Published:Updated:

தஞ்சை அரண்மனையில் புகைப்படக் கண்காட்சி - தொல்லியல் துறை புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்த மாணவர்கள்

தஞ்சை அரண்மனையில் புகைப்படக் கண்காட்சி - தொல்லியல் துறை புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்த மாணவர்கள்
தஞ்சை அரண்மனையில் புகைப்படக் கண்காட்சி - தொல்லியல் துறை புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்த மாணவர்கள்

தஞ்சாவூர் அரண்மனையில் கீழடி, அழகன்குளம், பட்டறைப்பெரும்புதூரில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டது.இதை மக்கள் காண்கின்ற வகையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.இதனை தினமும் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு,ரசித்து வியந்து வருகின்றனர்.

தமிழக அரசின் தொல்லிய துறையும், தமிழ் பல்கலைக் கழகமும் இணைந்து இந்திய - ஜப்பான் தேசிய கருத்தரங்கத்தை தஞ்சாவூரில் மூன்று நாட்களாக நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் அரண்மனை தர்பார் ஹாலில்,தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.

கடந்த 11-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி நேற்றுடன் முடிவடைய இருந்தது,பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படக்கண்காட்சியை காண்பதற்கு அதிகம் வருவதால் கண்காட்சியை வரும் 17ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.இந்த கண்காட்சியில் சிவகங்கை அருகே கீழடியில் கி.மு.2-ம் நுாற்றாண்டுக்கும் கி.பி.2-ம் நுாற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள், கண்ணாடி பொருட்கள், கருப்பு சிவப்பு பானை, சுடுமன் உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், எலும்புகளால் ஆன ஈட்டி உள்ளிட்ட வேட்டைக்கான பொருட்களின் புகைப்படங்கள் உள்ளது. அதே போல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ரோம் நாட்டுடன் இருந்த வணிக உறவுகள், சங்கு குவியல்கள், தானிய சேமிப்பு கலன்கள், உறைகிணறுகளின் புகைப்படங்கள் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதுாரில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகள், வடிகட்டிகள், அணிகலன்கள், தங்கம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட தோடுகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் பார்த்து வியந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு புகைப்படத்தில் உள்ள பொருள்களின் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் விளக்கங்களை தஞ்சாவூர் மணிமண்டபம் காப்பாட்சியர் தும்மராஜூ விளக்கி கூறுகிறார்.

இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை கூறியதாவது, கீழடியில் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மதுரை அலுவலகத்திலும், அழகன்குளம்,பட்டறை பெரும்புதுாரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னையில் உள்ள அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை  புகைப்படமாக எடுத்து தமிழக தொல்லியல் துறை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறது .தஞ்சாவூரில் நான்கு நாட்கள் மட்டுமே கண்காட்சிக்கு  நடத்த திட்டமிட்டோம், பார்வையாளர்கள் அதிகம் வருவதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ளோம்.காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் சங்ககாலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆய்வாளர்களும், வரலாறு படிக்கும் மாணவர்களும்,பள்ளி மாணவர்களும் இதனை ஆர்வத்தோடு பார்த்து வியந்து ரசித்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர் என்றார்