Published:Updated:

நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNights

கார்த்தி

வெவ்வேறு முரண்களால் பின்னப்பட்ட நான்கு சகோதரர்களும், அவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு நபருக்குமான போராட்டமும், வாழ்வியலும் தான் இந்த #KumbalangiNights

நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNights
நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNights

மீன்பிடித்தல், கயறு பின்னுதல் என்னும் இயற்கையோடு இயைந்திருக்கும் கேரளாவின் கும்பலங்கி தீவு, உலகமயமாக்கலையும் வியாபாரத்தையும் நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. அங்கு யாருக்கும் பயன்படாமல் சற்று விலகியே இருக்கிறது ஒரு வீடு. வாழ்தல் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், வாழ்தலுக்கான நேரத்தைக் கடத்துதல் என்பது அவ்வளவு எளிதாய் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. அப்படியான நால்வர் தங்களின் நேரத்தை அங்கு கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டைப் போலவே சிதைந்து, விலகி , தனித்து இருக்கிறார்கள் போனி, சாஜி, பாபி, ஃபிராங்கி என்கிற இந்த நான்கு சகோதரர்கள். #KumbalangiNights 


' என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்' நிலையில் எல்லாம் அங்கு யாருமில்லை. சகோதரர்களில் கடைக்குட்டியான, உலகம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத கால்பந்து விளையாடும் ஃபிராங்கிக்குக் கூட தன் வீட்டுக்கு நண்பர்கள் யாரையும் அழைத்துவரக்கூடாது என்பது தெரிந்திருக்கிறது. 

நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNightsபோனியாக ஸ்ரீநாத் பஸி. எதுவும் பேசாத, உடல்மொழியால் மட்டுமே அனைத்தும் சொல்லும் வேடம். தந்தையின் மறைவு தினத்தின் போது கூட மற்ற சகோதரர்களின் சண்டையைப் பார்த்து வீட்டுக்கு வராமல் இருக்கும் அளவுக்கான கோபமான இளைஞன்.

பாபியாக ஷேன் நிகம். கன்னக்குழிகள் விழும் ஹீரோக்கள் இன்னுமே சற்று அழகாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஷேன் நிகம். திருமணம், காதல் மீதெல்லாம் ஈர்ப்பு பெரிதும் இல்லாமல், பின்னர் தனக்கான வாழ்க்கையை நோக்கி மடைமாறும் கதாபாத்திரம். எல்லாம் ஒன்று திரண்டு வரும்போது, தன் கண்முன்னரே எல்லாம் உடையும் தருணமாய் அங்கு நிகழும் காட்சிகளில் அவரின் உடல்மொழி செம்ம.

சாஜியாக ஷௌபின் ஷஹிர். தான் திருமணம் செய்துவைத்த ஒரு தமிழ் குடும்பத்திடம் (ரமேஷ் திலக்) ஓசிக்குடி வாங்கிக் குடிக்கும் கதாபாத்திரம். ஷஹிரின் கதாபாத்திரத்துக்கும் ஷமியின் கதாப்பாத்திரத்துக்கும் அவ்வளவு வேற்றுமை. ஒரு தமிழ் குடும்பத்தை வெகுளியாக, தீயவர்களாக சித்தரிக்காத மிகச்சில சினிமாக்களில் இதுவும் ஒன்று. " ஃபேன் போடுறதெல்லாம் இருக்கட்டும், ஒருவாட்டி அண்ணன்னு கூப்பிடு" என அந்த வர்ணம் பூசாத சுவரின் ஓரம் நின்றுகொண்டு சிரித்துக்கொண்டே இருக்கும் காட்சியை ரிப்ளேயில் எத்தனை முறை வேண்டுமாயின் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNightsபோனியின் காதலியாக நைலா; பாபியின் காதலியாக பேபி (அன்னா பென் ), ஷம்மியின் மனைவியாக சிம்மி (கிரேஸ் ஆன்டனி) மூவரும் மிகையில்லாத நடிப்பு. கதாநாயகர்களில்கூட இல்லாத ரௌத்திரம் நிறைந்த கதாநாயகிகள். அதற்கேற்றார் போல், ஒவ்வொருவருக்கும் நிகழும் காட்சிகள் சுவார்ஸ்யம். ' முடிஞ்சத பார்த்துக்கோ' என கெத்து முத்தம் நைலா என்றால், அன்னா பென் தருவது உத்வேக முத்தம். இவர்களைக் கடந்து ஆச்சர்யப்பட வைத்தது சிம்மியின் டிரான்ஸ்பர்மேசன் தான்.  ஒரு படத்தில் எல்லோரும் நன்றாக நடித்தால், என்ன செய்ய முடியும்? இவர்களைவிடவும் சிறப்பாக நடிக்கும் ஒருவரை நடிக்க வைக்க வேண்டும். பெரிய கோடுகளுக்குப் பக்கத்தில் மிகப்பெரிய கோடு ஒன்றை போட ஆம், ஷம்மியாக ஃபகத் ஃபாசில்.

இந்த மனிதர் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறார் என்றுகூடத் தோன்றுவதுண்டு. அதுவும் இந்தப்படம் அவரின் கூட்டுத் தயாரிப்பு. தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படத்திலாவது மாட்டிக்கொண்டு அடிவாங்கும் நல்ல திருடன். எல்லா ஹீரோக்களும் வழுக்கையை மறைக்க விக் பயன்படுத்தினால், ஆயாள் நான் அல்ல படத்தில் மட்டும் அதை ஒரு கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தியிருப்பார், இதில் இன்னும் ஒரு படி அதிகம். அன்பே சிவம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் ' தீவிரவாதிங்கறவன் என்னைய மாதிரி அசிங்கமா தளும்போட எல்லாம் இருக்க மாட்டான், உங்கள மாதிரி ரொம்ப அழகாக இருப்பான்' . கும்பலங்கியில் ஃபகத்துக்கு அப்படியானதொரு கதாபாத்திரம். US YES ; INDIA NO வகையறா.  பிளேடால் மீசையை சரிசெய்துகொண்டே , கண்ணாடியில் என்றோ ஒட்டிய பெண்ணின் பொட்டை எடுத்து குப்பையில் போடுவதில் ஆரம்பிக்கிறது ஷம்மியின் ஆதிக்கம். மனைவி ஷிமியும், அவளது தங்கை பேபியும் பேசிக்கொண்டிருக்க உள்ளே நுழையுமாறு நின்றுகொண்டு அவர் கேட்கும் கேள்வியின் ஒவ்வொரு தொனியிலும் ஆயிரம் வித்தியாசங்கள். ஏதோவொரு பிரச்னைக்கு செருப்பு போடாமல் இருக்க முடியுமா, ஒரு திருடன் இப்படி செய்வானா, ஒரு முடி திருத்தம் செய்பவர் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவாரா என்பதையெல்லாம் நம்பவைப்பது அவ்வளவு எளிதல்ல. நுணுக்கமாக கவனித்தால், ஒரு கதாபாத்திரத்தின் தன்மைக்கு அவர்தரும் உழைப்பு ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டே இருங்கள் ஃபகத் !. 

நான்கு சகோதரர்களும்... ஒற்றை வில்லன் ஃபகத்தும்..! எப்படி இருக்கிறது #KumbalangiNightsபடத்தில் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் மற்றுமொரு விஷயம் , அடுத்தடுத்து வரும் முரணான காட்சிகள். இங்கு ஒரு பெண் நக்கல் அடிக்கும் ஒரு விஷயத்துக்கு, வேறொரு இடத்தில் வேறொருவன் கதறி அழுது கொண்டு இருப்பான். மீன் பிடித்தல் என்பது படத்தின் ஊடே முதல் காட்சியில் இருந்து, காதலாக, சண்டையாக, வாழ்க்கையாக எல்லாவற்றிலும் பயணப்பட்டு கொண்டேயிருக்கிறது. ஃபகத் வரும் காட்சிகளில் எல்லாம் சைஜூ காலித்தின் கேமரா கண்கள் அகண்டு விரிகிறது. அதே போல் கேரளத்தின் இருள் அழகையும் இயற்கையின் கருணையுடன் பதிவுசெய்கிறது. இப்படியாக சில காட்சிகள்!. படத்தில் குறையே இல்லையா என்றால் தாராளமாய் இருக்கிறது. சத்தியின் கதாபாத்திரம் இன்னும் சரியாக கையாண்டு இருக்கலாம். எதைப் பற்றியும் யோசிக்காமல், கோபம் கொள்ளாமல், அவள் எடுக்கும் முடிவுகள் சினிமாத்தனம். அதே போல், பாபியின் கதாபாத்திரம் டக்கென மாறுவதும் யதார்த்த மீறல் தான்!.

22 ஃபீமேல் கொட்டயம்,மகேஷின்ட பிரதிகாரம் உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய ஷியாம் புஷ்கரனின் எழுத்தில் உருவாகியிருக்கிறது கும்பலங்கி நைட்ஸ். ஷியாமும் திலீஷ் போத்தனும், ஃபகத்தும், நஸ்ரியாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஃபகத், ஷியாம் புஷ்கரன், திலீஷ் போத்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சைஜூ காலித்தின் ஒளிப்பதிவு.


படத்தில் வரும் சத்தி (ஷீலா ராஜ்குமார் ) இவ்வாறாக சொல்வாள், " நான் போற இடம் எதுவும் உருப்படாது, அழிஞ்சு போயிடும்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும்". அதற்கு பாபி , " அப்ப நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்து இருக்கீங்க இங்க இனி அழிஞ்சு போறதுக்கு எதுவும் இல்ல. என்னோட சகோதரியா நீங்க இங்க இருக்கலாம்" . கம்மட்டிபாடம், அங்கமாலி என நாம் ஏற்கெனவே பயணம் செய்த மலையாள சினிமா இடங்களின் வழியே, கும்பலங்கிக்கும் ஒரு விசிட் அடியுங்கள் என்கிறது இத்திரைப்படம். ஆம் அந்த வீடும், அந்த எழில்மிகு வீட்டின் ஸ்மோக்லெஸ் கிச்சனும் , யூரோப்பியன் டாய்லெட்டும் , முரண்மிகு மனிதர்களும் அங்கே நமக்காக காத்திருக்கக்கூடும்.