''ஹாய் வியூவர்ஸ்'', ''எக்ஸலன்ட்'', ''கமர்ஷியல் பிரேக்'', ''மார்வலஸ்'', ''அமேசிங்'' என்று நம் தமிழ்நாட்டுப் பண்பலை மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் தமிழ் 'வளர்த்துக்’கொண்டிருக்கும் நிலையில் அந்தக் காட்சி நிச்சயம் அதிசயம்தான்! சீனாவின் தமிழ்ப் பிரிவு வானொலியின் பொறுப்பாளரான கலையரசியின் இரண்டு பக்க தமிழ் வாழ்த்துக் கடிதத்தை வார்த்தைப் பிசகாமல் வாசித்துக்கொண்டுஇருந்தார் தேன்மொழி என்கிற ஹூ க்சியாமிங்.

செந்தமிழ் 'தேன்மொழி'யாள்..!
##~##

சாய்ராம் ஹோட்டலில் நடைபெற்ற சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் கருத்தரங்கில்தான் இந்தக் கண்கொள்ளாக் காட்சி. விழுப்புரம், திருச்சி அண்ணா நகர் மற்றும் பாண்டிச்சேரி சீன வானொலி நேயர் மன்றங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சீன வானொலியின் 70-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்க விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு அறிவிப்பாளர்கள் மோகன் (லியூ யங்), ஜெயா (லீ லூசி), தேன்மொழி (ஹூ க்சியாமிங்) சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நேயர்களுடன்  உரையாடினார்கள் தமிழில்.

சீன வானொலியின் 70-வது ஆண்டு நிறைவு விழாவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து நேயர் மன்றங்களில் இருந்தும் சிறந்த 10 மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றமும் ஒன்று. இதன் சார்பாக, சிறந்த நேயராகத் தேர்வு செய்யப்பட்ட கலைவாணன் ராதிகாவைச் சீனாவுக்கு அழைத்து கௌரவப்படுத்தி இருக்கிறது அந்த நாடு. தன்னுடைய பயண அனுபவத்தைக் கருத்தரங்கில் பகிர்ந்துகொண்ட ராதிகா, ''அமெரிக்கா, ஜெர்மன், இலங்கை, வியட்நாம், கியூபா, பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் அந்த விழாவில் கலந்து கொண்டன. சீன வானொலி சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீனாவின் சுற்றுலாத் துறைதான் ஏற்பாடு செய்திருந்தது'' என்றார். அங்கு வந்திருந்த அனைத்து நேயர்களும் சீன வானொலி தங்களுக்கு அனுப்பிய கலைநயமிக்க பரிசுப் பொருட்களைக் காட்சிப்படுத்தி வைத்திருந்தார்கள்.  

சீன வானொலியில் 12 வருடம் பணியாற்றி ஓய்வுபெற்ற கடிகாசலத்திடம் பேசினேன். ''சீன மொழியைத் தவிர்த்து உலகெங்கிலும் உள்ள தேசிய மொழிகள் அனைத்திலும் இவர்களுடைய ஒலிபரப்பு நடைபெறுகிறது. தமிழ், தேசிய மொழி இல்லை என்றாலும் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் பேசப்படும் பழமையான மொழி என்பதால்தான் தமிழ்ப் பிரிவு என்ற ஒன்றை ஏற்படுத்தினார்கள்'' என்றார்.  பேசிக்கொண்டிருக்கும்போதே 'வணக்கம்’ என்று அழகிய தமிழ்க்குரல் கேட்க, திரும்பினால்... அட, சீனத் தேன்மொழி! கூடவே ஜெயா மற்றும் மோகன்.

செந்தமிழ் 'தேன்மொழி'யாள்..!

''நீ...ங்கள் போட்டிருக்கும் கதர்ச் சட்டை..'' என்று  ஜெயா தடுமாற, ''நீங்கள் போட்டு இருக்கும் சட்டை எந்தக் கடையில் எடுத்தீர்கள்?'' என்று உதவிக்கு வந்தார் தேன்மொழி. ''நேரு வீதி'' என்றபடி, ''நீங்கள் எப்போது தமிழ் கற்றுக்கொண்டீர்கள்?'' என்றேன். ''சீனப் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் வகுப்பு இருக்கிறது. அங்கு படிக்கும்போதுதான் தமிழ் கற்றுக்கொண்டேன். நாங்கள் மூன்று பேருமே கல்லூரித் தோழர்கள். அங்குதான் தமிழையும் கற்றுக்கொண்டோம். அதற்குப் பின் சீன வானொலியில் சேர்ந்தோம்'' என்றார்.

'இந்தியாவில் உங்களுக்கு என்ன பிடிக் கும்?'' என்று கேட்க, ''நகைகள், உடைகள்'' என்று ஜெயா சொல்ல... தேன்மொழியோ ''இந்தியச் சாப்பாடும் மனிதர்களும் எனக்குப் பிடிக்கும்'' என்று சொல்லி அசத்தினார். அதுவரை அமைதியாக இருந்த மோகனிடம் ''உங்களுக்கு...?'' என்றவுடன், ''இவர்கள் சொன்னது எல்லாம் எனக்கும் பிடிக்கும்'' என்று நழுவப் பார்த்தவரிடம், ''இந்தியப் பெண்கள்..?'' என்றேன். ''பிடிக்கும் ஆனால், பயம்'' என்றார் மோகன். ''என்னது, இந்தியப் பெண்களைப் பார்த்தால் பயமா?'' என்று நான் விடாமல் கேட்க, ''இல்லை... இல்லை. அவர்களிடம் பயம் இல்லை. என் மனைவியை நினைத்தால்தான் பயம்'' என்று மோகன் வெகுளித்தனமாகச் சொல்ல, அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

செந்தமிழ் 'தேன்மொழி'யாள்..!

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு