டலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று நாட்களும் திருவிழாக் கோலம்தான். காரணம் கலர்ஃபுல் கலைவிழா!

திஸ் இஸ் கலைவெறி!
##~##

முதல் நாள் கலைவிழாவுக்கு நட்சத்திரங்களின் சுற்றுப்பயணம் போல் பட்டுப்புடவைகளில் வந்த மாணவிகளைப் பார்த்ததும் மனசெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்ததைச் சொல்லவா வேண்டும்? ''இன்னைக்கு என்ன நிகழ்ச்சி?'' கேட்டதுதான் தாமதம், ஹோட்டல் சப்ளையர்போல, விதவிதமாக அடுக்கத் தொடங்கினார்கள் மாணவிகள். ''கர்னாடக இசைப் பாட்டு, பரத நாட்டியம், ஜுவல்லரி டிசைனிங், மண்பானை வடிவமைப்பு, ஓவியப்போட்டி, ஃபேஷன் ஷோ, குதூகலமான குரூப் டான்ஸ். இந்தப் பட்டியல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?'' என்று பட்டியல் போட்டன பட்டுப்புடவை பட்டாம்பூச்சிகள்.

கல்லூரி முதல்வரின் தலைமை உரையுடன் தொடங்கிய கலைவிழா, மெள்ள மெள்ள சூடு பிடிக்க ஆரம்பித்தது. உச்சகட்ட ஆரவாரம் ஃபேஷன் ஷோவுக்குத்தான். ஃபேஷன் ஷோ என்றால் ஆடைக் குறைப்பு அணிவகுப்பு இல்லை. அதன் தலைப்பே 'கிராமத்து அழகு’தான். விதவிதமான பாரம்பரிய ஆடைகளில் மாணவிகள் வந்து கலக்க, அரங்கம் எங்கும் மண் வாசனை!

ஒருபுறம் பரத நாட்டியம், இன்னொருபுறம் குழு நடனம் தொடர, முதலில் சொன்ன பட்டியல்படி தனித்தனியாகப் போட்டிகள் நடந்தன. எல்லா இடங்களிலும் கூட்டம் குவிய, அதிகமாய்க் கூட்டம் அள்ளியது குறும்பட அரங்குக்குத்தான். பரிசை வென்றது திவ்யா, கல்பனாவின் 'ஒரு பெண்ணின் சாதனை’ குறும்படம். கமகம வாசனை மூக்கைத் துளைத்து அழைப்பு விடுக்க, அடுத்த அறையில் எட் டிப் பார்த்தால்... அட, சமையல் போட்டி! விதவிதமான உணவுகளை ருசித்துச் சாப்பிட்டு ரசனையான தீர்ப்பு வழங்கிக்கொண்டு இருந்தார்கள் நடுவர்கள்.

திஸ் இஸ் கலைவெறி!

இரண்டாம் நாள் முழுக்க ஆண்களின் கலைவிழா. சேலைக்குச் சவால் விட்டு களத்தில் குதித்தவர்கள் கலக்கலாய் அசரடித்தார்கள். 'மீண்டும் வந்தால்’ தலைப்பில் நடந்த போட்டியில் பாரதியாரும் எம்.ஜிஆரும் மீண்டும் வந்து குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்தார்கள். பி.காம் மூன்றாம் ஆண்டு மாணவர் மணிகண்டன், 'ஒருநாள் சி.எம் போல ஒரு நாள் ஹெச்.எம்’ கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் குரலில் அசத்தினார்.

திஸ் இஸ் கலைவெறி!

'ஒய் திஸ் கொலவெறி?’ பாடலுக்கு ஆடிய  மாணவர்கள், பெண்கள் திசை நோக்கிக் கைகாட்டியபடி ஆட, அரங்கம் பசங்க கைதட்டலில் அதிர்ந்தது. என்னா ஒரு கொலவெறி!

மூன்றாவது நாள் நிறைவுநாள். இரண்டு நாட்களிலும் நடந்தவற்றில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை மறு அரங்கேற்றம் ஆகின. பல துறைகளிலும் பரிசுகளை அள்ளிக் குவித்து கோப்பையைக் கைப்பற்றியது கல்லூரியின் இயற்பியல் துறை. மூன்றுநாட்களின் தாக்கத்தால் வெளியில் வந்தபிறகும் விடாமல் ஸ்டெப் போட்டுக்கொண்டு இருந்தன சிலருடைய கால்கள்.

ரா.ராபின் மார்லர்
படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு