Published:Updated:

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”
பிரீமியம் ஸ்டோரி
“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

Published:Updated:
“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”
பிரீமியம் ஸ்டோரி
“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

ஞ்சையில் 6 நாள்கள், 14 நாடகங்கள் என ‘நவீனத் தமிழ்நாடகக் கலைவிழா’ நடத்தப்பட்டிருக்கிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றன. ஒப்பனை பூசிய முகங்கள், ஒப்பனை பூசி மறைக்கப்பட்ட சமூக அவலங்களைத் தோலுரித்தன. நிகழ்வின் சில துளிகள்:

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

“என்னை விடு, இல்லையின்னா ஊரக் கூட்டுவேன்” என அதட்டுகிறாள் வீராயி.   “ஊரக் கூட்டுவியா? சேரியக் கூட்டுவியா?” என நகைக்கிறான் சாதிய முதலாளி.  ஆதிக்கச் சொற்கள் கனலெனச் சுட,  சினங்கொண்டு அவனைக் கொல்கிறாள் வீராயி. ஆணாதிக்கம் சாதியமும் முதலாளித்துவமும் இந்தச் சமூகத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கிற சீர்கேட்டை, போற்றிப் பாதுகாக்கிற பெண்ணடிமைத் தனத்தைத் தனது ‘வீராயி’ நாடகத்தின் மூலம் சாடினார் இயக்குநர் பிரளயன்.

“பறவை... பறவை... பறவை” எனப் பறவையுடன் பாடி விளையாடுகிறார்கள் சிறுவர்கள். துப்பாக்கியுடன் நுழையும் வேட்டைக்காரன், பறவையைக் கூண்டில் அடைக்கிறான். தொலைந்த பறவையைத் தேடுபவர்கள் ஒருபுறம், ‘நாகரிக சிந்தனைகளை’ எட்டாத ஆதிமனிதக் கூட்டம் மறுபுறம் எனப் பயணிக்கிறது நாடகம். நாகரிக மனிதன் சிதைத்த காடு, ஆறு முதலிய இயற்கையினை சீர்செய்கி றார்கள் ஆதிமனிதர்கள். கடைசியாக, கூண்டில் சிறைப்பட்ட பறவையையும் மீட்டுத் தருகிறார்கள்.  நாம் தொலைத்துவிட்ட ஆதிக்காட்டை நினைவில் நிரப்பியது  ‘தஞ்சை நாடகக் குழு’ சார்பில் நிகழ்த்தப்பட்ட ‘நாடி’ நாடகம். 

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

‘புதுச்சேரி விளிம்பு குழுவினரின் ‘கருப்பு நிலம்’, தொழிற்புரட்சி, உலகமயமாக்கல் இவற்றால் மூன்றாம் உலக நாடுகளின் வளங்கள் சுரண்டப்பட்டதைக் கடுமையாகச் சாடியது. ‘புண்ணாக்கு பசுமைப் புரட்சி’, ‘பிணவாடை வீசாத பிணங்கள் நாம்’ எனச்  சாட்டை சுழற்றின வசனங்கள். நாடகத்தின் தொடக்கத்தில், இரண்டு தாய்மார்கள் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு தொலைந்துபோன தன் பிள்ளை, சகோதரன், பெற்றோரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஓலமிடுகிறார்கள். அது, நாம் தொலைத்த வண்ணத்துப்பூச்சி அல்லது சுருள் பூச்சாக இருக்கலாம். இல்லையென்றால், சிட்டுக்குருவி அல்லது தவிட்டுக் குருவியாக இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்... எனப் பார்வையாளர் களிடம் அவர்கள் வேண்ட, அதிர்ந்தனர் பார்வையாளர்கள்.

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

ஒரு பெண் பாத்திரம் மட்டும் கொண்ட நாடகம் ‘சுடலையம்மா’. அ.மங்கையின் நெறியாளுகையில், பிரேமா ரேவதி சுடலையம்மாவாக நடித்திருந்தார்.   கயிற்றுக்கட்டில், கொடித்துணி என மயானத்தில் வாழ்கிறாள் சுடலையம்மா.   சுடலையம்மாவிற்கு அறம் என்பது, ‘இறந்த  உடலுக்கு அன்பு செய்வதாகும்’. சாவிற்கும் மதிப்புண்டு, அதற்குரிய மாண்பை அளிப்பதே அருள் பெறுவதாக அமையும் என்பது அவளது எண்ணம். அவள் நன்கறிந்த, சீராளன் என்ற தொழிற்சங்கப் போராளியைச் சுட்டுக் கொல்கிறது காவல்துறை. ‘அவன் ஒரு சமூக விரோதி, அவனுக்கு நீ ஏதும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் உன்னையும் அரசாங்க விரோதி எனச் சிறையில் தள்ளுவோம்’ என்று மிரட்டுகிறது காவல்துறை. தனக்கான அருளை அடைய, இதனை எவ்வாறு எதிர்கொள்கிறாள் சுடலையம்மா என்பதைப் பேசியது நாடகம். ‘பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், அப்போ நியாயத்தின் சம்பளம்? என வசனங்கள், பார்வையாளர்களின் சமநிலையைக் குலைத்தன.

1970-களில் மேற்கு வங்கத்தில் உருவான தீவிர இடதுசாரி இளைஞர்களின் பின்புலத்தையும், அரசு அதிகாரம் அவர்களுக்குச் செய்த கசப்பான உண்மையையும் காட்சி வடிவில் கடத்தியது  ‘1084-ன் அம்மா’ நாடகம். வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி எழுதிய நாவலைத் தழுவி, ‘சென்னை மேடை’ கலைக்குழு சார்பில் ரெஜின் ரோஸ் இயக்கியிருந்தார். நாடகம் முழுக்க இழையோடும் வங்காளப் பாடல்கள், காட்சிகளுக்கு வலுசேர்த்தன. திருமதி.சட்டர்ஜி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை நினைவுபடுத்த, பார்வையாளர்கள் மனம் கனத்தனர். தன் மகன் மட்டுமல்ல, இந்த அமைப்பின் மீது நம்பிக்கையிழந்த அனைவருமே ஆளும் வர்க்கத்தால் மறைந்துபோகிறார்கள். நான்.... 1084... நீங்கள்? எனக் கேட்ட தாயின் கண்ணீர்க்குரல் அரங்கை உலுக்கியது.

மு.ஜீவாவின் நெறியாளுகையில்  ‘திருச்சூர் ஆப்டிஸ்ட்’ குழுவினரின் ‘கொந்தளிப்பு’ நாடகம், கேரளத்தின் இரு பிரச்னைகளை ஒருசேர விவரித்தது. மலையாளமும் தமிழும் கலந்த தெருக்கூத்து வடிவத்தில் இந்நாடகம் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த இழிவுகளை இன்றைய அரசியல் வழியே பேசினர் கதைமாந்தர்கள்.

“13 கிளிகளை ஏன் சுட்டீங்க?”

‘சென்னைக் கூத்துப்பட்டறை’யின்   ‘அவள் பெயர் காவேரி’ நாடகத்தை இயக்குநர் செல்லா செல்லம் இயக்கினார்.   காவேரி நதிநீர்ப் பிரச்னையை நமது குடும்ப அமைப்பின் சிடுக்குகளுடன் இணைத்து குறியீடாகப் பேசியது நாடகம். காவேரி என்ற பெண், தமிழ் (விவசாயி) என்பவனைக் காதலித்துத் திருமணம் செய்கிறாள். பின், இருவருக்கும் ஏற்பட்ட கசப்பின் காரணமாக, காவேரி தன் பிறந்த வீட்டால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகிறாள். காவேரி இல்லாமல் துடிக்கும் தமிழ் ‘காவேரி வேண்டும்’ என்று பஞ்சாயத்தை நாடுகிறார். தமிழ் மற்றும் தன் வாழ்வைக் கெடுத்த பெற்றோர்  இருவருக்கும் இடையில் நிர்கதியாய் நிற்கிறாள் காவேரி. ‘எல்லாத்துக்கும் அந்த டீக்கடைக்காரன்தான் காரணம்’, ‘நிதியும் நீதியும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க’ போன்ற வசனங்களில் விமர்சன வெப்பம்!

‘அப்பா... வெளியே போய்ட்டு வர்றேன்’ என்று மகள் சொன்னதும், ‘பார்த்து பத்திரமா போய்ட்டு வாம்மா’ என்கிறார் அப்பா. “அதை உங்கப் பையன்கிட்ட சொல்லுங்க” என்கிறாள் அவள். அவளைப் போலவே பல பெண்கள் தம் வேதனைகளைக் கூறுகிறார்கள். சென்னைக் குடியிருப்பில் பலரால் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி, கருவறைக்கு மத்தியில் போராடிய சிறுமி, பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என அனைவரின் கூட்டுக்குரல் அது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிரான கேள்வியை முன்வைத்தது ‘கோவை மாற்றுக்களம்’ குழுவின் ‘பெண்’ நாடகம்.

பார்வையாளர்களை மாய உலகிற்கு அழைத்துச் சென்றது ச.முருகபூபதியின் ‘புழுதிமரப் பறவைகள்’. மனித மையத்தைத் தாண்டிய, பல்லுயிர்களின் குரலாய்த் தன் நாடகத்தை அறிமுகப்படுத்தினார் இயக்குநர். படைப்பின் கட்டற்ற சுதந்திர வெளி, கலைக்கு அளிக்கும் சாத்தியமாக அமைந்தது ‘புழுதிமரப் பறவைகள்’. “13 கிளிகளை ஏன் சுட்டீங்க?, ‘7 கிளிகளை ஏன் அடைச்சு வச்சிருக்க?” போன்ற வசனங்களில்  தமிழகத்தின் சமகால அரசியல் கோபம்!

இவை தவிர, ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான ஒட்டுமொத்த குடும்பத்தையும் வட்டமிடும் ‘விசாரணை’, ஈழ மக்களின் ரத்த வாடை மிகுந்த வாழ்க்கையை வெளிச்சப்படுத்திய ‘சிலோன் காலனி’, இடைநிலைச் சாதி ஆணவத்தைத் தோலுரித்த ‘பெத்தவன்’ போன்ற நாடகங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

கலை மட்டுமே புரட்சியைச் சாத்தியப்படுத்திவிடாது. ஆனால், அரசியல் நிலைப்பாடுள்ள கலைஞன், தனது படைப்பின் மூலம் மக்களின் மனதில் புரட்சிக்கான கோபக்கனலைத் தொடர்ந்து ஊதிப்பெருக்குவான். ‘கலையின் கோபக்குரல், யாவரின் அன்றாடத்தையும் சமன்குலைக்கட்டும்!’ என்று சொல்லத் தோன்றுகிறது. விழாவின் நாடகங்கள் உயிர்ப்புடன் முன்வைத்தது அதைத்தான். 

அப்துல்லா.மு - படங்கள்: கண்ணன்.ர, ஈஸ்வர்.அ.சி