Published:Updated:

`குப்பை பொறுக்கும் தொழில்தானே என்று ஒதுங்கிவிடாதீர்கள்!' - ஜபீர் தொழிலதிபர் ஆன கதை

`குப்பை பொறுக்கும் தொழில்தானே என்று ஒதுங்கிவிடாதீர்கள்!' - ஜபீர் தொழிலதிபர் ஆன கதை
`குப்பை பொறுக்கும் தொழில்தானே என்று ஒதுங்கிவிடாதீர்கள்!' - ஜபீர் தொழிலதிபர் ஆன கதை

ண்பர் ஒருவர் லேத் பட்டறை வைத்துள்ளார். ``ஒரு கம்பெனியில இருந்து  எனக்கு கொஞ்சம் ஸ்கிராப்  கிடைச்சது. அதுவே 10 லட்சம் ரூபாய் தேறிச்சு. அதைவெச்சு ஒரு லேண்ட் வாங்கிப் போட்டேன்'' என்றார் அசால்ட்டாக.

``ஸ்கிராப்பில் அவ்வளவு பணமா?'' என்று நான் வாயைப் பிளந்தேன். பல நகரங்களில் இன்று ஸ்கிராப்  முக்கியமான தொழில். குப்பையும் கூளமும்தான். ஆனால், பணம் அதிகம் புழங்கும் தொழில் ஸ்கிராப். அதேபோலவே குப்பை பொறுக்கும் தொழிலையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குப்பை பொறுக்கும் தொழிலை விரும்பித் தேர்வுசெய்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளார். 

கோழிக்கோடு அருகே உள்ள தாமரச்சேரியைச் சேர்ந்தவர் ஜபீர். டெல்லி பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். `எந்தத் தொழிலாக இருந்தாலும் சொந்தத் தொழிலாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் உடையவர். இந்தியாவில் செல்வத்துக்கு மட்டுமல்ல, குப்பைக்கும் மும்பை நகரம் பேர்போனது. மும்பை நகரில் நாள் ஒன்றுக்கு சர்வசாதாரணமாக 11,000 டன் குப்பைகள் சேரும். மும்பை மாநகராட்சியுடன் இணைந்து இரண்டு வருடம் ஜபீர் பணிபுரிந்தார். அந்தத் தருணத்தில் waste management பற்றி முற்றிலும் கற்றார். 

சில  நடிகர்கள் படத்தில் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை போன்ற நிஜ மனிதர்களிடம் பழகி  யதார்த்தத்தை உணர்ந்துகொண்டு படத்தில் நடிப்பார்கள். அப்போதுதான், தத்ரூபமாக நடிக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்தத்  தொழிலில் ஈடுபடுவதற்கு முன், கோவை நகரில் மூன்று மாதங்கள் ஜபீரும் குப்பை பொறுக்குபவர்களுடன் குப்பை பொறுக்குபவராக வாழ்ந்தார். குப்பை பொறுக்கும் அந்த எளிய மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து தொழில் நுணுக்கங்கள் அத்தனையையும் அறிந்துகொண்டார். எந்தத் தொழிலாக இருந்தாலும் நுணுக்கங்கள் முக்கியம் அல்லவா.... அதற்காகவே குப்பை பொறுக்குபவர்களுடன் வாழ்ந்து நேரடி அனுபவத்தைப் பெற்றார். 

தொடர்ந்து,  சொந்த ஊரான தாமரச்சேரிக்குத் திரும்பினார். ரூ.6 லட்சம் முதலீட்டில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்தார். `green worms' என்ற பெயரில் கடந்த 2014-ம் ஆண்டு சிறிய நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் 5 பேரை வேலைக்கு எடுத்தார். எந்தத் தொழிலிலும் தடை இருக்கத்தானே செய்யும். இரு முறை தன் நிறுவனத்தை மூடவும் செய்தார் ஜபீர். இயல்பிலேயே ஜபீர் சுற்றுச்சூழல் மீது அக்கறைக்கொண்டவர். அதனால், அவரால் வேறு தொழில் குறித்து யோசிக்க முடியவில்லை. வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் என அனைத்து துறையினரிடமும் குப்பைகளைச் சேகரித்து வந்து ரீ-சைக்கிள் செய்யத் தொடங்கினார்.

நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைத்தார். நாளடைவில் தொழில் முன்னேற்றம் காண தொடங்கியது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பால் பாக்கெட்டுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கியது. இப்போது  தினமும் 30,000 கிலோ குப்பைகளை இந்த நிறுவனம் ரீ-சைக்கிள் செய்கிறது. தற்போது கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது. 140 பேர் இங்கே பணிபுரிகின்றனர். மாதம் 450 டன் குப்பைகள் ரீ-சைக்கிள் செய்யப்படுகிறது.  ஆண்டுக்கு ரூ. 3 கோடி லாபம் ஈட்டுகிறார் ஜபீர்.

``எந்தத் தொழில் தொடங்கினாலும் தடைகள் வரத்தான் செய்யும். அதற்காக முடங்கிப்போய்விடக் கூடாது. குப்பை பொறுக்குபவர்களுடன் படுத்து உறங்கியிருக்கிறேன்; குப்பை பொறுக்கியிருக்கிறேன். அதில், கிடைத்த அனுபவங்கள்தான் இப்போது என்னை இந்தத் தொழிலில் வெற்றி அடையவைத்துள்ளன. குப்பை பொறுக்கும் தொழில்தானே என்று ஒதுங்கிவிடாதீர்கள். நாளை உலகத்தில் மிகப்பெரிய வர்த்தகமாக இந்தத் தொழில் மாறப்போகிறது. தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நிறுவனமாக என் நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்பதே என் லட்சியம்'' என்று கூறும் ஜபீருக்கு, அமெரிக்காவில் இருந்து அழைப்பு வந்துள்ளது. 

எதற்காக தெரியுமா... waste management பற்றி உரையாற்றத்தான்!

அடுத்த கட்டுரைக்கு