Published:Updated:

த்ரில், காதல், கின்னஸ்... கோவை ஜோடியின் டிராவல் அனுபவம்!

த்ரில், காதல், கின்னஸ்... கோவை ஜோடியின் டிராவல் அனுபவம்!
த்ரில், காதல், கின்னஸ்... கோவை ஜோடியின் டிராவல் அனுபவம்!

ஊட்டியில் இருக்கும் கோரசிம்மா எனும் கிராமத்தில் வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பெண் பிரின்சி. இவருக்கு சன் டிவியே 8  ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியுமாம்! சென்னையில் படிப்பை முடித்துவிட்டு, சத்தியமங்கலம் ஈரோடு பகுதியில் இருக்கும் பழங்குடிகளோடு வேலைசெய்பவர் அஜய். இருவருக்கும் காதல். திருமணத்தில் முடிந்த காதல், இப்போது பயணத்தில் தொடர்கிறது. அஜய், பிரின்சி இருவரும் இந்தியாவின் பல இடங்களுக்கு ஒன்றாகப் பயணிக்கிறார்கள். பயணத்தில் கின்னஸ் சாதனையும் புரிந்திருக்கிறார்கள்.

``எங்களின் ஒவ்வொரு பயணமும், சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை... காதலின் ஆழத்துக்கும் எங்களைக் கூட்டிச்செல்கிறது'' -  

``டூர் போல ரிசார்ட்டுல தங்கிட்டு வர்றா மாதிரி இல்லாம, ஒவ்வொரு பயணமும் வாழ்நாள் நினைவுகளைத் தரணும். அதுதான் எங்களுக்கு முக்கியம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் காட்டுல 10 நாள் நக்ஸல்களோடு நடந்து போனோம். அவங்க நக்ஸல்னு எங்களுக்குத் தெரியாது. எங்களை சொந்தக்காரங்கபோல பார்த்துக்கிட்டாங்க. 7 யுனெஸ்கோ இடங்களுக்கு, 12 மணி நேரத்துக்குள்ள பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல போயிட்டு வந்தோம். இதுக்காக எங்களுக்கு கின்னஸ் ரெக்கார்டு கிடைச்சது. -30 டிகிரி குளிர்ல வாழ்ந்தா எப்படி இருக்கும்கிற அனுபவத்துக்காக போன மாசம் லடாக் போனோம். இந்தியாவோட பல வரலாறு பேசக்கூடிய முக்கியமான கோட்டைகளுக்கு, கோயில்களுக்கு, குகைக்கும் போயிருக்கோம். இப்போ, தமிழ்நாட்டை சைக்கிள்ல சுத்தி வர்றோம்."

``உங்களோட முதல் பயணம் பற்றிச் சொல்லுங்க?''

``காதலிக்கும்போது எந்த இடத்துக்கும் போனதில்லை. மே 17, எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. ஜூன் 3-ம் தேதி எங்க முதல் பயணத்தை ஆரம்பிச்சோம். பைக்ல லே-லடாக் போகலாம்னு அஜய் சொன்னார். சென்னைபோல அதுவும் ஒரு ஊர்னு நினைச்சு ஆர்வமா கிளம்பிட்டேன். வாழ்க்கையிலேயே அதுதான் என் முதல் பயணம். எவ்வளவோ ஊர்களுக்குப் போயிட்டு வந்துட்டோம். அந்த அனுபவம் மட்டும் இன்னும் மறக்க முடியலை" என்று ஆர்வமாகப் பேசத் தொடங்கினார் பிரின்சி.

`` `ரோஜா' படம் பார்த்துட்டு, ஸ்னோ பார்க்கணும்னு சொன்னாங்க. `ஸ்னோதானே வா பார்க்கலாம்'னு லடாக் கூட்டிட்டுப் போயிட்டேன். மண் சரிவையெல்லாம் பார்த்து செமயா பயந்துட்டாங்க. அப்போதான் முதல்முறையா சண்டைபோட்டோம். பயங்கர அழுகை. `இப்போவே வீட்டுக்குப் போகலாம்'னு கூப்பிட்டாங்க. எங்களோட முதல் சண்டை அது. ரொம்பப் பெரிய சண்டையும்கூட. அதுக்குப் பிறகு எவ்வளவோ மோசமான பிரச்னைகளைச் சந்திச்சிட்டோம். ஆனா, அந்தச் சண்டைபோல ஒரு பெரிய சண்டை இதுவரை வந்ததில்லை. வரவும் போறதில்லை" என்றார் அஜய்.

``உங்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவம் எந்த ஊர்ல?''

``தாஜ்மஹாலைப் பார்த்துட்டு ஃபதேபூர் சிக்ரி கோட்டைக்குப் போனோம். கொஞ்ச தூரம் போன பிறகு பைக்ல எங்களைத் துரத்தினாங்க. ஒரு போலீஸ் செக் போஸ்ட்ல நின்னு `என்ன வேணும்?'னு கேட்டேன். இதுக்கு மேல நீங்க போகணும்னா லோக்கல் கைடைக் கூட்டிட்டுப் போணும். `5,000 ரூபாய் கொடு'னு கேட்டாங்க. `முடியாது'னு சொல்லிட்டு, பைக் எடுத்திட்டுக் கிளம்பிட்டோம். திரும்பவும் துரத்தினாங்க. அந்தக் கோட்டைக்குப் போன பிறகு வேற ஒருத்தன் வந்து `500 ரூபாய் கொடுங்க. இடத்தைச் சுத்திக்காட்டுறேன்'னு கேட்டான். வேணாம்னு சொல்லிட்டேன். வேற ஒருத்தன் வந்து `100 ரூபாய் குடுங்க'னு கேட்டான். சரி போங்கடானு குடுத்திட்டு வந்துட்டேன். அந்த இடத்துக்குப் போக காசு எதுவும் கொடுக்கத் தேவையே இல்லை. அங்க ஜோடியா யாராவது போனா பைக்ல துரத்துவாங்கனு, பணம் பறிப்பாங்கனு பிறகுதான் தெரிஞ்சிக்கிட்டோம்" என்றார்கள்.

``குடும்பமும் சமூகமும் உங்க மேல வைக்கிற பார்வை?''

``நாங்க பயணம் பண்றது மட்டுமல்ல, கூட இருக்கிறவங்களையும் பயணம் பண்ணச் சொல்றோம். `இவங்களுக்கு வேற வேலையே இல்லை. எப்பப்பாரு சுத்திட்டு இருக்காங்க. நம்மையும் சேர்ந்து சுத்தச் சொல்றாங்க'னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. நீங்க தனியா போற 60 கி.மீ தூரத்தை மறந்துடுவீங்க. ஆனா, காதலியோடு போற 500 மீட்டரை வாழ்நாள் முழுக்க ஞாபகம் வெச்சிருப்பீங்க. அப்போ பேசுற அந்த விஷயங்கள், உங்களை நீங்க யார்னு காட்டும். அந்தப் பயணத்துல உங்களுக்குக் கிடைக்கிற அன்பு ரொம்ப உண்மையா இருக்கும். அதனாலதான் பயணம் முக்கியம்னு சொல்றோம்" என்கிறார் அஜய்.

`` `குழந்தை எப்போ, குழந்தைக்கு ஏதாவது சேர்த்துவெச்சிருக்கியா?' இந்த மாதிரி கேள்வியெல்லாம் நிறைய சந்திக்கிறோம். நாங்களும் ஒரு குழந்தைக்குத்தான் காத்திருக்கிறோம். அந்தக் குழந்தையோடு இந்தியா முழுக்க எப்போ போகப்போறோம்னு வெயிட் பண்றோம். காசு, பணம் எல்லாம் எங்ககிட்ட பெருசா இல்லை. நாங்க எங்க குழந்தைக்குச் சேர்த்துவைக்கிறது எல்லாம் எங்க பயணத்துல சந்திக்கிற மக்களையும் அவங்களுடைய அன்பையும்தான். எங்களுக்குக் கிடைக்கிற காதல், எங்க குழந்தைக்கும் கிடைக்கணும்" என்கிறார் பிரின்சி. 

இரண்டு ஆண்டுகள் ஒன்றாகப் பயணம் செய்த பிறகு, இப்போது பிரின்சிக்குத் தனியாக ஒரு பயணம் போகவேண்டும் என ஆசையாக உள்ளதாம். ``எனக்கு பிரின்சியோடு போறது ரொம்பவே பிடிச்சிருக்கு. தனிப் பயணம் வேண்டாம்" என்கிறார் அஜய். `ஒரு கவிஞனின் அடுத்தடுத்த மனநிலைதான் இந்த உலகிலேயே அதிக முரணானது' என்பார்கள். காதல் ஒரு கவிஞன். அவன் யாருக்குமே சொந்தமில்லை. ஆனால், அவனுக்கு எல்லோருமே சொந்தம்!