Published:Updated:

`வாழ்வதா..சாவதா என்றே தெரியவில்லை!’ - பட்டாசுத் தொழிலாளர்களின் 3 நாள்கள் காத்திருப்புப் போராட்டம்

`வாழ்வதா..சாவதா என்றே தெரியவில்லை!’ - பட்டாசுத் தொழிலாளர்களின் 3 நாள்கள் காத்திருப்புப் போராட்டம்
`வாழ்வதா..சாவதா என்றே தெரியவில்லை!’ - பட்டாசுத் தொழிலாளர்களின் 3 நாள்கள் காத்திருப்புப் போராட்டம்

சிவகாசி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளைத் திறக்கக் கோரி பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் 3வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் அதுசார்ந்த உபதொழில்களை நம்பி இருப்பவர்கள் என அனைவரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எனவே, ஆலைகளை திறக்கக் கோரி தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். ஆனால், தீர்வு மட்டும் கிடைக்கவேயில்லை.

பட்டாசு உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் திங்கட்கிழமை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இறுதி நாளான இன்று குழந்தைகள், இளைஞர்கள் உட்பட சுமார் 4,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

100 நாள்களாக ஆலைகள் திறக்கப்படாத காரணத்தால் வேலையின்றி குடும்பத்தை நடத்தவே மிகுந்த சிரமப்படுகிறோம். வாழ்வதா? சாவதா? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பட்டாசு மீதான கட்டுப்பாடுகளை நீக்கி உடனடியாக ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையே பட்டாசுத் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் முன்வைத்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் போராட்ட மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் மைதானத்துக்கு நேரில் வந்து போராட்டம் நடத்துபவர்களைச் சந்தித்தார்.

அப்போது சுற்றுச்சூழல் விதி 3பி-ல் இருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு பெற சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். அதுவரை தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை வருவாய் கோட்டாட்சியரிடம் அவர்கள் வழங்கினர்.