Published:Updated:

"உணவையும் அறிவையும் பரிமாறுவது உன்னதம்!"

இலக்கண மனிதர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''திருவண்ணாமலை மாவட்டம்  வேட்டவலம் அரசினர் மாணவர் விடுதியில் சமையல்காரராகப் பணிபுரிபவர் ஒரு தமிழ்ப் பட்டதாரி'' - இது வாய்ஸ்நாப்பின் மூலம் திருவண்ணாமலை வாசகர் திருமுருகன் தந்த தகவல்.

"உணவையும் அறிவையும் பரிமாறுவது உன்னதம்!"
##~##

வேட்டவலம் ஆதி திராவிடர் நல மாணவர்கள் விடுதிக்குச் சென்றபோது, விடுதி மாணவர்கள் ஆங்காங்கே மரத்தடி நிழலில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தனர். ''உங்கள் விடுதி சமையல்காரர் எங்கு இருக்கிறார்?'' என்று கேட்டதும், ''அப்படிச் சொல்லாதீங்க சார். அவர் வெளி உலகுக்குத்தான் சமையல்காரர் எங்களுக்கு ஆசிரியர்!'' என்றான் ஒரு மாணவன் சுருக்கென்று.

சமையல் அறையில் தன்னுடைய உதவியாளருடன் ஒரு பெரிய வாணலியில் சமைத்துக்கொண்டு இருந்தார் ஜெய்சங்கர். ''கொஞ்ச நேரம் இருங்க சார். பசங்க ஸ்கூலுக்குப் போகணும் அதனாலதான் வேக வேகமாச் சமைச்சிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.

''எனக்குச் சொந்த ஊர் செங்கம் பக்கத்துல இருக்கும் வடமாத்தூர் கிராமம். அப்பா, அம்மா ரெண்டுபேருக்குமே விவசாயக் கூலி வேலைதான். எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது அப்பாவுக்கு ஒரு விபத்தில் கண் பார்வை போயிடுச்சு. அம்மாதான் கூலி வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாத்துனாங்க. குடும்ப வறுமையால என்னால படிப்பைத் தொடர முடியலை. ஒருவழியா நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியால ப்ளஸ் டூ வரைக்கும் முடிச்சேன். படிப்பு முடிஞ்சதும் செங்கம் தாசில்தார் ஆபீஸில் ஆபீஸைக் கூட்டிப் பெருக்கும் ஸ்வீப்பர் வேலை கிடைச்சுது. என்னோட படிச்ச பசங்க காலேஜுக்குப் போகும்போது இந்த வேலை பார்க்கிறது கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா வேற வழி..?

"உணவையும் அறிவையும் பரிமாறுவது உன்னதம்!"

அப்பதான் ஹாஸ்டல் சமையல்காரர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்கன்னு தாசில்தார் சொன்னார். அஞ்சு வருஷம் கீழ்வலசையில வேலை. அப்புறம் இங்க மாத்தினாங்க. 13 வருஷம் ஆச்சு இங்கே வந்து! வேலை பார்த்துக்கிட்டே தொலைதூரக் கல்வி மூலமா தமிழ் இளங்கலை, முதுகலை முடிச்சேன். அப்புறம் லீவ் போட்டு ஒரத்தநாட்டில் தமிழாசிரியர் பயிற்சிக் கல்வி படிச்சேன். ஆறு மாசச் சம்பளம் போச்சு. பெரிய இழப்புதான். ஆனா, செல்வமாக் கல்வி கிடைச்சதே! தமிழில் எம்.பில்லும் படிச்சேன். கல்வி மீதும் தமிழ் மீதும் இருந்த தணியாத தாகம்தான் இத்தனை உழைப்புக்கும் காரணம்.

இவ்வளவு படிச்சிருந்தும் சமையல்காரர் வேலை பார்க்கிறோமேனு ஒருநாளும் நினைச்சது இல்லை. காரணம், அதிகாரிகளுக்கு மட்டும்தான் நான் சமையல்காரர். ஆனால், இங்கு இருக்கும் 83 பிள்ளைகளுக்கு நான்தான் ஆசான். இவங்களுக்குத் தினமும் காலையும் மாலையும் இலவசமாப் பாடம் நடத்துறேன். எனக்குத் தமிழ் இலக்கணத்து மேல ஆர்வம் அதிகம். அதனால் எவ்வளவு எளிமையாச் சொல்லித் தர முடியுமோ, அவ்வளவு எளிமையா மாணவர்களுக்கு இலக்கணம் சொல்லித் தர்றேன்.

ஒரு வருஷத்துக்கு 83 மாணவர்கள்னு 13 வருஷத்தில் எத்தனையோ மாணவர்களுக்குக் கற்பிச்சிருக்கேன். எனக்குத் தெரிஞ்சு என் மாணவர்கள் 15 பேர் ராணுவத்தில இருக்காங்க. 30-க்கு மேல ஐ.டி துறையில் இருக்காங்க. அவ்வளவு ஏன், தமிழாசிரியர்களாகவும் ஆகியிருக்காங்க. என்னிடம் படிக்கும் மாணவர்களுக்காகச் சின்னக் கையேடும் சொந்த செலவில் அச்சடித்துக் கொடுத்திருக்கேன். விடுதி மாணவர்கள்னு இல்லை, இங்கே பக்கத்துல இருக்கிறவங்களோட குழந்தைகளும் என்கிட்ட தமிழ்ப் படிக்க வர்றாங்க.

ஆசிரியர் வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். அது எப்ப வரும்னு தெரியலை. அதுவரை நான் சமையல்காரன். 'அன்னசத்திரம் ஆயிரம் வைக்கிறதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம்’னு சொல்றார் பாரதி. உணவு, அறிவு இரண்டுமே வாழ்க்கையின் அத்தியாவசியங்கள். இந்த ரெண்டையுமே மாணவர்களுக்குப் பரிமாறுறேன்ங்கிறதுல எனக்கு மகிழ்ச்சிதாங்க!''

- திருப்தியாய்ச் சொல்கிறார் ஜெய்சங்கர்.

"உணவையும் அறிவையும் பரிமாறுவது உன்னதம்!"

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு