Published:Updated:

``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா
``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா

இயக்குநர் சசி திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் தனம் அம்மாவை, கோவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்

``தனம் அம்மா… இந்தக் கால யூ-டியூப் தமிழர்கள் கொண்டாடும் அந்தக் காலத்துப் பெண்.  நக்கலைட்ஸ் யூ-டியூப் சேனலின் ஆதர்ச நடிகை. ஆரம்பத்தில் ஜெயலலிதா, தமிழிசை வேடங்களில் நடித்து அரசியலைக் கலங்கடித்தவர், `அம்மா அலப்பறைகளில்' அதகளம் செய்துகொண்டிருக்கிறார். `உங்களை நடிக்கச் சொன்னா நீங்க வாழ்ந்தே காட்டுறீங்கம்மா…' , `சீக்கிரம் சினிமாவுக்கு வாங்கம்மா', `உங்க வீடியோக்களைப் பார்க்கும்போது, எங்க அம்மா ஞாபகம் வருது’ என்று ஏகமாக உருகும் இளம் ரசிகர்கள் இவருக்கு எக்கச்சக்கம். இயக்குநர் சசி திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் தனம் அம்மாவை, கோவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்... 

அவரது கணவர் பொன்.சந்திரன் உடல் நலிவுற்று இருக்க, அவருக்கான பணிவிடைகளினூடே நம்மிடம் பேச தயாரானார் தனம் அம்மா...உடல்நிலை ஒத்துழைக்காத சூழலிலும் தன் மனைவி பேசுவதை அருகிருந்து கேட்கத் துடிக்கும் மனசு பொன்.சந்திரனுடையது. இருவரும் அருகருகே அமர,  பேட்டி ஆரம்பம்.... 

 யார் இந்த தனம் அம்மா...  எங்கிருந்து வந்தது இவ்வளவு நக்கலும் நையாண்டியும்?

 ``என் பேர் தனலெட்சுமி. `தனம் அம்மா...’ பேர் நக்கலைட்ஸ் உருவாக்கிக் கொடுத்த அடையாளம்.! எனக்கு யு-டியூப்...  க்யூ- டீயூப்லாம் ஒண்ணும் தெரியாது. ஒட்டன்சத்திரம் பக்கம் இருக்கும் பலகண்ணூத்துங்கிற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவ. ரெண்டு அண்ணணுங்க. பெரிய அண்ணனுக்கு கம்யூனிசத்தில் ஈடுபாடு அதிகம். பெங்களூர்ல வேலை பார்த்தார். அவர்தான் எனக்கு எல்லாம். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அண்ணனிடமிருந்து கடிதம் வந்துவிடும். அண்ணனுடைய கடிதங்கள்தான் என்னை வழிநடத்தியது. என் அம்மா... படிக்காதவங்கதான். ஆனால், பெண்ணியம்ங்கிற வார்த்தையே தெரியாத பெண்ணியவாதி. என் அப்பாகிட்ட வாங்கின அடி, அம்மாவை ரொம்பவே யோசிக்க வெச்சது. படிக்காமல் புருஷனைச் சார்ந்து இருக்கிறதால்தான் அடிவாங்கிறோம்ங்கிற தெளிவு அம்மாவுக்கு இருந்தது. அதனால என்னை எப்படியாவது படிக்க வெச்சிரணும்’ங்கிற வைராக்கியம் அவங்களுக்கு. கிராமத்தில் பெண்களுக்கு’ன்னு இருக்கிற வேலைகள் எதுவும் எனக்கு இருக்காது. உங்க பொண்ணு ஏன் கோலம் போட மாட்டேங்குறா? சமைக்க மாட்டேங்குறான்’னு யாராச்சும் வாலியென்ட்டரா வந்து கேட்டால்கூட.... கோலம் போடுகிறதுக்கும், சமைக்கிறதுக்குமா பொம்பள புள்ள? நீ கிளம்பு’ன்னு சொல்லி துரத்திருவாங்க. 

பி.எட் வரைக்கும் படிச்சேன். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள். எல்லோரையும் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போவேன். அதேபோல, என்னையும் அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும். என் குடும்பச் சூழல் அவங்களுக்குத் தெரியணும். அவங்க குடும்பச் சூழல் எனக்குத் தெரியணும். நட்பை ரெண்டு பேர் வீட்லயும் புரிஞ்சுக்கணும். வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகாதவர்கள் என் நண்பர்கள் பட்டியலில் இருக்க முடியாது. அதேபோல, எந்த நண்பர்களும் எனக்குப் பரிசுபொருள்கள் எதுவும் கொடுக்கக் கூடாது. அப்படிப் பரிசுபொருள்கள் வாங்கினா...வாங்கித்தர்றவர் நமக்குரியவர்’ங்கிற எண்ணம் உருவாக ஆரம்பிச்சுரும்! என்பது என் நம்பிக்கை. இப்படி எங்க வீட்ல வழங்கப்பட்ட சுதந்திரமும் எனக்குன்னு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகளும் என்னை ரொம்பவும் எனர்ஜிட்டிக்கா வெச்சிருந்துச்சு. நண்பர்கள் எல்லோரையும் சகட்டுமேனிக்குக் கலாய்ச்சுத் தள்ளுவேன். அதுல உள்ள மிச்ச சொச்சம்தான் இப்போ வெளிப்படுது''.

 காமெடி வீடியோக்கள் பண்றதால,  நீங்க சிரிப்பான ஆளுன்னு நினைச்சோம். ஆனால் சிறைக்கெல்லாம் போயிருக்கீங்களாமே?

 ``கல்யாணம் ஆகாததற்கு முன்னால இருந்தே எனக்குச் சமூகத்தின் மீது தீராத கோபம். அப்பாவும் அம்மாவும் மாடுபோல உழைப்பாங்க. ஆனால், குடும்பத்தில் முன்னேற்றமே இருக்காது. இந்த உழைப்பெல்லாம் எங்கே போகுது? எவ்வளவுதான் உழைச்சாலும் நாம அப்படியேதானே இருக்கிறோம்’னு எனக்குள் எழுந்த கேள்வி... கடவுள் இல்லை’ங்கிற உண்மையை எனக்குச் சொல்லுச்சு. என் அண்ணனும், என்னுடைய கணவர் சந்திரனுடைய அண்ணனும் நண்பர்கள். அவர்கள் மூலமாதான் எங்களுக்குத் திருமணப் பேச்சு ஆரம்பிச்சது. சந்திரன் பெங்களூர்ல இருந்தார். நான் கோவையில படிச்சேன். இருவரும் கடிதத்துலேயே காதலிச்சோம். சந்திரன் அப்பழுக்கற்ற முற்போக்குவாதி. கல்யாணத்துக்குத் தாலி வேணாம்’னு சொல்லிட்டார். தாலி இல்லாம எப்டின்னு எனக்கு ஜெர்க் அடிச்சது. தாலிதான் அடையாளம்னா...  நீயும் எனக்குத் தாலி கட்டுறயான்னு கேட்டார். அவர் சிந்தனை புரிஞ்சது. நானும் யோசிச்சேன்... புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னா... புருஷன்காரன் ஓடி வந்து தாலியைக் கழட்டிக்கிட்டு ஓடுன்னு துரத்திவிடுறான். அப்படின்னா அது எதுக்கு? சண்டைன்னா அவனுக்கு வேலை வைக்காம வந்துட்டே இருக்கலாம்லன்னு தோணுச்சு. தாலி இல்லாமதான் திருமணம் பண்ணிக்கிட்டோம். 

  சந்திரன்.. பேங்க்ல வேலை பார்த்துட்டே சமூகப் பணிகள் செஞ்சுட்டு இருந்தார். வீதி நாடகங்கள்.. சமூக சேவைன்னு பரபரப்பா இருப்பார். எனக்கும் அது விருப்பம் இருந்ததால் நானும் அவர்கூட சேர்ந்து பயணிக்க ஆரம்பிச்சுட்டேன். பெங்களூரு, மதுரை, சென்னைன்னு இவர் வேலைக்காக எந்த ஊருக்குப் போனாலும் அங்க உள்ள சமூக இயக்கங்களோடு எங்களை இணைச்சுக்கிட்டு எல்லாப் போராட்டங்களுக்கும் நாங்க ரெண்டு பேரும் போயிருவோம். ஈழப்போராட்டம் தீவிரமா இருந்த சமயத்தில்.. இந்திய ராணுவ வண்டியை மறிச்சு, கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்’னு தகவல் வந்துச்சு...  கிச்சன்ல சமைச்சிட்டு இருந்ததை அப்படியே போட்டுட்டு ஓடிட்டேன். அந்த வழக்குல ரெண்டு மாசம் சிறையில இருந்திருக்கேன். அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள்ல சந்திரனும் நானும் பங்கெடுத்துருக்கோம். ஒவ்வொரு மனுஷனும் சமூகத்திற்கான பங்களிப்பைச் செலுத்தணும்ல அதான்'' என்று தனம் சொல்ல (பொன்.சந்திரன் அதை ஆமோதித்துச் சிரிக்கிறார்) 

நக்கலைட்ஸ்க்குள்ள எப்படி வந்தீங்க?

``என் கணவர் டிரான்ஸ்ஃபர் ஆகும் ஊரில் இருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள்கூட இணைஞ்சுக்குவோம்’னு சொன்னேன்ல. அப்படி கோவையில் பழக்கமானார் பிரசன்னா. ஆண்ட பரம்பரைன்னு ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்குறோம் அதுல ஸ்க்ரீன்ல தலையே காட்டாத ஒரு பெண்ணா நீங்க நடிக்கணும் தோழர்’னு பிரசன்னா கூப்பிட்டார். நீங்க எதுவும் டயலாக் பேச வேணாம்னு சொன்னாங்க. ஆனால், ஸ்பாட்ல நானா ஒரு டயலாக்கைச் சொல்லிட்டேன் அந்த மாடுலேஷன் அவங்களுக்குப் பிடிச்சுருச்சு. அடுத்து அவங்க எடுத்த முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லைங்கிற கான்செப்ட் வீடியோவுக்கு நடிக்கக் கூப்பிட்டாங்க.. அப்படித் தொடங்கின பயணம்.... இப்போ அம்மா அலப்பறைகளில் வந்து நிக்கிது. ஆனால், இந்த அலப்பறை கிளப்பறையெல்லாம் எனக்குப் பிடிக்கலை அரசியல் ரீதியான வீடியோக்கள் பண்றதுலதான் எனக்கு இஷ்டம்''.

வீடியோக்கள்ல வர்ற தனம் அம்மா... பர்சனல் லைஃப்ல ஒரு அம்மாவா எப்படி?

  ``அகில்.. முகில்னு ரெண்டு பசங்க. பெரியவனுக்குத் திருமணமாகிருச்சு. சின்னவனுக்கு இன்னும் ஆகலை. நான் எப்படிச் சுதந்திரமா வளர்ந்தேனோ அப்படியே அவங்களையும் வளர்த்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை... பசங்க நிறைய பொண்ணுங்ககிட்ட பழகணும்னு சொல்லுவேன். அப்போதான் அவர்களுக்குப் பெண்களைப் பற்றிய புரிதல் வரும். ஆனால், ஒரு கண்டிஷன் அந்தப் பொண்ணு இவனை அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கணும் இவனும் அந்தப் பொண்ணை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கணும். உங்க பையனை ரோட்ல அந்தப் பொண்ணோட பார்த்தேன்.. இந்தப் பொண்ணோட பார்த்தேன்னு யாரும் கம்ப்ளைன்ட் பண்ணக் கூடாது. அதேபோல மனைவியைச் சமமா நடத்தணும். அந்தப் பொண்ணோட சம்பளத்தைக் கேட்கக் கூடாது. ஏன் இதைச் சொல்றேன்னா... ஒரு ஒர்க்கிங் வுமன் மாசச் சம்பளத்தை மொத்தமா புருஷன்கிட்ட கொடுத்திட்டு அடுத்த நாள் பெட்ரோலுக்கு 100 ரூபா கொடுங்கன்னு கேட்டு நிக்கிறா.. அவன் நேத்துதான கொடுத்தேன்னு மிரட்டலோடு சொல்றான். யார் பணம்.. யாரோட அதிகாரம்? அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பாவுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைக்கும். அதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுக் கெஞ்சிக்கிட்டு நிக்கணுமா? இதைத்தவிர, ஒரு அம்மாவா என் பசங்ககிட்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சின்னவன் எங்களைப்போலவே நிறைய போராட்டங்களில் பங்கெடுத்தக்கூடிய ஆள். முத்துக்குமார் மரணத்தின்போதெல்லாம் நிறைய வேலை பார்த்திருக்கான். நக்கலைட்ஸ்ல வர்ற தனம் அம்மாவை உண்மையில் இயக்குறது சின்னவன் முகில்தான். அவ்வளவு சேட்டை''.

சினிமாவில் நடிச்சிருக்கீங்களாமே...?

``அட... அதை ஏன் கேக்குறீங்க... எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது. யூ-டியூப் வீடியோக்களை வெச்சு முடிவெடுத்து ஏமாந்துராதீங்கன்னு எவ்வளவோ சொல்லியும் டைரக்டர் கேட்கலை.(வெட்கப்படுகிறார்) `பூ’ பட டைரக்டர் சசி சார் இயக்கும் படத்தில் கதாநாயகனுக்கு அத்தை ரோல் பண்ணியிருக்கேன். இன்னும் ரெண்டு மாசத்தில் படம் ரிலீஸாகும்னு நினைக்கிறேன். பூ படம் என் மனசுக்கு நெருக்கமான படம். என் கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தி கலங்கடிச்ச படம் அது. அதனால சசி சார் என்னைக் கூப்பிட்டு நடிக்க வெச்சதுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம்''.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு