Election bannerElection banner
Published:Updated:

காதலர் தினத்தை இனிப்பாக்கும் சாக்லேட்டின் மகத்துவம் தெரியுமா? #ValentinesDay

காதலர் தினத்தை இனிப்பாக்கும் சாக்லேட்டின் மகத்துவம் தெரியுமா? #ValentinesDay
காதலர் தினத்தை இனிப்பாக்கும் சாக்லேட்டின் மகத்துவம் தெரியுமா? #ValentinesDay

`தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். ஆரோக்கியமாக இருக்கத் தினமும் சாக்லேட் சாப்பிடுங்கள்' என்று கூறுகிறது அந்த ஆய்வு.

ளம் தலைமுறையை வசீகரிக்கும் பண்டிகையாக மாறியிருக்கிறது காதலர் தினம்! ஒரு மாதத்துக்கு முன்பாகவே கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிடுவார்கள். `இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு என்ன வண்ணத்தில் உடை உடுத்தலாம்', `என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம்', `மனதுக்குப் பிடித்தவர்களிடம் காதலை எப்படிக் கவித்துவமாகச் சொல்வது' என்றெல்லாம் யோசனை நீண்டுகொண்டே இருக்கும். காதலர் தினத்தில் பொதுவாக இரண்டு விஷயங்கள் தவறாமல் இடம்பிடிக்கும். அவை, ரோஜா பூக்களும் சாக்லேட்டுகளும்தாம். பூக்களின் வழியாகக் காதலை வெளிப்படுத்தி, சாக்லேட் வழியாக அதை உறுதி செய்வார்கள்.

காதலர்களை மனதில் வைத்துத்தான் காதலர் தினத்துக்கென்று புதிது புதிதாக சாக்லேட்டுகள் ஆண்டுதோறும் களமிறக்கப்படுகின்றன. வண்ண நிறத்திலான கவர்களில் சுற்றிய சாக்லேட்டுகளைச் சுவைக்கும்போது, அதன் வரலாறு குறித்து யோசிப்பதில்லை. சாக்லேட் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன.

* அமெரிக்காவின் ஒரு பகுதியான `மெஸ்ஸோ அமெரிக்கா'வில்தான் முதன்முதலில் கசப்பான சுவையில், நறுமணப்  பொருள்கள், மக்காச்சோள சாறு சேர்த்து காரமான பானமாகப் பருகப்பட்டது.

* மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த மக்களின் அசுடெக் மொழியில் உள்ள `ஸோகொட்டல்' (Xocoatl)என்ற வார்த்தையிலிருந்துதான் `சாக்லேட்' என்ற வார்த்தை உருவானது. `ஸோகொட்டல்' என்ற வார்த்தைக்கு `கசப்பான பானம்' என்று பொருள்.

* முன்நவீன கால லத்தீன் அமெரிக்க நாடுகளில் சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கொக்கோ விதைகள் பணத்துக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டன.

* 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சாக்லேட்டுடன் இனிப்பைச் சேர்த்து பானமாகப் பருகத் தொடங்கினர்.

* நாம் இன்று சாப்பிடும் மார்டன் சாக்லேட் வகையை 1847-ம் ஆண்டு ஜோசப் ஃப்ரை என்ற டச்சுக்காரர்தான் உருவாக்கினார்.

* சாக்லேட் பார்களை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த கேட்பரி நிறுவனம் தயாரித்தது. 

* வெள்ளை நிற `மில்க் சாக்லேட்' கொக்கோ வெண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெஸ்லே நிறுவனம்தான் முதலில் மில்க் சாக்லேட்டைத் தயாரித்தது.

சாக்லேட் என்ற ஒரு விஷயம் உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என்றே கூறலாம். அனைத்து நாடுகளிலும் அனைவராலும் விரும்பப்படும் பொருளாக இருக்கிறது சாக்லேட். ஆனால் சாக்லேட் என்ற பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருளாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. இதைத் தகர்க்கும் வகையில், அண்மையில் இத்தாலியைச் சேர்ந்த லாக்யுலா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் ருசிகரமாக இருந்தன. 

`தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். ஆரோக்கியமாக இருக்க தினமும் சாக்லேட் சாப்பிடுங்கள்' என்று கூறுகிறது அந்த ஆய்வு. `தினமும் நொறுக்குத்தீனியாக சாக்லேட் சாப்பிட்டால் அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து மனிதனின் மூளையைக் காப்பாற்ற முடியும். டார்க் சாக்லேட் வகைகள் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. இது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. வயதானவர்கள் நினைவாற்றலை இழக்கும் டிம்னிஷியா நோயையும் தடுக்கும் ஆற்றல் சாக்லேட்டுக்கு உள்ளது. சாக்லேட்டில் இருக்கும் ஃபிளாவோனாய்டு' (Flavonoid) என்ற நிறமி இதயத்தையும் பலப்படுத்துகிறது' என்று இனிப்பான பல முடிவுகளை வெளியிட்டுள்ளனர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். `தினமும் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை, அதுவும் டார்க் சாக்லேட்டாக இருந்தால் மிகவும் நல்லது' என்று தெரிவித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உணவியல் நிபுணர் ஆர்.கே.நித்தியஸ்ரீ சாக்லேட்டின் மகத்துவம் குறித்து விரிவாகப் பேசினார்.

``சாக்லேட்டில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது. எனவே, அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பருமன், பல்

சொத்தை மற்றும் பற்களில் நிறம் மாற்றம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். எனவே, சாதாரண சாக்லேட்டுக்குப் பதில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. டார்க் சாக்லேட்டில் 70 சதவிகிதம் கொக்கோ உள்ளது. கொக்கோவில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இதய நோய்களைத் தடுக்க உதவும். மூளைக்குப் புத்துணர்ச்சியைத் தரும். இதை, குறிப்பிட்ட அளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். வாரத்திற்கு இரண்டு நாள்கள் 30-50 கிராம் (இரண்டு பார்) அளவுக்குச் சாப்பிடலாம். 

குழந்தைகள் சாக்லேட் சாப்பிட்டதும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். தூங்குவதற்கு முன் சாக்லேட்டைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பெரியவர்களும் இரவு நேரத்தில் சாக்லேட்டைத் தவிர்ப்பது நல்லது. இதில் இருக்கும் `கஃபைன்'  தூக்கமின்மையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அவ்வப்போது சிறிதளவு சாக்லேட் சாப்பிடலாம்" என்றார். 

`அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது நாமறிந்ததே. எதையும் அளவோடு சாப்பிடும்போது அதன் பயனை முழுமையாக அடைய முடியும். இதுவும் அப்படித்தான். இளம் மனங்கள் காதலைப் பரிமாறும் இந்த நாளில், சாக்லேட் பரிமாற்றமும் நடக்கட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு