Published:Updated:

`கொறடா...உன் உடம்பைக் கொஞ்சம் குறைடா' - வைகைச்செல்வன் குடும்பக் கலாட்டா

`கொறடா...உன் உடம்பைக் கொஞ்சம் குறைடா'  - வைகைச்செல்வன் குடும்பக் கலாட்டா
`கொறடா...உன் உடம்பைக் கொஞ்சம் குறைடா' - வைகைச்செல்வன் குடும்பக் கலாட்டா

.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், காதலர் தினத்தையொட்டி, தன்னுடைய வாழ்வில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

``பச்சையப்பன் கல்லூரி மாணவன் நான். செல்லம்மாள் காலேஜில் படித்துக்கொண்டிருந்த மலர்க்கொடியைக் காதலித்தேன். தமிழின் மீதிருந்த தீரா ஆர்வத்தினால், காதல் கவிதைகளை எழுதிக்குவித்தே காதல் வளர்த்தேன். திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, `இப்போது வேண்டாமே...’ என்று இருவர் வீட்டிலுமே தடுத்தார்கள். பிடிவாதமாக இருந்து திருமணம் செய்துகொண்டோம்! ஆனாலும்கூட பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் எழவில்லை... காரணம் மலர்க்கொடி என் சொந்த அத்தை மகள்!’’ - சஸ்பென்ஸ் உடைத்துச் சிரிக்கிறார் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன்.

``மதுரையிலுள்ள சிலைமலைப் பட்டி கிராமம்தான் என் சொந்த ஊர். சிவகாசி பக்கம் திருத்தங்கல்லில் இருந்த என் அத்தை வீட்டுக்குப் பள்ளி விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு போய்வருவோம். அப்படிப் போய்வந்தபோதுதான் எனக்கு மலர்க்கொடி பழக்கமானாள். அப்போது எங்களுக்குள் பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. ஆனால், நான் வளர்ந்து பெரியவனாகி கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்துவிட்ட பிறகு, இரண்டு ஆண்டுகள் அத்தை வீட்டுக்கும் போகவில்லை; மலர்க்கொடியையும் பார்க்கவில்லை. 

திடீரென ஒருநாள் மலர்க்கொடியும் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகுதான், அவரைச் சந்தித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகான அந்த முதல் சந்திப்பில்தான் அவர் மீது இனம் புரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்பிறகு நாங்கள் தினமும் சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம்...  என் தமிழார்வத்தை எல்லாம் கவிதைகளாக்கி மடல் எழுதுவேன். 

திடீரென ஒருநாள் என் காதலைத் தெரிவித்தேன்... எந்தவித யோசனையும் இன்றி சட்டென்று அந்தக் காதலை ஏற்றுக்கொண்டாள் மலர்! அதற்கான காரணத்தைப் பின்னாளில் அவர் என்னிடம் சொன்னபோதுதான் தெரிந்துகொண்டேன்... `என்னைவிடவும் என் தமிழ்தான் மலர்க்கொடிக்கு ரொம்பவும் பிடித்தது’ என்ற ரகசியத்தை...’’ - நினைவுகளை மீட்டெடுக்கும் வைகைச்செல்வனின் பேச்சை அருகிலிருந்து ஆமோதித்த அவரது மனைவி மலர்க்கொடி,

``உண்மைதான்... மாமாவின் தமிழ்தான் என்னைக் கட்டிப்போட்டது. அதனாலேயே அப்போதெல்லாம் பேனா, புக்ஸ் என்று சிம்பிளான கிஃப்ட்களை வாங்கிக் கொடுத்து என்னைச் சமாளித்துவிட்டார். காதலித்தபோதும், திருமணமான பின்பும்கூட ஜோடியாக நிறைய  பயணங்கள் செய்வோம். டூ வீலரிலேயே மாமல்லபுரத்துக்குச் சென்று வந்தது என் வாழ்வின் மறக்கமுடியாத நிகழ்வு. 

திருமணமான புதிதில், உதயம் தியேட்டரில் `பூவே உனக்காக...’ படத்துக்கு மாமா அழைத்துச் சென்றது இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது. காதல் கல்யாண பரிசாக நற்றிணை, நற்றமிழ் என எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். 

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பிறகு, குடும்பத்தோடு அவர் செலவழிக்கிற நேரம் ரொம்பவும் குறைந்துவிட்டது. கட்சிக் கூட்டங்கள், சந்திப்புகள் இல்லாமல் அரிதாக என்றாவது இவர் வீட்டில் இருக்கும் நாள்தான் எனக்கும் குழந்தைகளுக்கும் திருநாளாக இருக்கும். குழந்தைகள் அப்போது கூடுதலாக சேட்டை பண்ணுவார்கள். பொறுத்துக்கொள்ள முடியாமல், `உங்களையெல்லாம் எங்காவது ஹாஸ்டல்லதான் சேர்த்துவிடணும்’ என்று நான் திட்டினால், `அப்படியே அம்மாவையும் உமன்ஸ் ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க அப்பா... நீங்க நிம்மதியா இருக்கலாம்’ என்று என்னையே கலாய்ப்பார்கள்’’ என்று புன்னகைக்கிறார் மலர்க்கொடி.

``கிண்டல் செய்வதில், அம்மா - அப்பா என்ற பேதம் எல்லாம் பார்ப்பதில்லை என் மகள்கள். கட்சி வேலையாக குடும்பத்தைப் பிரிந்து நான் அடிக்கடி வெளியூர் செல்வதைக் கண்டித்து, `அப்பாவுக்கு டெய்லி ஊரு... எங்களுக்கு டெய்லி போரு...’ என்று கவிதையாகத் திட்டியிருக்கிறார்கள். 

என் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக என் மனைவி மலர் ரொம்பவே மெனக்கிடுவாள். நானும்கூட கடுமையான டயட், உடற் பயிற்சி என்று முதல் பத்து நாள்கள் தீவிரமாக இருப்பேன். பின்னர் மறுபடியும் கட்சிக் கூட்டங்கள், வேளை தவறி சாப்பிடுவது என்று பழைய கதைக்குத் திரும்பிவிடுவேன். இதற்காகவே எங்களிருவரிடையே அடிக்கடி சண்டை நடக்கும். ஆனால், இதைக்கூட நகைச்சுவையாக்கிவிட்டார்கள் என் மகள்கள். அரசுத் தலைமைக் கொறடாவாக என்னை நியமனம் செய்திருந்த நாளன்று, 
`கொறடா... உடம்பைக் கொஞ்சம் குறைடா’ என வாழ்த்துக் கவிதை எழுதிவிட்டாள் என் மூத்தமகள்!’’ என்று முகம் மலரும் வைகைச் செல்வனோடு மலர்க்கொடியும் கைகோத்துப் புன்னகைக்க.... கவிதையாகிறது அந்தக் காதல் ஜோடி!