Published:Updated:

திண்ணைகள் போயின; கதைகளும் போயின!

திண்ணைகள் போயின; கதைகளும் போயின!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்ணைகள் போயின; கதைகளும் போயின!

''நான் பிறந்த அங்குராயநத்தம் முழுவதும் பசுமைப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கும். இங்கு இருக்கும் கண்கொடுத்த விநாயகர் கோயிலும், சிவன் கோயிலுமே கதியாகக் கிடந்த நாட்கள் நிறைய!'' என்றபடி தன் ஊர் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் காலபைரவன்.

திண்ணைகள் போயின; கதைகளும் போயின!
##~##

''என் தாய்வழித் தாத்தாவுடன் கழனிக்குச் செல்லும்போது எல்லாம் பச்சை தென்னை மட்டையில் கிலுகிலுப்பைச் செய்து கொடுத்து நிலக் கடலை விளைச்சலுக்கு நடுவில் போடப்பட்டு இருக்கும் பரண் மீது உட்காரவைத்துவிட்டு, நிலத்தில் இறங்கி வேலை செய்வார். ஒவ்வொரு வெள்ளாமையிலும் ஊருக்குத் தெற்கே நீண்டுகிடக்கும் வலமோட்டுப்பாறையில்தான் கதிர் அடிப்பு நடக்கும். தொடர்ச்சியாக அறுத்த கம்பங்கதிர்களை அடிக்கும் காட்சி, ஓர் ஓவியத்தைப்போல மனதில் அவ்வளவு துல்லியமாகத் தேங்கிக் கிடக்கிறது.  

தொடக்கப்பள்ளியில் பயின்ற நாட்களில் எங்களுக்குச் சத்துணவாக ஒன்றிய அலுவலகத்தில் சமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கோதுமைச் சாதம் போடுவார்கள். அதைத் தூக்கு வாளியில் வாங்கிக்கொண்டு தாம்புக்கயிற்றை நீளமாகப் பிணைத்து பேருந்தாக எண்ணி அதற்குள் நின்றபடி முருகவேல் அண்ணா ஓட்ட, அவரைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மாமா, முருகதாஸ், சரவணன், ரவி அண்ணன்கள், பூங்கொடி, சுந்தரி, சுடர் அக்காக்கள் ஆகியோருடன் நானும் ஊரின் வடதிசையில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சுற்றுலாச் செல்வோம். மலையில் தனித்து இருக்கும் முருகன் கோயிலை அடைந்து, கொண்டுவந்திருந்த சாதத்தை வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய வீடு திரும்புவோம். இன்று முருகன் கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இல்லை. கோயிலைச் சுற்றி விரிந்திருந்த விளைநிலங்கள் முழுக்க இன்று கான்கிரீட் வீடுகளாக உயர்ந்து நிற்கின்றன. அன்று என்னுடன் பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பான்மையோர் வேலையின் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

ஆடியும் சித்திரை மாதமும் வந்தால் போதும்; விழாவுக்குப் பஞ்சம் இருக்காது. பொன்னுரங்கம் ஜமாதான் நாடகம் போடுவார்கள். பொன்னுரங்கம் பெண் வேடம் போட்டு வந்தால், நிஜப்பெண் போலவே இருக்கும். நாடகத்தைக் காண முன்கூட்டியே சென்று மேடை அருகில் பாயையோ, சாக்கையோ போட்டுவிட்டு, ஊறவைத்து அவித்த புளியங்கொட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டே உறங்கிவிடுவோம். வழக்கம்போல அதிகாலையில் பாட்டி எங்களை எழுப்புவதோடு நாடகம் முடிவுக்கு வந்திருக்கும். மழைபொய்த்த ஆண்டுகளில் மழைவேண்டி கொடும்பாவி இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறோம். குள்ளு வாத்தியார் மாமா வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் தெரியாமல் கொடுக்காப்புளி பறித்து மாட்டிக்கொண்டு திட்டும் அடியும் வாங்கி இருக்கிறோம்.

திண்ணைகள் போயின; கதைகளும் போயின!

பால்யத்தின் நினைவுகளில் தேங்கியுள்ள என் ஊரின் எந்த ஒரு மார்கழி அதிகாலையையும் இப்போதும் மறக்க முடியாமல் மனம் கிடந்து தவிக்கிறது. அதிகாலையில் சத்சங்கத்தினர் அருட்பா பாடிக்கொண்டு வருவர். டிசம்பர் பூ பூக்காத வீடுகளே ஊரில் இல்லை எனும் விதமாக, பூ பறித்துக்கொண்டு இருக்கும் பனிப் படர்ந்த பெண்களின் கரங்கள், மனத் திரையில் குறுக்கும் நெடுக்குமாக இப்போதும் அலைந்துகொண்டு இருக்கின்றன. கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட பூக் கோலமிடும் பேரழகிகள் வாழ்ந்த காலம் அது. சிமென்ட் பரவிய தெருவில் சுண்ணாம்புக் கட்டியால் கோலமிடும் இன்றைய யுவதிகளுக்குத் தெரியுமா இழப்பின் சோகம்?

என்னுடன் சேர்ந்து என் ஊரும் வளர்ந்திருக்கிறது என்பதை இப்போது உணரமுடிகிறது. ஆனால், இப்போதைய என் ஊருக்கும் என் பால்யத்தில் தேங்கியிருக்கும் என் ஊருக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உருவாகி இருக்கின்றன. ஊரின் மத்தியில், பாப்பான் குளத்தருகே இருந்த பெரிய புளியந்தோப்பு அறவே இல்லை. பச்சப்புள்ளாகுளமும், சக்கரக்குளமும் நாகரிகம் வளர வளர தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூர்த்துக்கொள்ளத் தொடங்கின. ஊரின் பிரதானத் தொழிலாக இருந்த நெசவுத்தொழில், கண்முன்பாகவே காணாமல் போன அவலமும் நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது. தெருக்களில் படுத்துக்கொண்டு கேட்ட கன்னிமார் கதைகளும், நல்லதங்காள் கதைகளும் இன்று கேட்க முடியாதபடி வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டன. திண்ணைகளும் தெருக்களும் இல்லாத ஊரை, கதைகள் ஒருபோதும் விரும்புவது இல்லை என்னும் உண்மை, இன்னும் நமக்கு உரைக்கவே இல்லை. பொரிமாவு, முறுக்கு, அதிரசம் எனச் சாப்பிட்டு வளர்ந்த எங்களின் பிள்ளைகள், இன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி இருப்பதில் இருந்து என் ஊரின் முகம் மாறி இருப்பதை நன்றாக உணர்ந்துகொள்ள முடிகிறது. எவ்வளவுதான் ஊர் வளர்ந்து, நாகரிகமாக மாறி இருந்தாலும்கூட, பால்யத்தில் கேட்ட கிலுகிலுப்பைச் சத்தத்துக்கும் தோட்டத்து பூவரச மர ஊஞ்சலுக்கும் மார்கழி மாதத்து பூக் கோலத்துக்கும் ஏங்கவே செய்கிறது மனம்!''

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு