Published:Updated:

``40 வயசாச்சு.. டான்ஸ் ஆடிதான் பொழைக்குறேன்'' - திருநங்கை ராணி

``40 வயசாச்சு.. டான்ஸ் ஆடிதான் பொழைக்குறேன்'' - திருநங்கை ராணி
``40 வயசாச்சு.. டான்ஸ் ஆடிதான் பொழைக்குறேன்'' - திருநங்கை ராணி

" கோயில் திருவிழாவில் ஆடுவேன்மா அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு தான் எங்களுடைய பொழப்பை நடத்திட்டு இருக்கேன்!" எனப் புன்னகைக்கிறார் நாற்பத்து மூன்று வயதான திருநங்கை ராணி. இவருடைய கடந்தகால கதையைக் கேட்டால் சோகமும், வலியும் மட்டும்தான் மிஞ்சியிருக்கின்றது. பல்வேறான ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து இன்று தன்னைப் போல் பெற்றோர்களால் கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கு வாழ்க்கை கொடுத்து அவர்களைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

என்னுடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. எனக்கு மூணு அண்ணன் ஒரு தம்பி.  எனக்கு ஆம்பளை பசங்களைச் சுத்தமா பிடிக்காது. பொம்பளை புள்ளைங்க பக்கத்துல தான் உட்கார்ந்திருப்பேன். ஸ்கூல்ல எந்த டிராமான்னாலும் நான் தான் பொம்பளை கெட்-அப் போடுவேன். அதை வைச்சு எல்லோரும் என்னைக் கேலி செய்வாங்க. என் அண்ணன், தம்பியெல்லாம் என்கூட பேசவே மாட்டாங்க. எங்க அம்மாகிட்ட போய், அம்மா இவனை ஸ்கூலுக்கு அனுப்பாதீங்க.. இவனால எங்களுக்கு அசிங்கம்னு சொல்லுவாங்க. வீட்டிலேயும் என்னை யாருமே புரிஞ்சிக்கலை. ரொம்ப அடிப்பாங்க. இதுக்கும் மேல இங்கே இருந்து என்ன சாதிக்கப் போறோம்னு எனக்கு நானே கேட்டுப்பேன்மா..

சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடப் பிடிக்கும். மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கும்போது பொம்பளை வேஷம் போட்டு ஆடியிருக்கேன். அப்படி ஆடுறதைப் பார்த்துட்டு எங்க அப்பா, அண்ணன்கள்கிட்ட அடியும் வாங்கியிருக்கேன். வீட்டுல அதிகமா பிரச்னையாகவும் என் பன்னிரண்டு வயசுல வீட்டை விட்டு ஓடிவந்திடலாம்னு முடிவு பண்ணேன். எங்க ஊர்ல பசங்க எல்லோரும் பம்பாய்க்கு வேலைக்குப் போவாங்க. அவங்களை ஒரு மேனேஜர் அனுப்பி வைப்பாரு. அவர்கிட்ட பேசி என் ஃப்ரெண்ட் என்னையும் கூட்டிட்டுப் போனான். அங்கே போய் மூணு மாசத்திலேயே எல்லோருக்கும் என்னைப் பற்றி தெரிஞ்சிடுச்சு. எல்லோரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நான் வேலை பார்த்த கடையில் காசு கேட்டு திருநங்கைங்க வருவாங்க. அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க பின்னாடியே போய் ஏக்கமா பார்த்துட்டு திரும்பி வருவேன். பசங்க கிண்டல் பண்ணவும் அவங்ககிட்ட என்னை ஏத்துக்கச் சொன்னேன். 

அதுக்கப்புறம் எங்க ஊர் பசங்க எங்க வீட்டுல நான் திருநங்கை கூடப் போயிட்டேங்குறதை சொல்லிட்டாங்க. எங்க வீட்டுல என்னைத் தேடி வந்துட்டாங்க. அவங்க என்னைத் தேடி வர்றாங்கன்னு தெரிஞ்சதும் என்னைப் பார்த்தாங்கன்னா கொன்னுடுவாங்களோங்குற பயத்துல ஓடி ஒளிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் எங்க ஆளுங்க கூடவே இருந்தேன். என் பதினாறு வயசுல ஆபரேஷன் பண்ணிகிட்டேன். ஆபரேஷன் பண்ணிட்டு பெத்தவங்களை பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததும் உன்னால எங்களுக்கு அசிங்கம்னு ரொம்ப மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுனாங்க. என்னை ஏத்துக்கலை. மறுபடியும் மும்பைக்கே வந்தேன். எங்க ஆளுங்க கூட சேர்ந்து பாலியல் தொழில் செஞ்சிட்டு இருந்தேன். எனக்கு அந்தத் தொழில் செய்ய விருப்பமில்லைன்னாலும் அந்நேரம் வேற என்ன வேலை பண்றதுன்னு தெரியலை. கடைக்குப் போய் வேலை கேட்டா யாருமே கொடுக்க முன்வரலை. அதனால எனக்கு நானே வலியை அனுபவிச்சிகிட்டு அதுல கிடைக்குற பணத்துல சாப்பிட்டுட்டு இருந்தேன் என்றவர் டான்ஸராக மாறிய கதையைச் சொல்கிறார்.

கணபதி திருவிழா மும்பையில் பிரபலம். அந்தத் திருவிழாவில் ரோட்டோரத்தில் எங்க ஆளுங்க கூட ஆடிட்டு இருந்தேன். அங்கே என் டான்ஸைப் பார்த்துட்டு ஒரு சேட்டு என்கிட்ட வந்து என்னுடைய பார்ல நீங்க டான்ஸ் ஆடுறீங்களான்னு கேட்டாரு. என்னால எப்படி ஆடமுடியும்.. நான் திருநங்கைன்னு சொன்னேன். பரவாயில்ல.. அங்கே இரண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்க கூட சேர்ந்து நீங்களும் ஆடுங்க.. அது போதும்னு சொன்னாங்க. சரின்னு பார்ல டான்ஸ் ஆடப் போனேன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அங்கே டான்ஸரா இருந்தேன்மா. டான்ஸரா நிறைய சந்தோஷங்களையும், கஷ்டங்களையும் அனுபவிச்சிருக்கேன். ஆனா, அந்த டான்ஸ் நமக்கு வேண்டாம்னு நினைச்சதே இல்ல!

அப்புறம் டெல்லிக்குப் போனேன். அங்கே குழந்தை பிறந்ததும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணி டான்ஸ் ஆடச் சொல்லுவாங்க. அங்கேயும் இரண்டு வருஷம் வேலைக்குப் போனேன். அப்புறம் அங்கே இருந்து பெங்களூருக்கு வந்துட்டேன். கிட்டத்தட்ட பதினெட்டு வருஷமா பெங்களூரில் டான்ஸ் ஆடிட்டு இருக்கேன். அதோடு சேர்ந்து குழந்தைகளை ஆசீர்வாதம் பண்றது.. கடைகள் திறப்பு விழாவில் கலந்துக்கிடுறதுன்னும் பண்ணிட்டு இருக்கேன்மா.. நான்பட்ட கஷ்டத்தை என்னை மாதிரியானவங்க அனுபவிக்கக்கூடாதுன்னு ஓடிட்டு இருக்கேன்மா. இப்போ கோயில் விழாக்களில் டான்ஸ் ஆடிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாமல், எங்களோட மிஸ் கூவாகம் நிகழ்ச்சியிலும் டான்ஸ் ஆடப் போறேன்மா.. முடிஞ்சா வந்து அம்மாவோட டான்ஸைப் பாருங்க எனப் புன்னகைக்கிறார், ராணி!