Published:Updated:

ஆதியில் காதல் மட்டும் இருந்தது! - ஒரு கடிதமும் அதன் மறுமொழியும்

இரவின் ரேகை அனைவரையும் வியாபிக்கும் பாரபட்சமற்றது. கடவுளும் தெருவிளக்கின் கீழேதான் நின்றுகொண்டிருக்கிறார். ஆக, ஒவ்வொரு முறையும் மீண்டுக் கரையேறுவது நீ மட்டுமல்ல!

ஆதியில் காதல் மட்டும் இருந்தது! - ஒரு கடிதமும் அதன் மறுமொழியும்
ஆதியில் காதல் மட்டும் இருந்தது! - ஒரு கடிதமும் அதன் மறுமொழியும்

நினைவுகளின் பசுமை தாங்கிய இளவேனில் காலத்திற்கு...

விடைகொடுத்தலே ஆகச்சிறந்த கதைசொல்லி. கொண்டிருந்த காதலின் கனத்தை அப்படியே கடத்துவது இருவருக்குள்ளான நெருக்கமோ நினைவுகளோ அல்ல, விடைகொடுத்தலும் அதன் நிமித்தமும்தான்! அப்படியொரு தருணம் நமக்குள் நிகழ்ந்து சிலகாலமாகிவிட்டன. பிரியப்பட்டவர்களுக்கு இறுதி விடை கொடுத்துவிட்டு எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் எடை அதிகம். உள்ளிருந்து உடைந்து சிந்தும் உயிரின் ஒரு பகுதி அங்கேயே தங்கிவிடும், நெடுஞ்சாலையில் சிக்கி உருக்குலைந்துபோன குருவியின் கடைசி மிச்சம் வண்டித்தடங்களாகப் பதிந்திருப்பதுபோல! நானும் அப்படித்தான். நம் இறுதிச் சந்திப்பு நிகழ்ந்த இடத்தில் இன்னமும் மிச்சமிருக்கிறேன்.

நாற்சந்தியில் சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் குழந்தையின் கன்னக்கதுப்பில், குறுகுறுப்பாய் காலில் ஊறி நெகிழும் பூனையின் விளையாட்டில், எற்பாடில் காரணமின்றி சூழும் வெறுமையில், ரசித்துச் சுவைக்க ஆளின்றி தனித்து தட்டில் விடப்பட்டிருக்கும் பண்டத்தில் என எதிர்ப்படும் எல்லாமுமே கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கின்றன நின்னை! ஆனாலும் பகல் நேர்ந்துள்ள பணிகளின் வழியே அப்பிம்பங்கள் சிலவற்றிலிருந்து விடுவித்துக்கொள்கிறேன். பிழைத்திருத்தல் ஏனோ பலிக்கிறது பகற்பொழுதுகளில்!

இரவுகள் மெலிதாய் கிசுகிசுக்கும் வாடைகளுக்கானவை. இரவுகள் பரபரத்து அடங்கும் இச்சைகளுக்கானவை. இரவுகள் களைத்துச் சயனிக்கும் உடல்களுக்கானவை. இரவுகள் மனத்திரையில் எழும் கோர்வையற்ற காட்சிகளுக்கானவை. இரவுகள் ஒலி வழி உரையாடல் நிகழ்த்தும் ஏனைய உயிர்களுக்கானவை. இரவுகள் இசைக்கானவை. இரவுகள் நமக்கானவை. ஆனால் நிச்சயம் எனக்கானதல்ல! இரவின் ரேகை முழுக்க உன் தடங்கள். இரவின் இசை நிகழ்த்தும் சம்பாஷணையில் தோற்று வதைபட்டு கரையேறுவதே ஒவ்வொருமுறையும் பெருஞ்சாதனையாக இருக்கிறது. 

பிரிவென்பது அவ்வப்போது நிகழும் குறுங்கால மரணம். பிடித்தமான பக்கங்களை உணவாக்கிக்கொள்ளும் ஒட்டுண்ணி. மணல்வீட்டை கலைத்துப்போடும் நுரைச்சிதறல்கள். இங்கே பிரிவை தங்கள் இருப்பால் நிரப்ப வருபவர்களுக்குக் கடலில் வீழும் மழைத்துளியின் விதியே வாய்த்திருக்கிறது. என்ன செய்வது? காலம் மின்னல்வேகத்தில் யுகங்களாகக் கடந்தாலும் அதைக் காட்டும் முட்கள் தேங்கிப் போயிருப்பது ஒரு வட்டத்திற்குள்தானே! போலவே நானும் கடந்தகாலத்தில் தேங்கிப்போய்விட்ட படிமமாக. இனி முடிவென ஒன்று நிகழ்ந்தாலும் அது ஊனுக்கானதாய் மட்டுமே இருக்குமெனத் தோன்றுகிறது. பேதங்களுக்கு அப்பாற்பட்ட காதல் சூழ்வெளியில் என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்பதோடு முடியட்டும் எல்லாம்!

                                                                                                                                                                                                                          இப்படிக்கு,
                                                                                                                                                                                                   பழுப்பேறிப்போய்விட்ட விருட்சம்.

வெறுமையில் உழலும் விருட்சத்திற்கு...

பேரழகான முடிவுரை எல்லாக் கதைகளுக்கும் வாய்ப்பதில்லை. நம் கதையின் முடிவுரை எதுவென்பது இனி நிகழ்வனவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இறுதி விடைகொடுத்தல் என இங்கே எதுவுமில்லை. நினைவுகளில் நினைத்தபோதெல்லாம் உருக்கொள்பவர்களுக்கு ஏது விடைகொடுத்தல் எல்லாம்? பட்டாம்பூச்சிகள் யாராலும் எப்போதும் சொந்தம் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், விரலிடுக்கில் அவை விட்டுச்செல்லும் வண்ணங்கள் நமக்குக் கிடைக்கும் அன்பின் பரிசு. நம் சந்திப்பு நிகழ்ந்த இடத்தில் நீ விட்டுச்சென்ற உன்னின் மிச்சமும் அன்பின் பரிசுதான். அதை பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கிறேன்.

எதிர்ப்படும் எல்லாவற்றிலும் சாயலைத் தேடுவது நீ மட்டுமல்ல! உறுதிபடா தசைகளின் விளைவால் விழுந்து தவழ்ந்து மீண்டும் எழும் குழந்தையின் நடையில், ஜன்னல்கம்பிகளுக்கு ஊடாக இடைநில்லாமல் உருண்டோடும் நீர்த்திவலைகளின் விளையாட்டில், பிரவாகமாய் ஆட்கொள்ளும் வயலின் நரம்புகளின் அதிர்வுகளில், தூரத்து மவுனப் பெருவெளியில் அமர்ந்து அழைப்பு விடுக்கும் மலைக்காட்டில் என உன் சாயல்களை நானும் எதிர்கொள்கிறேன். ஆனால், நான் காண்பனவற்றில் ஒரு வித்தியாசம் உண்டு. அவை பிழைத்திருத்தலுக்கானவை அல்ல, பூரணமாய் வாழ்தலுக்கானவை!  

இரவுகள் கொண்டாட்டத்திற்கானவை. இரவுகள் பூச்சுகளற்ற நிர்வாணத்திற்கானவை. இரவுகள் குவிந்துகிடக்கும் கோளங்களின் பிரமாண்டத்திற்கானவை. இரவுகள் நம் அற்பங்களைச் சுட்டுபவை. இரவுகள் இசைக்கானவை. இரவுகள் வெள்ளிக்குப் பின் மேகங்கள் பூசிக்கொள்ளும் வண்ணங்களுக்கானவை. இரவுகள் புதுவிடியலுக்கானவை. எனவே இரவுகள் உனக்கானவையும் கூட! இரவின் ரேகை அனைவரையும் வியாபிக்கும் பாரபட்சமற்றது. கடவுளும் தெருவிளக்கின் கீழேதான் நின்றுகொண்டிருக்கிறார். ஆக, ஒவ்வொரு முறையும் மீண்டுக் கரையேறுவது நீ மட்டுமல்ல!

பிரிவென்பது மரணமில்லை. புத்தன் இடை தாங்கிய போதி அது. ஓர் இடைவெளிவிட்டு மீதியையும் எழுதத்தூண்டும் புத்தகம் அது. பிரிவை நிரப்ப வருபவர்கள் கடலில் வீழும் மழைத்துளிகளல்ல. ரயில் பிரயாணிகள்! சிலவற்றைக் கொடுத்தும் சிலவற்றை எடுத்தும் செல்வார்கள். கூண்டிலிருந்து விடுபடும் பறவை திரிந்து களிக்க பெருவானமிருக்கிறது. கூண்டைச் சுமத்தல் இனியும் நியாயமில்லை. மீண்டும் ஓர் இளவேனிற்காலம் வரும் காய்ந்துகிடக்கும் உன் இலைகளுக்கு ஒளிச்சேர்க்கையூட்ட! அதுவரை காத்திரு! காத்திருத்தல்தானே காதலின் ஊற்று! வாழ்ந்திரு, ஊற்றில் மீண்டும் மூழ்கி எழ! இக்கடிதம் பழுப்பேறிப் பட்டுப்போன விருட்சத்திற்கு மட்டுமல்ல, காதலால் உள்ளும் புறமும் மாயும் அத்தனை உயிர்களுக்குமானது. காதலின் வாழ்த்துகள்!

                                                                                                                                                                                                                   இப்படிக்கு...
                                                                                                                                                                               வசந்தம் எதிர்நோக்கும் இளவேனிற்காலம்.