடித்தம் செய்யப்படும்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன்... வரிச் சலுகை எப்படி?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.