ஹெல்த்
தொடர்
Published:Updated:

“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்

“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்

மனசே மனசே...

மக்கு என்ன பிரச்னை என்று நமக்குத்தான் தெரியும். நம் பிரச்னைகளை நாம்தான் ஆசிரியராக இருந்து தீர்க்க முடியும்’’ என்கிறார் நடிகர், அரசியல்வாதி பிரகாஷ்ராஜ்.

“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்

``எல்லோருக்குமே மனஅழுத்தம் இருக்கும். அதையே  நினைத்து, பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இது, பிறருக்காகச் சொல்வதல்ல, என் சொந்த வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்பட்டாலும் நான் இப்படித்தான் நடந்துகொள்வேன். என் மகன் இறந்தபோது, மிக மோசமான தனிமையை உணர்ந்தேன். ஆனால், என் குடும்பத்தினருக்கு நான் தேவை என்பதை உணர்ந்ததால், அந்தச் சோகத்திலிருந்து மெள்ள மெள்ள மீண்டு வந்தேன். நாம் என்ன செய்தாலும் சமூகம் விமர்சிக்கத்தான் செய்யும். என் சொந்த வாழ்க்கையை எத்தனையோ பேர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். என் உயிர்த் தோழியை இழந்து நின்றபோதுதான், உண்மையில் நான் யார் என்பதை உணர்ந்தேன். என்னை உணராமல் இருந்தவரையிலும் மனஅழுத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்பிரச்னைகளிலிருந்து விடுபட நான் பயணம் மேற்கொள்வேன். என் தொழில் சினிமா. அதில் பிரச்னை வந்தபோது ஒரு மாற்றாக இயற்கை விவசாயத்தின் பக்கம் போனேன். மரம், செடிகளோடு நேரத்தைச் செலவிட்டபோது புதிதாகப் பிறந்ததாக உணர்ந்தேன். இப்போதும் என்னை விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுதான் நான். ஒரு பிரச்னை என்றால், அதற்குள்ளேயே கனன்றுகொண்டிருக்க மாட்டேன். அதிலிருந்து விடுபட வேறு விஷயங்களைத் தேடிச் செல்வேன். இப்போது எழுதுகிறேன், அதிகமாக உரையாடுகிறேன். இந்தப் புது அனுபவங்கள் என்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தேடல்தான் வாழ்க்கை. தேடல்தான் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு என்னை அழைத்து வந்தது; தேடலால்தான் தமிழ் மொழி கற்றேன்; தேடலால்தான் என்னை நானே புதுப்பித்துக்கொள்கிறேன். வெற்றியோ, தோல்வியோ ஓர் ‘இயக்கம்’ இருந்தால்தான் வாழ்க்கை எப்போதும் புதிதாக இருக்கும். நகரும், அசையும் எதைப் பார்த்தாலும் என் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். வெற்றிபெறப் பயன்படுவதைவிட, தோல்வியிலிருந்து மீள்வதற்குப் பயன்பட்டால்தான் `தன்னம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கும். நிறைய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவது என் வழக்கம். நடிகனாக உச்சத்தில் இருந்தபோது, படத் தயாரிப்பில் இறங்கினேன். அது வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அனுபவங்கள்தாம் இதுவரை என்னை செதுக்கிக்கொண்டிருக்கின்றன.

எந்த வெற்றியாளனுக்கும் 100 சதவிகித வெற்றி கிடைக்காது. தோல்விகளையும் எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதைவிட முக்கியமானது, விமர்சனங்களை எதிர்கொள்வது. நடிகனாக இருந்ததைவிட, அரசியல்வாதியாக அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். எந்த விமர்சனமும், எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் என்னை நானே கட்டமைத்துக்கொண்டேன். இல்லையென்றால் அந்த விமர்சனங்கள் என்னையே இல்லாமல் செய்துவிட்டிருக்கும். என்னுடைய அடுத்த தேடல் அரசியல். இப்படி என்னை நகர்த்திக்கொண்டிருப்பதன் மூலம் மனஅழுத்தத்திலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள தினமும் முயன்றுகொண்டேயிருக்கிறேன்.’’ அழுத்தமாகச் சொல்கிறார் பிரகாஷ்ராஜ்.

இ.லோகேஸ்வரி - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்