Published:Updated:

இந்தத் தேர்தலின் ஸ்டார் பேச்சாளர்கள் டிக் டாக்கும் மீம்ஸும்தானா? #Election2019

இணையத்தில் மிகப் பிரச்னை ஒன்றிருக்கிறது. அதுதான் அரசியலை அங்கிருந்து மீட்டு களத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் தேர்தலின் ஸ்டார் பேச்சாளர்கள் டிக் டாக்கும் மீம்ஸும்தானா? #Election2019
இந்தத் தேர்தலின் ஸ்டார் பேச்சாளர்கள் டிக் டாக்கும் மீம்ஸும்தானா? #Election2019

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஒவ்வொரு துறையும் டிஜிட்டல் ஐடியாக்களால் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் #Election2019 சமூக வலைதளங்களின் பங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலின்போதே தமிழகக் கட்சிகள் இணையத்தில் களமாடின. திடீரென ஓர் எண்ணிலிருந்து கால் வந்தது. எடுத்தால் “நான் உங்கள் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்” என்றார். நாமே அழைத்தால் கருணாநிதியே பேசினார். ட்விட்டரில் ஹேஷ்டேக் அட்டகாசங்கள், ஃபேஸ்புக்கில் கட்சிக் கூட்டத்துக்கு ஈவென்ட் அப்டேட்டுகள், அன்புமணியின் ஆப் என அந்தத் தேர்தலே சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போலத்தான் இருந்தது.

சுவர் விளம்பரங்களுக்காகப் பல மாதங்களுக்கு முன்பே `ADMK reserved’, `DMK full’ போன்ற முன்பதிவுகள் எல்லாம் இணையத்தில் இல்லை. எல்லோருக்கும் தனித்தனி wall. இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் கிடையாது என்பதெல்லாம் இந்த உலகுக்குக் கிடையாது. எல்லா நேரமும் ட்வீட்டும் ஸ்டேட்டஸும், இன்ஸ்டாவில் படங்களும் வைரல் ஆகிக்கொண்டேதானிருக்கும். 

முன்பெல்லாம் தேர்தல் பிரசாரங்களில் ஆபாச வார்த்தைகளுடன் எதிரணியை மட்டம்தட்ட பேச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், இணையப் பிரசாரத்தில் அதுதான் அதிகம். அர்த்தமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், போலி புகைப்படங்களையும் வைத்தே இணையத்தில் கணிசமான கவனத்தைப் பெற்றுவிட முடியும். கட்சி பாகுபாடின்றி எல்லோரும் இதில் ஈடுபட்டதுதான் சோகமான வரலாறு. திருப்பூரில் மாநாடு நடந்தால் அது மேற்கு வங்கத்தில் டிரெண்ட் ஆகும். காரணம், சமூக வலைதளத்தில் அதைப் பிரபலமாக்கும் வேலையை ஏற்றுக்கொண்ட நிறுவனம் அங்கு செயல்படும். இது போன்ற போலித்தனங்கள் இணையத்தில் ஏராளம்.

3 வருடங்களுக்கு முன்பு நடந்தத் தேர்தலிலே இவ்வளவு டிஜிட்டல் கலாட்டாக்கள் என்றால் 2019-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். 

இந்த 3 ஆண்டுகளில் இந்தியா நிறைய மாறியிருக்கிறது. ஜியோவின் வருகை இணையத்தைப் பரவலாக்கியிருக்கிறது. மக்கள் தெருக்களில் கூடியபோது தெருமுனை பிரசாரங்கள் புகழ்பெற்றன. இப்போது மக்கள் இணையத்தில்தான் அதிகம் இயங்குகிறார்கள். அவர்களின் விருப்பமான வெளியாக இணையம் இருக்கிறது. அவர்களைக் கவர்வதற்காகவே இணையத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது மட்டுமா உண்மை? பெரும்பாலான கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. அவர்களுக்கு என்ன சொல்லி மக்களைச் சந்திப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. களத்துக்குச் சென்றால் முன்பைவிட மோசமான முறையில் மக்கள் துரத்தியடிப்பார்கள். அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க இணையம் உதவும். நம் முகம் காட்டலாம். ஆனால், திருப்பி அடிக்க முடியாது. சொல்லப்போனால், இந்தத் திருடர்கள் இணையம் என்ற முகமூடியை அணிந்துகொள்கிறார்கள். அது அவர்களுக்கு வசதியாய் இருக்கிறது. 

டிக் டாக். இன்று இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாகக்கூட இது இருக்கலாம். குழந்தை பிறந்தால், திருமணம் நிகழ்ந்தால், இறந்துபோனால் என என்ன நடந்தாலும் பாடல் பாடியது பழைய கலாசாரம். இப்போது அங்கெல்லாம் டிக் டாக் வீடியோ எடுக்க வேண்டுமென்கிறது இணைய கலாசாரம். டிக்டாக்கில் வீடியோ போட்டு பிரபலம் ஆனவர்கள் ஏராளம். காதல் செய்தவர்கள் ஏராளம். சண்டை போட்டவர்கள் ஏராளம். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி தொழில் செய்து சம்பாதித்தவர்கள் ஏராளம். எல்லாவற்றுக்கும் காரணம் பெரும்பாலான மக்கள் அங்கேயிருக்கிறார்கள். அதனால் இந்த ஏரியாவை அரசியல்வாதிகள் விட்டு வைக்கப்போவதில்லை.

`சர்கார்’ படம் வெளியானபோதே அரசுக்கு எதிராக டிக்டாக்வாசிகள் பல காமெடி கலாட்டாக்களை நிகழ்த்தி அதற்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். இப்போது ஆங்காங்கே சிலர் தங்கள் ஆதர்ச கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் ஆதரவாக டிக்டாக் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். டிக்டாக் வாசிகளுக்குத் தேவையான டெம்ப்ளேட் ஆடியோக்களை மட்டும் வெளியிட்டுவிட்டால் அதை டிரெண்ட் ஆக்கும் வேலையை அவர்களே செய்துவிடுவார்கள். இந்தத் தேர்தலின் நட்சத்திரப் பேச்சாளர்களாக இருக்கப்போகிறவர்கள் டிக்டாக் உலகிலிருந்துதான் வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மீம்ஸ் மாஃபியாக்களும் சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வேலை செய்வார்கள்.  மீம்ஸ் என்றாலே டிரோல் அல்லது நெகட்டிவ் விஷயங்கள் என்பது இப்போது மாறிவருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கடந்தகால வரலாற்றை, மக்கள் நலத் திட்டங்களை மீம்ஸ் மூலம் பரப்பி வருகிறார்கள். இந்தத் தேர்தலுக்கும் ஏகப்பட்ட மீம்ஸ் ஐடியாக்களை சுமந்து திரிகிறார்கள் ஐ.டி-விங்கு ஆள்கள். கூட்டணிகள் முடிவான பின் மீம்ஸ் ராஜ்ஜியம் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். 

இணையத்தில் மிகப் பிரச்னை ஒன்றிருக்கிறது. அதுதான் அரசியலை அங்கிருந்து மீட்டுக் களத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இணையவாசிகளுக்கு எல்லாமே ஒரு நாள் கூத்துதான். எல்லாவற்றையும் மேம்போக்காக அணுகுவதும், அன்றைய டிரெண்டாக மட்டுமே பார்ப்பதும் அங்கே வாடிக்கை. பல வீரியமிக்க பிரச்னைகளை இணையத்தில் கட்சிகள் சமூக வலைதளவாசிகள் போலவே கையாள்வதைக் கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அதனால் கவனம் கிடைக்குமே தவிர தீர்வு கிடைக்காது. 

இணையம் மிக முக்கியமான வெளிதான். ஆனால், நிஜமான அரசியல், மக்களுக்கான அரசியல் அதற்கு வெளியேதான் இருக்கிறது. மக்கள் நலனுக்காக அரசியல் செய்யும் கட்சிகள் அதை உணர வேண்டியது அவசியம்.