Published:Updated:

ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

ஜி .எஸ்.டி அதாவது, சரக்கு மற்றும் பொருள்களுக்கான சேவை வரியானது இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு பூதாகரமாக அறிமுகமாகி, இப்போது ஓரளவுக்குப் பழகிய பக்கத்து வீட்டுக்காரர்போல மாறியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரியில் தினம்தினம் மாற்றங்கள். அதாவது, 14 மணி நேரத்துக்கு ஒரு மாற்றம் எனப் பலவிதமான தொடர் மாற்றங்கள் வந்துள்ளன.  

ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

இந்த மாற்றங்கள் பற்றி சென்னையின் பிரபல வழக்கறிஞர் ராகவன் ராமபத்ரனிடம் கேட்டோம். ஆடிட்டரும், வழக்கறிஞருமான இவர், லட்சுமிகுமரன் அண்டு ஸ்ரீதரன் நிறுவனத்தின் பார்ட்னராகவும் இருக்கிறார். இதோ அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...

ஜி.எஸ்.டி ஆரம்பித்ததிலிருந்து இன்றைய அளவிலும் இருக்கும் சிக்கல்கள் என்ன?


‘‘ஜி.எஸ்.டி கொண்டுவந்ததினால் தொழில் செய்வது கடினமாகி யிருக்கிறதா என்று கேட்டால்,  கடினமாகியிருக்கிறது என்பதே உண்மை. காரணம், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள். ஒருவர் சர்வீஸ் புரவைடராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஜி.எஸ்.டி வருவதற்கு முன்புவரை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் டாக்ஸ் (ST-3) தாக்கல் செய்தால் போதும்.

ஆனால், ஜி.எஸ்.டி வந்தபின், அவர் பத்து மாநிலங்களில் தொழில் செய்கிறார் எனில், அந்தப் பத்து மாநிலங்களுக்கும் தனித்தனியே மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாதமும், மாதத்திற்கு மூன்றுமுறையும் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஓராண்டுக்கு இந்தியா முழுக்க அவர் தொழில் செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து இரண்டு முறை வரித் தாக்கல் செய்துகொண்டிருந்தவர், ஜி.எஸ்.டி-யினால் மாநிலங்கள் வாரியாக மாதத்திற்கு மூன்று முறை ஜி.எஸ்.டி ரிட்டன் செய்ய வேண்டியுள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி வாரியம் தொடர்ச்சியாக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவருகிறது. அதையெல்லாம் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த அறிவிப்புகளை நாம் தெரிந்துகொள்ளாமல் பழைய முறையின்படியே ஜி.எஸ்.டி தாக்கல் செய்யும்போது அது பிரச்னைகளில் போய் முடியும் சூழ்நிலை உருவாகிறது.’’ 

ஜி.எஸ்.டி-யில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?


‘‘ஜி.எஸ்.டி ஆணையம் அடிக்கடி செய்யும் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வது அவசியம், விற்பனையாளர்கள் கண்டிப்பாக  ஓர் ஆலோசகரோ அல்லது வழக்கறிஞரோ இல்லாமல் சுலபமாக ஜி.எஸ்.டி தாக்கல் செய்வது என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். காரணம், ஜி.எஸ்.டி-யில் ஒரு திருத்தம் வரும்போது, அதைத் தெரிந்துகொள்ளாமல் பழைய முறைப்படி ஜி.எஸ்.டி தாக்கல் செய்வதென்பது அரசைப் பொறுத்தவரை, வரி ஏய்ப்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த நிலையில், அரசு அவர் கட்டத் தவறிய தொகை மதிப்பிற்கு நிகரான தொகை அபராதமாக விதிக்கப்படும். விற்பனையாளரைப் பொறுத்தவரை, அவர் தாக்கல் செய்த வரித் தொகையை மட்டுமே வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றிருப்பார். அரசு விதிக்கும் அபராதத் தொகையை விற்பனையாளர் தன் சொந்தப் பணத்திலிருந்து கட்ட நேரிடும். அது அவரின் தொழிலைப் பெரிய அளவில் பாதிக்கும் வாய்ப்பும் அதிகமுள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜி.எஸ்.டி.... சமீபத்திய மாற்றங்கள் என்னென்ன? சொல்கிறார் ஆடிட்டர் ராகவன்

பொதுவாக, இந்த ஜி.எஸ்.டி திருத்தங்களைப் பற்றியான பற்பல கருத்தரங்குகள், விழிப்பு உணர்வு முகாம்களையும் பல தொழில் அமைப்புகள் நடத்துகின்றன. குறைந்தபட்சம் இந்தக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றுவருவது அவசியம்.’’ 

ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?

‘‘உற்பத்தியாளர்களோ அல்லது விற்பனை யாளர்களோ கண்டிப்பாக இன்வாய்ஸ் இல்லாமல் எந்தவொரு விற்பனையையும் செய்யக்கூடாது. அதுபோல, இன்வாய்ஸில் பெறப்பட்ட ஜி.எஸ்.டி தொகையைக் கண்டிப்பாக அவர்கள் அரசுக்குச் செலுத்தியிருக்க வேண்டும். அப்படி அவர் செய்யத் தவறும்போது அவர் சிறை செல்ல வாய்ப்புள்ளது. 

ஒருவேளை விற்பனையாளர் வரி செலுத்தத் தவறும்பட்சத்தில், மறுமுனையில் அந்த பொருளை வாங்கியவர், அவரிடம் செலுத்திய தொகைக்கு வரிவிலக்கு கோரும்போது, அது பிரச்னையில்தான் முடியும். 

அதேபோல, கொள்ளை  லாபம் சம்பாதிப்பது (Anti Profiteering). ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின், உற்பத்தியாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ அவர்களுக்குக் கிடைக்கும் லாபத் தொகையைக் கண்டிப்பாக அவர்களின் வாடிக்கை யாளருக்குத் தந்தாக வேண்டும். அதை செய்யத் தவறும்பட்சத்தில் பல சட்டச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.”

ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?


‘‘ஒரு பொருள் வாங்கும்போது, அதற்கான ஜி.எஸ்.டி சதவிகிதம் சரியாக உள்ளதா, சரியான வரி நம்மிடமிருந்து வசூலிக்கப் படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு பொருள் வாங்கும்போது ரசீது இல்லாமல் வாங்கவே கூடாது. அப்படி வாங்குவது என்றாவது ஒருநாள் பிரச்னையில்தான் முடியும்.’’

பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி-க்குள் ஏன் கொண்டு வரப்பட வில்லை?


‘‘பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையின்மூலம் மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாய் அதிகம். எனவே, முதல் ஐந்து வருடங்களுக்கு இந்த ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோலியப் பொருள்கள் கொண்டுவரப் படவில்லை. ஆனால், ஐந்து வருடங்களுக்குப்பிறகு பெட்ரோலிய பொருள்களும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரப்படும் என்று சொல்லப்படுகிறது. கொண்டு வருவார்களா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.’’

ஜி.எஸ்.டி-யில் கொண்டுவரப்பட்ட சமீபத்திய மாற்றம் என்ன?

‘‘ஒரு உற்பத்தியாளரோ அல்லது வர்த்தகரோ அவருடைய ஆண்டு வர்த்தகம் ரூ.1.5 கோடியாக இருப்பின், அவர் 0.5% வரிச் செலுத்தினால் போதும். முன்பு இது ரூ.1 கோடியாக இருந்தது. அதுபோல, சேவை வழங்கும் தொழிலைச் செய்துவருபவரின் ஆண்டு வர்த்தகம் ரூ.50 லட்சமாக இருந்தால், அவர் 6% வரிச் செலுத்தினால் போதுமானது.

ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்தில் இருக்கும் ஒருவர், ஜி.எஸ்.டி பதிவு செய்திருக்கத் தேவை யில்லை. முன்பு இந்தத் தொகை 20 லட்சமாக இருந்தது.  கடந்த 2019 ஜனவரி 01 முதல் சிறிய தொலைக்காட்சி போன்ற சில மின்சாதனங்களின் வரி அளவு 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகித மாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வரும் 01 ஏப்ரல் 2019 முதல் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.”

ஜி.எஸ்.டி இந்தியாவிற்கு வரமா, சாபமா..? இதில் அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?


‘‘ஜி.எஸ்.டி இந்தியாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தச் சட்டம்  அருமையான ஒரு சட்டம். ஜி.எஸ்.டி-யின் நோக்கங்கள் மிகவும் உயர்ந்தது. இந்தத் திட்டத்தின் விதிமுறைகளை அரசு எளிதாக்க வேண்டும். மற்றும் இதில் பணிபுரியும் அதிகாரிகள் சற்று பரந்த மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும். உதாரணமாக, நான் ஒரு பொருளை மதுராந்தகத்தி லிருந்து துறைமுகத்திற்கு அனுப்புகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். நூறு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருப்பதினால் நான் இ-வே பில் எடுத்துவிடுகிறேன். பில் எடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் துறைமுகத்தைச் சென்றடைந் திருக்க வேண்டும். அப்படிச் செல்லாதபட்சத்தில் அந்த இ-வே பில் தொகையையும் அதற்கு நிகரான தொகையையும் சேர்த்து நான் அபராதமாகச் செலுத்த வேண்டும். இங்குதான் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

பொருள் கொண்டு செல்லும்போது வாகனம் பழுது ஏற்படலாம்; பஞ்சர் ஆகலாம். இது போன்ற காரணங்களால் தாமதம் ஏற்படும்போது, ஒருவர் அபராதம் செலுத்தியாக வேண்டும் எனும்போது அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிறது. அரசை ஏமாற்றும் ஒருவருக்குக் கொடுக்கும் அதே தண்டனையை, முறைப்படி வரி செலுத்திச் செல்லும் எனக்கும் தண்டனையை வழங்குவது முறையல்ல. இந்தச் செயலில் அதிகாரிகள் சற்றுப் பரந்த மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும். அத்துடன், ஜி.எஸ்.டி-யின் விதிமுறைகளில் இன்னும் எளிதான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.’’

இனியாவது ஜி.எஸ்.டி தொடர்பான பிரச்னைகளில் சிக்காமல் இருப்போம்!

- துரைராஜ் குணசேகரன்

படம்: ப.பிரியங்கா