Published:Updated:

``மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு!'' - அழகுக்கலை வசுந்திராவின் 30 வருட ரகசியம்

``கஸ்டமர்ஸ் அவங்க முகத்தையையே என்னை நம்பித் தர்றாங்க. அதை இன்னும் அழகுப்படுத்தணும்னா என்னோட பங்களிப்பு அதுல முழுசா இருக்கணும்னு நினைச்சேன். ஸோ, பிசினஸ் ஆசைகளையெல்லாம் மூட்டைக் கட்டி வைச்சுட்டேன். ''

``மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு!'' -  அழகுக்கலை வசுந்திராவின் 30 வருட ரகசியம்
``மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு!'' - அழகுக்கலை வசுந்திராவின் 30 வருட ரகசியம்

ழகுக்கலை நிபுணர் வசுந்தராவுக்கு அறிமுகமெல்லாம் தேவையே இல்லை. அவர் அழகுக் குறிப்புகள் எழுதாத பத்திரிகைகள் இல்லை, பியூட்டி டிப்ஸ் தராத சேனல்கள் இல்லை. அதனால், ஐ ப்ரோ டிரிம் பண்ணிக்கொள்கிற அளவுக்கு பியூட்டி நாலெட்ஜ் இருப்பவர்களுக்குக் கூட வசுந்தராவின் அழகு முகமும் மென்மையான பேச்சும் நன்கு பரிச்சயம். இவர் பியூட்டி பார்லர் ஆரம்பித்து 30 வருடங்கள் முடிந்துவிட்டதையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்னால் அதை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாடியிருந்தார். வசுந்தராவுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி கேட்டோம். 

``முப்பது வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலை. நான் 1998-ல் யு.ஜி. டிகிரி முடிச்சுட்டு  எம்.ஏ. படிக்க ஆரம்பிச்சேன். அப்பவே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. கொஞ்ச நாள் வீட்டில் நான் சும்மா தான் இருந்தேன்.  ரொம்ப போரடிச்சா சினிமாவுக்குப் போயிடுவேன். டைமை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு எனக்கே தோண ஆரம்பிச்சிடுச்சு. அப்ப ஒரு நாள், என் மாமியார் 'நீ படிச்சிருக்கே. எதாவது பிசினஸ் மாதிரி ஸ்டார்ட் பண்ணேன்'ன்னு சொன்னாங்க. அப்ப கரியர் கைடன்ஸ் எல்லாம் கிடையாதே... நியூஸ் பேப்பரை புரட்டிக்கிட்டு இருக்கிறப்போ காஸ்மெட்டாலஜி கோர்ஸ் பற்றிய சின்ன விளம்பரம் ஒண்ணுப் பார்த்துட்டு, உடனே அங்கே போனேன். வித்யா, நிர்மலான்னு அம்மா - பொண்ணு ரெண்டு பேர்தான் அந்த கோர்ஸை நடத்திக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப ஹோம்லி அட்மாஸ்பியரா இருந்ததால எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவங்க ரெண்டு பேரும் என் மேலே ரொம்பப் பிரியமா இருந்தாங்க. 6 மாசம் கோர்ஸ் முடிச்சேன்.

நான் பியூட்டி கோர்ஸ் படிச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்ட லேடி ஒருத்தங்க `எனக்குக் கத்துக்கொடுங்களேன்' கேட்டாங்க. நானும் சொல்லிக்கொடுத்தேன். கத்துக்கிட்ட உடனே அவங்க பார்லர் திறந்துட்டாங்க. எனக்கு அப்போதான் நாமளும் பார்லர் ஓப்பன் பண்ணலாமேன்னு ஐடியா வந்துச்சு. உடனே என் ஹஸ்பண்ட்கிட்ட கேட்டேன். அவரும் அவருடைய அப்பாக்கிட்ட பேச, இப்ப நான் பார்லர் நான் வைச்சுக்கிட்டிருக்க இடத்தை (அது எங்களுக்குச் சொந்தமான இடம்) 'சும்மாதானே இருக்கு. அங்கே பார்லர் ஆரம்பிச்சுக்கோ' என்றார் என் மாமனார். என் மாமியார் மும்பைக்குப் போய் பார்லருக்குத் தேவையான காஸ்மெட்டிக் ஐயிட்டங்களையெல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. நானும் பியூட்டி பார்லர் ஆரம்பிச்சுட்டேன் '' என்றவர், தன்னுடைய ஆரம்ப நாள் சவால்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 

``சில நேரம் ஒரு நாளைக்கு ஒருத்தர்கூட வர மாட்டாங்க. ஆனா, நான் சாயந்திரம் வீட்டுக்குப் போனா என் மாமனாரும் மாமியாரும் ;இன்னிக்கு எத்தனை கஸ்டமர் வந்தாங்க'ன்னு ஆர்வமா கேட்பாங்க. எனக்கு உண்மையைச் சொல்ல ரொம்ப பயமா இருக்கும். ஏன்னா, அதான், யாருமே வரலையே. பார்லரை மூடிடுன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம். உடனே என் ஹஸ்பண்ட் ஒரு ஐடியா கொடுத்தார். 'பிசினஸ் பிக்கப் ஆகிற வரைக்கும் தினமும் ரெண்டு பேர் வந்தாங்க, மூணு பேர் வந்தாங்கன்னு சொல்லிடு. தப்பே இல்லை'ன்னு அவர் சொல்லிக் கொடுத்ததை நானும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். சில மாசங்களில் நான் சொன்னதே உண்மையாக ஆரம்பிச்சுது. கஸ்டமர்ஸ் நிறைய பேர் வர ஆரம்பிச்சதும், சப்போர்ட்டுக்கு ஆட்களை வைச்சுக்கிட்டேன்.  அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், தாய்லாந்துன்னு பல வெளிநாடுகளுக்குப் போய் பியூட்டி சம்பந்தமா நிறைய கோர்ஸ்களைப் படிச்சேன். கூடவே, பல நாடுகளுக்குப் போய் அழகுக்கலை சம்பந்தமா செமினார்களையும் நடத்த ஆரம்பிச்சேன். மாமியார் கிட்ட சொன்ன பொய்னால நல்லதே நடந்திருக்கு'' என்று சிரித்தவர் தன் மீது மீடியாக்களின் வெளிச்சம் விழுந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 

``ஒரு தடவை சன் டிவியில் இருந்து ஒரு பியூட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு என் பார்லருக்கு வந்திருந்தாங்க. அப்போ, அந்த புரோகிராமை ஹோஸ்ட் பண்ண பொண்ணுக்கும் கேமராமேனுக்கும் ஏதோ பிரச்னை வந்து, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு போயிட்டாங்க. வேற வழியில்லாம நானே அந்த புரோகிராமுக்கு காம்பியரிங் பண்ணிக்கிட்டே மாடலுக்கு மேக்கப்பும் போட்டுக் காட்டினேன். விஷயத்தைக் கேள்விப்பட்ட சன் டிவி நிர்வாகம் என்னை 'மலரும் மொட்டும்'  குழந்தைகள் நிகழ்ச்சிக்கு காம்பியரிங் பண்ணக் கூப்பிட்டாங்க. கூப்பிட்ட மரியாதைக்காக எனக்கும் காம்பியரிங்குக்கும் என்ன சம்பந்தம்னு தெரியாமலே அந்த புரோகிராமுக்குப் போனேன்.  எனக்குத் தெரியாத அனுபவமா இருந்ததால், லன்ச் டயத்துல வீட்டுக்கு ஓடி வந்துடலாம்னு அவங்களுக்குத் தெரியாம வெளியே வந்தேன். ஆனா,  என் நேரம்  அவங்க கண்ணுல மாட்டிக்கிட்டேன். 'எங்கப் போறீங்க'ன்னு கேட்டவங்களுக்கு 'லன்ச் சாப்பிடப் போறேன்'னு சொன்னேன். 'அதெல்லாம் நாங்களே தருவோம். வெளியேப் போகாதீங்க'ன்னாங்க. தப்பிக்க வழியே இல்லாம மறுபடியும் ஷூட்டிங் போனேன். அப்புறம் அந்த புரோகிராம் பிடிச்சுப்போய் செய்ய ஆரம்பிச்சேன்'' என்றவர், அதன் பிறகு சன் டிவியில் தொடர்ந்து 19  வருடங்கள் ஒரு அழகுக்கலை நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார். விளைவு வசுந்தராவின் முகமும் திறமையும் தமிழ் தெரிந்தவர்கள் எல்லோர் மத்தியிலும் அறிமுகமானது. அப்படியிருந்தும் உங்கள் பார்லர் சார்பாக ஏன் நிறைய கிளைகளை திறக்கவில்லை என்றோம். 

``நானும் முயற்சி செய்தேன். ஆனால், அது எனக்கு செட்டாகவில்லை. நான் ஒரு இடத்தில் இருக்கிறப்போ இன்னொரு இடத்துக்கு வருகிற கஸ்டமர் நான் இல்லாம வருத்தப்பட ஆரம்பிச்சாங்க. சிலர் திரும்பியும் போயிட்டாங்க. அப்ப தான் என் ஹஸ்பெண்ட், `நீ இதை பெருசா பண்றதைவிட பெஸ்ட்டா பண்ணு'ன்னு சொன்னார். எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. ஏனென்றால், கஸ்டமர்ஸ் அவங்க முகத்தையே என்னை நம்பித் தர்றாங்க. அதை இன்னும் அழகுப்படுத்தணும்னா என்னோட பங்களிப்பு அதுல முழுசா இருக்கணும்னு நினைச்சேன். ஸோ, பிசினஸ் ஆசைகளையெல்லாம் மூட்டைக் கட்டி வைச்சுட்டேன்'' என்று முகம் மலர்ந்து சிரிக்கிற வசுந்தரா, இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பெண்களுக்கு அழகுக்கலை சொல்லித் தந்திருக்கிறார். அதில் சில திருநங்கைகளும் அடக்கம். 

உங்கள் அழகான சாதனைகள் தொடரட்டும் வசுந்தரா!