Published:Updated:

`வெற்றிகரமான தோல்வின்னா இதான்!' - ஃப்ளிப்கார்ட்டுக்கு முன்பே உருவான இந்திய இ-காமர்ஸ் நிறுவனத்தின் கதை #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`வெற்றிகரமான தோல்வின்னா இதான்!' - ஃப்ளிப்கார்ட்டுக்கு முன்பே உருவான இந்திய இ-காமர்ஸ் நிறுவனத்தின் கதை #VikatanExclusive
`வெற்றிகரமான தோல்வின்னா இதான்!' - ஃப்ளிப்கார்ட்டுக்கு முன்பே உருவான இந்திய இ-காமர்ஸ் நிறுவனத்தின் கதை #VikatanExclusive

இன்றைக்கு இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனம் எது எனக் கேட்டால் பலரும் ஃப்ளிப்கார்ட் என்றே சொல்வோம். ஆனால், அது உண்மையல்ல; இந்தியா பிளாசாதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனம்.

'வெற்றிகரமான தோல்வி!'... தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போதைக்கு இது ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட். ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை, இதன் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. 1969-ல் அப்போலோவில் சென்று, ஆம்ர்ஸ்ட்ராங் நிலவில் தடம் பதித்தது அனைவருக்கும் தெரியும். அதேபோல 1970-லும் நிலாவில் மனிதர்களை இறக்கி ஆய்வுசெய்யும் நோக்கோடு, அப்போலோ 13 என்ற விண்கலத்தை அனுப்பியது நாசா. ஜிம் லோவெல், ஃபிரெட் ஹைஸ், ஜேக் ஸ்விக்கெர்ட் ஆகிய மூவர்தான் இந்தப் பயணத்தின் நாயகர்கள். கிளம்பி இரண்டாவது நாள்களிலேயே விண்கலத்தின் ஆக்சிஜன் டேங்குகள் வெடித்தன. விண்கலத்தின் மின்சக்திக்கென இருந்த ஒரே வழி அது மட்டும்தான். எனவே இனி நிலாவுக்குப் போவதென்ன, மூவரும் பிழைத்திருப்பதே கடினம் என ஆனது. அந்தச் சமயம் அவர்களுக்கு இருந்தது இரண்டே இரண்டு நம்பிக்கை. ஒன்று விண்கலத்தில் இருந்த பேட்டரி பவர். இரண்டாவது, பூமியிலிருந்து கொண்டு மூவரையும் காப்பாற்றிவிடத் துடிக்கும் நாசா விஞ்ஞானிகளின் உழைப்பு. விண்கலத்தில் இருக்கும் மின்சாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே பூமிக்கு பத்திரமாகத் திரும்ப முடியும். என்ன செய்வது? இயன்ற அத்தனை எல்லைக்கும் போய் அறிவியலோடு போராடினர் நாசா விஞ்ஞானிகள். துரிதமாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அவையனைத்தும் விண்வெளியில் சரியாக வருமா என்பதை அறிய, சிமுலேட்டர்கள் மூலம் சோதிக்கப்பட்டன. இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்ததும் உடனே விண்வெளிக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அத்தனை பதற்றத்திலும், கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றினர் வீரர்கள். மொத்தம் ஆறு நாள் போராட்டம். அவையனைத்தையும் கடந்து, ஏப்ரல் 17-ம் தேதி வெற்றிகரமாக விண்கலனை பூமிக்குள் கொண்டுவந்து, பசிபிக் கடலில் பாராசூட் கட்டிக்கொண்டு குதித்தனர் வீரர்கள். அப்போதுதான் நாசா விஞ்ஞானிகளுக்கு உயிரே வந்தது! 

நிலாவில் இறங்கி ஆய்வுசெய்ய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லைதான். அந்த வகையில் தோல்விதான். ஆனால், மூன்று அமெரிக்க வீரர்களை விண்வெளியில் தொலைக்காமல் பத்திரமாக தரையிறக்கி காட்டியது நாசா. அதுவும் பிழைத்திருப்பதே கடினம் என்ற நிலையிலும், எந்தவொரு நொடியிலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அவர்களை பூமிக்குக் கொண்டுவர போராடினர் விஞ்ஞானிகள். இவர்களுக்கு என்ன ஆகுமோ என அவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல; மொத்த அமெரிக்காவும் பதறியது. அந்த முயற்சியில் இறுதியாக வெற்றிபெற்றது நாசா. ``அந்த வகையில் இது எங்களுக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி!" என்றது நாசா. சில தோல்விகள் இப்படித்தான். வெற்றிகள்கூட தராத அனுபவங்களை, அவை நமக்குச் சொல்லித்தரும். அப்படி அப்போலோ 13 தந்தது நாசாவுக்கான படிப்பினைகளை மட்டுமல்ல; ஒரு நம்பிக்கையை. இதேபோல இந்தியாவின் இ-காமர்ஸ் துறையிலும் வெற்றிகரமான தோல்வியைத் தழுவிய ஒருவர் இருக்கிறார். அவர் வைத்தீஸ்வரன். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனமான 'இந்தியாபிளாசா'-வின் (Indiaplaza) நிறுவனர். 

இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, நாசாவின் அப்போலோ 13 போல இந்தியா பிளாசா தன்னுடைய முயற்சியில் வெற்றியடைந்துவிடவில்லை. ஆனால், இ-காமர்ஸ் என்னும் ரிஸ்க்கான பயணத்தின் படிப்பினைகளை, பின்வரும் தலைமுறையினருக்கு தந்துவிட்டுப் போயிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனம் எது எனக் கேட்டால் பலரும் ஃப்ளிப்கார்ட் என்றே சொல்வோம். ஆனால், அது உண்மையல்ல; இந்தியா பிளாசாதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனம். முதலில் வெறும் மியூசிக் கேசட்டுகள், புத்தகங்கள் எனத் தொடங்கிய இதன் கதை, பல்வேறு சுவாரஸ்ய அத்தியாயங்களைக் கொண்டது. 

விப்ரோவில் விழுந்த விதை

சென்னையைச் சேர்ந்தவரான வைத்தீஸ்வரன், 1989-ல் விப்ரோவில் பொறியாளராக பணியில் சேர்கிறார். அடுத்த பத்தாண்டுகளுக்கு பணியில் எவ்வித சிக்கலுமில்லை. சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது. அப்போது திடீரென ஒருநாள் அலுவலகத்தில் கணினியில் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்கிறார். அது வேறொரு தளத்துக்கு அழைத்துச்செல்கிறது. அதன் பெயர், அமேசான். (இப்போது நமக்கு அறிமுகமே தேவையில்லை). மின்னஞ்சல் கூட வியப்பாகத் தெரிந்த வைத்தீஸ்வரனுக்கு அமேசானும், இணையத்திலேயே ஷாப்பிங் செய்யலாம் என்ற விவரமும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதென்ன இ-காமர்ஸ்? இது எப்படி இயங்கும்? வியப்பு தேடலாக மாறுகிறது. அந்த சமயம்தான் விப்ரோவில் புதிதாக ஒரு விஷயம் நடக்கிறது. சொந்தமாக ஒரு இ-காமர்ஸ் டிவிஷனைத் தொடங்கும் முயற்சியில் இறங்குகிறது விப்ரோ. இவருக்கோ உற்சாகம். இ-காமர்ஸ் உலகத்தை இங்கிருந்தே தொடங்கலாம் என மனக்கணக்கு போடுகிறார் மனுஷன். ஆனால், விப்ரோ போட்ட கணக்கு வேறு. இ-காமர்ஸ் புத்தம்புது ஒரு தொழில் என்பதால் இளைஞர்களை மட்டுமே அதற்கு அழைத்தது விப்ரோ. அப்போது வைத்தீஸ்வரனுக்கு வயது 35. அதன்பின்புதான் அவருக்கு இ-காமர்ஸ் தாகம் இன்னும் அதிகரித்தது. அமேசானின் அந்த க்ளிக் வைத்தீஸ்வரனின் வாழ்க்கையையே மாற்றியது. உடனே அடுத்த சில மாதங்களில் உடன் ஐந்து நண்பர்களும் இணைந்து ஒரு தளத்தைத் தொடங்குகின்றனர். அதன் பெயர் Fabmart. ஆன்லைனில் ஆடியோ கேசட் மற்றும் CD-க்கள் விற்கும் தளம். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனத்தின் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

ஆனால், அதற்கு அப்போது இந்தியாவும் சரி; இணையமும் சரி; முழுமையாகத் தயாராகியிருக்கவில்லை. இந்த ஆன்லைன் கடை குறித்து அப்போதைய முன்னணி இசை நிறுவனங்களிடம் எடுத்துச்சொன்னால் கூட அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பலருக்கும் இது என்ன என்றே புரியவில்லை. இத்தனைக்கும் விளம்பரங்களுக்காக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எல்லாம் அப்போதே பயன்படுத்தியது Fabmart டீம். இந்த தளத்தில் முதல் ஆடியோ கேசட்டை பாடி வெளியிட்டவர் பாலமுரளி கிருஷ்ணா. 1999-ல் விநாயகர் சதுர்த்தி அன்று, பாலமுரளி கிருஷ்ணா இந்தத் தளத்துக்கென பிரத்யேகமாக பாடிய 'சர்வஸ்ரீ' என்ற சிங்கிளுடன்தான் தளமே தொடங்கப்பட்டது. ஆனால், அப்போதும்கூட எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பில்லை. தளம் தொடங்கப்பட்டு ஒரு வாரம் கழித்துத்தான் முதல் வாடிக்கையாளரே கிடைத்தார்.

Fabmart டு இந்தியாபிளாசா

முதலில் மியூசிக் கேசட்டுகள் மற்றும் CD-க்களில் தொடங்கிய Fabmart-ன் பயணம் பின்னர் கேம்கள், புத்தகங்கள், நகைகள் என அடுத்தடுத்து விரிவடைந்தது. தொடர்ந்து மளிகைப்பொருள்களையும் விற்பனை செய்யத்தொடங்கியது Fabmart. அந்தச் சமயம் அனைத்து இடங்களிலும் சேமிப்புக் கிடங்குகளை நிறுவமுடியாது என்பதால், ஆஃப்லைன் ஸ்டோர்களை நிறுவி அதையே இன்வென்ட்டரியாகவும் பயன்படுத்தத் தொடங்கினர். பிறகுதான் முழு இ-காமர்ஸ் நிறுவனமாக மாறியது Fabmart. அதைத்தொடர்ந்து Fabmall-ஆக பெயர் மாற்றப்பட்ட இந்நிறுவனம், 2007-ல் இந்தியா பிளாசாவாக மாறியது. டாட்காம் சரிவு, பொருளாதார மந்தநிலை, உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலின் சமயம் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் என 1999-லிருந்து 2013 வரைக்கும் நிறைய சவால்களை எதிர்கொண்டும் நிலைத்துநின்ற இந்நிறுவனம், இறுதியில் சரியான முதலீடு இல்லாத காரணத்தால் மூடப்பட்டது.

முதல் இந்திய இ-காமர்ஸ் நிறுவனமாக உருவான இந்தியா பிளாசா இந்தத் துறையில் நிறைய புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகம் செய்தது, Pin Based பணப்பரிவர்த்தனையை சிட்டி வங்கியோடு சேர்ந்து செயல்படுத்தியது, இ-காமர்ஸ் வணிகத்துக்கான பிசினஸ் மாடலை வடிவமைத்தது, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை துல்லியமாகப் பயன்படுத்தியது என இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் வளர்ந்துவந்த சமயத்தில் அதே அச்சில் இணைந்து பயணித்திருக்கிறது இந்நிறுவனம். 

இறுதி வரைக்கும் முதலீடு கிடைக்காமல் போனதற்காக வைத்தீஸ்வரன் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, இந்தியா பிளாசாவின் காலத்தில் அதன் எதிர்காலத்தை நினைத்து முதலீடு செய்யும் அளவுக்கு அதற்கேற்ற முதலீட்டாளர்கள் இல்லை. இரண்டாவது, அப்போது இ-காமர்ஸில் ஆர்வம் காட்டிய சில முதலீட்டாளர்களும் வைத்தீஸ்வரன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அதற்கு அவர்கள் காரணமாக சொன்னது, இவர் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற பெரிய கல்வி நிறுவனங்களிலிருந்து வந்தவர் இல்லை என்பதே. அதேபோல இந்நிறுவனத்துக்கு இருந்த இன்னொரு மிகப்பெரிய சிக்கல், ஆரம்பிக்கப்பட்ட நேரம். மக்களிடம் இணையமே இன்னும் முழுமையாகச் சேராத அந்தச் சமயத்தில், ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தால் அதிகபட்சம் என்ன செய்துவிடமுடியும்? இப்படிப் பல்வேறு காரணங்களால்தான் இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனம் சத்தமின்றி மூடப்பட்டது.

வணிகரீதியில் பெரும்தோல்விதான் என்றாலும், அதில் கிடைத்த படிப்பினைகளையே வெற்றியாகக் குறிப்பிடுகிறார் வைத்தீஸ்வரன். இன்று நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், அரசின் இ-காமர்ஸ் நிறுவனமான GeM-மிற்கும் ஆலோசகராக இருந்து வருகிறார் இவர். அரசின் இ-காமர்ஸ் பாலிசிகள் இந்திய நிறுவனங்களைக் கொஞ்சம் அசைத்துப்பார்க்கும் இந்த வேளையில், நேரில் சந்தித்துப் பேசினோம். அரசின் புதிய கொள்கைகள் தொடங்கி, தோல்வியடைந்த தொழில்முனைவோர்களை சமூகம் எதிர்கொள்ளும் விதம் வரை நிறைய விஷயங்களை உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.

``ஃப்ளிப்கார்ட், அமேசான் இரண்டுமே முதலில் ஆன்லைன் புத்தகங்கள் மூலம்தான் தங்கள் வர்த்தகத்தைத் தொடங்கின. இந்தியா பிளாசாவும் அப்படித்தான். ஏன் எல்லா இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்கள் பயணத்தை புத்தகங்களிலிருந்தே தொடங்குகின்றன?"

``பொருள்களின் Catalogue-தான் முதல் காரணம். ஒரு ஆஃப்லைன் மொபைல் கடையில் 100 மொபைல்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒரு பத்துதான் அதிகம் விற்பனையாகும். எனவே அந்தப் பத்தை மட்டுமே வாங்கி வச்சிக்கலாம்னுதான் அந்தக் கடைக்காரர் நினைப்பார். கொஞ்சம் பெரிய கடைன்னா மட்டும்தான் எல்லா மொபைலையும் வச்சிருப்பாங்க. இதுவே ஆன்லைன்னா அந்தப் பிரச்னையே இல்லை. இன்னும் 200 மொபைலைக்கூட அதில் லிஸ்ட் பண்ண முடியும். இப்படி ஆஃப்லைன் வாடிக்கையாளர்கள், ஆன்லைனுக்கு வரும்போது அவர்களுக்கு அதோட வீரியம் புரியணும். அந்த இரண்டுக்குமான வித்தியாசத்தைச் சரியா உணர்த்தணும். அதுக்காகத்தான் புத்தகத்திலிருந்து எல்லோரும் தொடங்குனாங்க. உதாரணமா ஒரு பெரிய புத்தகக்கடைக்குப் போனீங்கன்னா அதிகபட்சம் 10,000 - 15,000 புத்தகங்கள் வச்சிருப்பாங்க. ஆனா, இப்போ அமேசான்ல 10 மில்லியன் புத்தங்கங்கள் இருக்கு. எங்களோட இந்தியா பிளாசாலயும் பத்து மில்லியன் புத்தகங்கள் லிஸ்ட் பண்ணியிருந்தோம். இந்தளவுக்கு எளிமையா, அதே சமயம் இவ்வளவு அளவுக்கு Catalogue பண்ண புத்தகங்கள்தான் எளிதான ஒரு வழி. மேலும், முதல்முறையாக ஆன்லைன் ஷாப்பிங் பண்றவங்களுக்கு அந்தத் தளம் மேல ஒரு சந்தேகம் இருக்கும். அதனால 10,000 - 15,000 ரூபாய் மொபைல்ன்னா உடனே யாரும் வாங்கமாட்டங்க.அதுவே 100 ரூபாய் புத்தகம்னு அந்தப் பயம் இருக்காது. ஒருமுறை முயற்சி பண்ணலாமேன்னு ஆர்டர் பண்ணுவாங்க. இப்படி முதல்ல வாடிக்கையாளர்கிட்ட நம்பிக்கையை வளர்க்கிறதுதான் ரொம்ப முக்கியம். அதற்கு எளிமையான வழி புத்தகம்தான். நாங்க ஆடியோ கேசட்ல இருந்து தொடங்கினோம். ஆனால், இதெல்லாம் சில வருடங்கள் முன்பு வரைக்கும்தான். இப்போ இ-காமர்ஸ் நிறுவனங்கள் மேல எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. அதனால், இப்போ இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை"

``1998-ல் தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனம் இந்தியா பிளாசா. அப்போதிருந்த முதலீட்டாளர்கள் இ-காமர்ஸ் வர்த்தகத்தை எப்படிப் பார்த்தார்கள்?"

``பெரிதாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால், புதிதாக இவர்கள் ஏதோ செய்கிறார்கள் என்ற அளவுக்குத்தான் இதைப் புரிந்துகொண்டார்கள்."

```இந்தியாவின் முதல் இ-வாலட், முதல் PIN based Payments, முதல் கேஷ் ஆன் டெலிவரி என இ-காமர்ஸ் துறையில் நிறைய புதிய முன்னெடுப்புகளை இந்தியா பிளாசா செய்திருக்கிறது. இவையனைத்தும் எப்படி உருவாயின?"

``எல்லாமே வாடிக்கையாளர்களோட தேவை என்னன்னு தேடினதில் கிடைச்ச ஐடியாக்கள்தான். எங்களுக்கு இந்த பிசினஸில் பெரிய முன்மாதிரிகள் எதுவும் இல்லாததால நாங்களேதான் எல்லாத்தையும் செஞ்சு பார்த்து கத்துக்கவேண்டிய சூழல். அப்போ எங்களோட வாடிக்கையாளர்கள் சொல்லும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏதாவதொரு புதுசா ஒரு தீர்வு கண்டுபிடிச்சிட முடியாதான்னு தேடுவோம். அப்படித்தான் ஒவ்வொரு மாற்றங்களையும் உள்ள கொண்டுவந்தோம். உதாரணமாக, 2001-லேயே நாங்க கேஷ் ஆன் டெலிவரிய அறிமுகம் செய்தோம். ஆன்லைனில் பொருள் வாங்குபவர்கள் பலருக்கும் பொருள்களைக் கையில் தொட்டுப்பார்த்து வாங்க முடியாதே என்ற குறை இருந்தது. அதைத் தெரிஞ்சுகிட்டுதான் அந்த ஆப்ஷனைக் கொண்டுவந்தோம். இப்போது இருப்பதுபோல, கேஷ் ஆன் டெலிவரி அப்போது எளிது இல்லை. வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வாங்கி, அடுத்தநாள் வங்கியில் படிவம் பூர்த்தி செய்து பணம் செலுத்தினால்தான் எங்கள் கணக்குக்கு பணம் வரும். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அதைக் கொண்டுவந்தாலும், COD நாங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லை. அதனால், இடைல நிறுத்திட்டோம். இதே மாதிரி ஒரு வாடிக்கையாளர் 50,000 ரூபாய்க்கு செக் அனுப்பி, இதை என்னோட அக்கவுன்ட்ல வச்சிக்குங்க. நான் புத்தகமா வாங்கி கழிச்சிக்குறேன்ன்னு சொன்னாங்க. அதுதான் முதல் ஆன்லைன் இ-வாலட் உருவாக இன்ஸ்பிரேஷன். அதே மாதிரி பொருள்களை டெலிவரி செய்யவும், ஆன்லைன் பிசினஸை தாங்கி நிறுத்தவும் வேற என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் ஆஃப்லைன் ஸ்டோர் ஐடியா வந்தது. இன்றைக்கு இருக்கிற ஹைப்பர் மார்க்கெட் மாடல்கள் இப்படித்தான் இயங்குகின்றன. இப்படி ஒவ்வொரு தேவையும், அதற்கான தீர்வை கொண்டுவந்தது எனச் சொல்லலாம்"

``இந்தியாவின் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் கேஷ் ஆன் டெலிவரி (COD) பெரும் தாக்கம் செலுத்தியதாக ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் முழுமையாக மறுக்கிறீர்களே?"

``இங்கு கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே மிக அதிகம். அவர்களிலேயே பெரும்பாலானோர் ஆன்லைன் வர்த்தகம் செய்வதில்லை. நிலைமை இப்படியிருக்க நாம் COD வசதியைக் கொடுத்தால் அவர்களும் கார்டு பேமன்ட்டை விட்டுவிட்டு, COD-யைத்தான் பயன்படுத்துவாங்க. இது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குத்தான் நஷ்டம். இதையெல்லாம் விட முக்கியமான காரணம், ஒருவர் தொடர்ந்து ஒரு தளத்தில் COD ஆப்ஷனையே பயன்படுத்திக்கொண்டிருந்தால் அவர் இன்னும் அந்தத் தளத்தை முழுமையாக நம்பலைன்னுதான் அர்த்தம். அது அந்த தளத்துக்கும் நல்லதில்லையே? COD மோகம் உச்சத்திலிருந்த 2011-ல் கூட நாங்கள் மீண்டும் COD ஆப்ஷனை எங்கள் தளத்தில் கொண்டுவந்தோம். ஆனால், அப்பவும் வாடிக்கையாளர் எண்ணிக்கைல பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கல. இதைத்தான் நான் பல வருடம் முன்னாடியே சொன்னேன். இப்போ மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் இதையே வலியுறுத்த தொடங்கியிருக்காங்க. அதனால் COD-தான் இந்திய இ-காமர்ஸோட கேம் சேஞ்சர்னு சொல்றதெல்லாம் பொய்."

``எந்தவொரு தொழிலும் அதன் முன்னோடிகள்தான் அதிகம் சிரமப்படுவார்கள். பிசினஸ் மாடல், முதலீடு எனப் பல சிரமங்கள் இருக்கும். அதேபோல சந்தையில் வேறு போட்டியாளர்கள் யாரும் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஈர்க்கமுடியும், சந்தையில் வலுவாக காலூன்ற முடியும் என நிறைய வாய்ப்புகளும் இருக்கும். இப்படி Firstmover Advantage, Disadvantage என இரண்டும் உண்டு. இந்த Disadvantage-தான் இந்தியா பிளாசா தோல்வியடையக் காரணமா?"

``நிச்சயமா. இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தை எப்படியிருக்கும், அதோட வாடிக்கையாளர்கள் யார், இதோட மதிப்பு என்ன, இந்தியாவுக்கு ஏற்ற பிசினஸ் மாடல் என்னனு எதுவுமே தெரியாத ஒரு சூழ்நிலையில்தான் நாங்க எங்க பயணத்தைத் தொடங்குனோம். அதில் பல விஷயங்களை சாதிச்சோம். பல இடங்கள்ல சறுக்கினோம். ஆனா, அதையெல்லாம் பாடமா எடுத்துட்டுதான் 13 வருஷம் நிலைச்சு நின்னோம். இப்போ இ-காமர்ஸ் நிறுவனங்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிற பல பிசினஸ் மாடல்களை அப்போவே செயல்படுத்தினோம். இருந்தும்கூட தோத்துட்டோம். இதுக்கு பல காரணங்கள் இருந்தாலும், எங்கள மாதிரி குறைவான முதலீடு கொண்ட ஒரு நிறுவனத்துக்கு நிறைய சோதனை முயற்சிகள் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், நாங்கள்தான் முதல் நிறுவனம்றதால அதையெல்லாம் செஞ்சாதான் நிலைக்கமுடியும்ன்ற கட்டாயம். இந்த இரண்டும் எங்களை ரொம்பவே பாதிச்சது. இன்றைக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்ற ஒரு பிசினஸ் மாடலைக் கண்டுபிடிக்கலை. இன்னும் அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டுமே இ-காமர்ஸ் பிசினஸில் லாபம் பார்க்க ஆரம்பிக்கல. அமேசானுக்கு இன்றைக்கு வருகிற வருமானத்தில் பெரும்பகுதி வேறு தொழில்களிலிருந்துதான் வருது. இருந்தும்கூட இரண்டும் இங்கே நிலைச்சு நிற்கக் காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் அதிகப்படியான முதலீடுதான். அதுதான் அவர்களை இன்னும் காப்பாத்திட்டுருக்கு. துரதிருஷ்டவசமா அதுதான் எங்களுக்கு கிடைக்கல. கடைசி காலகட்டத்தில எங்களுக்கான முதலீடு கிடைச்சிருந்தா, இந்தியா பிளாசாவோட கதையே மாறியிருக்கலாம்."

``இன்னுமே கூட லாபம் வராத பட்சத்தில், எதற்காக அமேசான், ஃப்ளிப்கார்ட் (வால்மார்ட்) இரண்டும் இன்னும் இன்னும் முதலீட்டை அதிகரித்துக்கொண்டே போகணும்?"

``இ-காமர்ஸில் தங்களோட இடத்தை விட்டுடக்கூடாதுன்றதுதான் அதற்கு காரணம். இன்றைக்கு உலகளவுல அதிகமான ஆன்லைன் வாடிக்கையாளர்கள் இருப்பது சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவில்தான். இதில் சீனாவில் அலிபாபா Vs அமேசான் போட்டி இருந்தது. அங்கே அலிபாபாதான் ஜெயிச்சது. இதேபோல அமெரிக்காவில் அமேசான்தான் ராஜா. இதற்கடுத்த பெரியகுறி இந்தியா. இங்கே வால்மார்ட் Vs அமேசான் போட்டி நடக்குது. இங்கே இரண்டு நிறுவனங்களும் இந்தச் சந்தையை விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லை. அதனாலதான் மேன்மேலும் முதலீடு பண்ணி, இங்கே தொடர்ந்து தங்களோட இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கிறாங்க."

``இப்படியொரு சூழலில், அரசின் இ-காமர்ஸ் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும்?"

``இன்றைக்கு இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கக்கூடிய ஒரு துறை இ-காமர்ஸ். இதற்கு அரசின் கொள்கைகள் எந்த விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பதே என்னோட கருத்து. "

``ஆனால், இவ்வளவு வருடங்கள் தொடர்ந்து அவர்களால் சிறுவணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால்தானே இந்தக் கொள்கைகள் (புதிய FDI பாலிசி) கொண்டுவரப்படுகின்றன?"

``உண்மைதான். ஆனால், அதற்கு இந்தக் கொள்கைகள் மட்டுமே தீர்வில்லையே? இதற்குப் பதிலாக, இந்தியாவில் இருக்கும் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் இந்தியாவில் மட்டும்தான் பொருள்கள் கொள்முதல் பண்ணனும்னு சொல்லுங்க. இங்க இருக்கிற வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பயன்பெறுவாங்க. அதற்குப் பதிலாக, இந்தளவு கட்டுப்பாடுகள் விதிப்பது சரியில்லை. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாவற்றையும், இந்தியாவுக்கு வாங்க, முதலீடு பண்ணுங்கன்னு அழைச்சிட்டு, மறுபக்கம் இப்படி அவர்களைத் தடுக்கிறது சரியாக இருக்காது"

``தோல்வியடைந்த தொழில்முனைவோர்களை தற்போதைய வணிகச்சூழல் எப்படிப் பார்க்கிறது?"

``ஒரு நிறுவனம் என்பது தோல்வியடையலாம்; ஆனால், ஒரு தொழில்முனைவோர் என்றைக்கும் தோல்வியடைவதில்லைன்னு அடிக்கடி சொல்வேன். காரணம், அவரோட தொழில் நஷ்டமடைஞ்சுடுச்சே தவிர, அவரோட அறிவிலோ, அனுபவத்திலோ எந்தக் குறையும் அதனால ஏற்படப்போறதில்ல. அந்த அனுபவம்தான் அவரோட பொக்கிஷம். ஆனால், இங்கே தோல்வியடைஞ்ச தொழில்முனைவோர்களை பார்க்கும் விதம் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கு. இதுவே சிலிக்கான் வேலிய எடுத்துகிட்டா, அங்க ஒரு நிறுவனத்தை யாராவது மூடினால், அதன் நிறுவனரை தங்களோட நிறுவனங்கள்ல வேலைக்கு வச்சிக்க நிறையபேர் விரும்புவாங்க. காரணம், அவங்களோட அனுபவம்தான். அது எவ்வளவு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் ஒருத்தருக்கு உடனே கிடைச்சிறதில்லயா? அதுவும் இவ்வளவு ஸ்டார்ட்அப்கள் இருக்கும் நாட்ல, இன்னும் அவையெல்லாம் வளரணும்னு நினைக்குற நாட்ல தோத்துப்போனவங்கள இன்னும் ஒதுக்கி வைச்சிட்டே இருந்தோம்னா, புதுசா வர்றவங்களுக்கு அது மேலும் பயத்தைதானே கொடுக்கும்? ஏற்கெனவே இங்கே ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மாதிரி பெரிய பெரிய கல்வி நிறுவனங்கள்ல படிச்சிட்டு வர்றவங்களுக்கு மட்டும்தான் திறமையும், அறிவும் இருக்கு; அவங்களை மட்டும்தான் நம்பி முதலீடு பண்ணலாம்னு ஒரு போலியான பிம்பத்தை இங்க வளர்த்து வச்சிருக்காங்க. அவங்க தொடங்குன ஸ்டார்ட்அப்லயே எவ்ளோ நிறுவனங்கள் இங்க காணாம போயிருக்குன்னு யோசிக்க மாட்டிங்கறாங்க. இதையெல்லாம் தாண்டி புது தொழில்முனைவோர் இங்கே ஜெயிக்கிறதே பெரிய விஷயம். அது சிலருக்கு தொடர்ந்து அமையலாம். சிலருக்கு தோல்வி ஏற்படலாம். அவ்வளவுதான். அதனால, தோற்றுப்போன தொழிலதிபர்களை, திறமையற்றவர்கள்னு பார்க்கிற பிம்பம் மாறணும்"

இந்தியா பிளாசாவின் மொத்த வரலாற்றையும் 'Failing to Succeed: The Story of India’s First E-Commerce Company' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார் வைத்தீஸ்வரன். அதில் இந்தியா பிளாசாவின் தோல்வி குறித்துக் கூறுகையில், உளவியலாளர் எலிசபெத் குப்ளர் ரோஸ்ஸின் வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார். 

``வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஏதாவதொரு காரணத்துக்காகவே நடக்கிறது. அதில் எதுவுமே யதேச்சையானது இல்லை; எதுவுமே உங்களுடைய தவறும் இல்லை"

அவற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு