Published:Updated:

20 வருடங்கள் முன்பு கோவை குண்டு வெடிப்பு! - அன்று என்ன நடந்தது?

20 வருடங்கள் முன்பு கோவை குண்டு வெடிப்பு! -  அன்று என்ன நடந்தது?
20 வருடங்கள் முன்பு கோவை குண்டு வெடிப்பு! - அன்று என்ன நடந்தது?

பிப்ரவரி 14... உலகமே கொண்டாட்டத்தில் இருக்கிற சமயம். ஆம், காதலர் தினம். மற்றவர்களுக்கு வேண்டுமானால் அந்த தினம் கொண்டாட்டமாக இருக்கலாம். கோவையைப் பொறுத்துவரை, அந்த நாள் கறுப்பு தினம். கோவையில் நவம்பர் 29,1997 அன்று செல்வராஜ் என்ற காவலர் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்கள்தாம், 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் கலவரமாக மாறியது. நான்கு நாள்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பால் கோயம்புத்தூரை உற்றுநோக்க ஆரம்பித்தது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எல்.கே.அத்வானி கோவை வருகிறார். பி.ஜே.பி வேட்பாளார் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேச வந்த அத்வானிக்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. அவரின் விமானம் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் அவருடைய உயிர் தப்பியது எனலாம். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் யாரைக் குறி வைத்து நடத்தப்பட்டது என்பதெல்லாம் வரலாறு. கலவரத்தின் ரத்தம் உறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் நேரடி சாட்சியங்கள் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனச் சிலரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

கோவை குண்டுவெடிப்பு தொடர்பான ஆவணப் புத்தகத்தை எழுதியிருக்கும், `மௌனத்தின் சாட்சியங்கள்’ ஆசிரியர் சம்சுதீன் ஹீரா கூறுகையில், 

``1980 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் நடந்த மதமோதல்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். இது மட்டுமல்லாமல் பத்திரிகை செய்திகள், முதல் தகவல் அறிக்கை அனைத்தும் அறிந்துகொண்டு குண்டுவெடிப்பு பற்றி ஆவணப்படுத்தினேன். கலவரத்தைப் பற்றி ஆய்வுசெய்த கோகுல கிருஷ்ணா கமிட்டியின் இரு ஆய்வறிக்கைகளைப் படித்த பின் ஒரு புரிதல் வந்தது. பிரச்னையின் தொடக்கமாகக் கருதப்படும் தியாகி குமரன் சந்தை, இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வியாபார மையமாக விளங்கியது. சில நேரங்களில் வியாபாரிகளுக்கிடையே முரண்கள் ஏற்படுவதும் உண்டு. அவர்கள் அதைச் சங்கத்திலேயே பேசிச் சரி செய்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. மார்க்கெட் பகுதிகளில் மாமூல்
வாங்கும் அமைப்பாகக் காவலர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பிரச்னைகள் செய்யும் அல்-உம்மா என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பு மாமூல் தர மாட்டோம் என்கிற கொள்கையுடன் செயல்பட்டு வந்தது. இவர்கள் காவல் மேலதிகாரியைச் சந்தித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதனால் காவலர்கள் அல்-உம்மா என்ற அமைப்பின் மீது கோபம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.’’
ஒரு நாள் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் மோட்டார் வண்டியில் போகும்போது செல்வராஜ் என்ற காவல் அதிகாரி, அவர்களை விசாரிக்கிறார். `ஓட்டுநர் உரிமம் இல்லை' என்ற காரணத்தைக் காட்டி, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதையடுத்து அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த அன்சாரி, காவல் நிலையத்துக்கு வருகிறார். அவரை அவமானப்படுத்தியதாக வெளியில் தவறான வதந்தி பரப்பப்படுகிறது. இதன் விளைவாகக் காவல் அதிகாரி செல்வராஜ், கத்தியால் குத்தப்பட்டு இறந்துவிடுகிறார். அந்தக் கொலையை அடுத்து நிறைய சம்பவங்கள் நடந்தேறின. காவலர்கள் தங்களின் குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்துகொண்டு பல்வேறு கலவரங்களில் ஈடுபட்டார்கள். கலவரத்தில் சகோதர்களை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் எனப் பலர் இருந்தனர். அரசு ஏதும் தங்களுக்குச் செய்யவில்லை என்கிற விரக்தியில் இருந்தவர்களை, எப்படியோ பேசி அல்- உம்மா இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்கள். அதன் விளைவாக, பிப்ரவரி 14,1998 தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 40 முதல் 50 பேர் இருந்த அல்- உம்மா அமைப்பு கலவரத்துக்குப் பிறகு 200 பேர் கொண்ட அமைப்பாக மாறியது. குண்டு வெடிப்புக்குப் பிறகு அல்-உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டது. அதில் இருந்தவர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு 10 முதல் 12 ஆண்டுகள்வரை சிறைவாசம் அனுபவித்தார்கள். பிறகு விடுவிக்கப்பட்டார்கள்" என்று ஆவணங்களை விவரிக்கிறார்.

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் கூறுகையில், ``நவம்பர் 27 காவலர் செல்வராஜ் கொலைசெய்யப்பட்ட சமயத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடத்தியதாக என் மீது இரு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றேன். பிப்ரவரி 14 அன்று கோவை மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், கடைவீதி, வணிக வளாகம், பேருந்து நிலையம், உக்கடம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டன. இதற்கு முழுக் காரணம் அல்-உம்மா அமைப்பு’’ 

என்றார். 

ஆ.கரீம் என்பவர் எழுதிய `தாழிடப்பட்ட கதவுகள்' கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தின் மற்றுமொரு சாட்சியம். ஒவ்வொரு சம்பவத்தையும் கண் முன்னே வரும்படி எழுதியுள்ளார். கோவை அரசு மருத்துவமனை முன்பு நடக்கும் கலவரம், பல பேர் கூடியிருக்கும் இடத்தில் ஒரு வாலிபரை மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தி, அவரின் ஆணுறுப்பை அறுத்து எறிவது, தீயில் கொளுத்துவது, சாலையில் போவோர் வருவோரை `இந்துவா, முஸ்லிமா?' என விசாரிப்பது என்று கலவரத்துக்குக் காரணமான பல முக்கிய விஷயங்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 

கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரத்தத் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன ஆனால், அந்தக் கொடூரச் சம்பவம், நம் மனதில் விட்டுச் சென்ற ரணங்களையும் தடயங்களையும் சட்டத்தின் எந்தப் பிரிவைக் கொண்டு ஆற்றுப்படுத்திவிட முடியும்...?