Published:Updated:

`ஸ்னோலின், ராஜலட்சுமி, ஆசிஃபாவின் தழும்புகளை முன்னிலைப்படுத்தி ஓவியம்!’ #ScarsOfSociety

"கேமரா ஒளிச்சுவெச்சு, முழு மேக்-அப்போட மாடலை பஸ் ஸ்டாப்ல போய் நிக்க வெச்சோம். அங்க இருந்தவங்க அந்தப் பொண்ணைப் பார்த்தும், யாருமே எந்த ரியாக்ஷனும் கொடுக்காம இருந்தது எங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருந்துச்சு."

`ஸ்னோலின், ராஜலட்சுமி, ஆசிஃபாவின் தழும்புகளை முன்னிலைப்படுத்தி ஓவியம்!’ #ScarsOfSociety
`ஸ்னோலின், ராஜலட்சுமி, ஆசிஃபாவின் தழும்புகளை முன்னிலைப்படுத்தி ஓவியம்!’ #ScarsOfSociety

“பல கனவுகளைச் சுமக்கும் கண்களை நாம் நிறைய பார்த்திருப்போம், கடந்திருப்போம். ஆனால், அனைத்தும் கனவாகவே முடிந்துவிடப் போகிறது எனத் தெரியவரும்போது அந்தக் கண்கள் எப்படி இருக்கும், என்னென்ன கதைகளைச் சொல்லும், கல்வி குறித்த பெரும் கனவோடு இருந்தவள் 14 வயது ராஜலட்சுமி. அவளின் கழுத்து, சாதியின் பெயரால் அறுக்கப்பட்டபோது, அவளின் கண்கள் எப்படி இருந்திருக்கும், அவை இந்த உலகத்துக்கு என்ன சொல்ல வந்திருக்கும், எந்தப் பார்வையை விட்டுச் சென்றன அந்தக் கண்கள், மதத்தின் பெயரால் வன்புணர்வு செய்யப்பட்ட ஆசிஃபாவின் கண்களைக்கூட நான் யோசிக்கிறேன். அவளின் இறுதி மூச்சு இந்த உலகத்துக்கு எந்தக் கனவைத் தன்னுடைய மிச்சமாக விட்டுச் சென்றிருக்கும், தூத்துக்குடி போராட்டத்தில் தலையில் துப்பாக்கிக் குண்டை ஏந்திய ஸ்னோலினின் எண்ணங்கள் அந்த நொடியில் எப்படி இருந்திருக்கும்?” இப்படித்தான் என்னிடம் பேசத்தொடங்கினார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

ஆசிஃபாவும், ஸ்னோலினும், ராஜலட்சுமியும் நம் நாட்டின் தழும்புகள். இவர்களைப்போல் பல ஆசிஃபாகளும், ராஜலட்சுமிகளும் நம்மோடு தினமும் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களுக்கு அடையாளம் கொடுக்கும் விதமாக `Scars of Society' எனும் பெயரில் கான்செப்ட் ஷூட் ஒன்றை நடத்தி, மக்களின் பாராட்டுகளை குவித்துக்கொண்டிருக்கும் அர்ச்சனாவிடம் அதுகுறித்து பேசினேன். இதோ, அந்தச் சிறு உரையாடல்!

``ஏன் Scars of Society?"

``அப்பா எந்நேரமும் டிவில செய்திகள்தான் பாத்துட்டு இருப்பார். அப்போதான் தொடர்ந்து பாலியல் வன்முறை, கொலைனு ஏகப்பட்ட மோசமான செய்திகள் வருவதை கவனிச்சேன். சமூகம் முன்னேறுது முன்னேறுதுன்னு சொல்லுறாங்களே... ஆனா, எதுவுமே மாறலையே. இன்னும் மோசமாத்தான் போகுது. சமீபத்திய செய்திகள்ல என்னை ரொம்ப பாதிச்ச நாலு பெண்களோட நிலைமையை விளக்கப்படமா வரைஞ்சேன். அதுல ஒவ்வொரு பெண்ணோட நிலைமையைக் குறிக்க, தழும்புகளை முன்னிலைப்படுத்தி வரைஞ்சிருந்தேன். இதை அப்படியே ஷூட் பண்ணணும்னு எனக்குள்ள பயங்கர ஆவேசம். இப்படிதான் Scars of Society உருவாச்சு."

``இதன் மையக்கரு என்ன?"

``இங்க பாதிக்கப்பட்டவங்க எல்லாருமே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். இவங்களுக்கு இப்படி ஆகும்னு நினைச்சுப் பார்த்திருப்பாங்களா? இவங்கள்ல நாமளும் ஒருத்தர்தானே. காலங்காலமா மாறிடும்னு சொல்ற எந்த ஒரு பிரச்னையும் மாறவேயில்லை. தினமும் புதுப்புது பிரச்னைகள் வரும். எந்த இடத்துலயும் உன்னோட தன்னம்பிக்கையும், முகத்துல இருக்கிற உன்னோட சிரிப்பையும் விட்டுக்கொடுத்துடாதன்னு சொல்றதுதான் இதோட மெயின் கான்செப்ட்."

``நீங்க எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?"

``இந்த கான்செப்ட்டுக்கு, நிராகரிப்பு மட்டுமே ஆரம்பத்தில் எனக்குக் கிடைச்ச பரிசு. மாடல் முதல் ஸ்டுடியோ வரை எல்லா இடத்துலயும் பிரச்னைகள்தான். இதுல, லாபம் எதுவும் எதிர்பார்க்காமல் நல்லெண்ணத்தோடு வந்து வேலை செய்றவங்கதான் சரினு மனசுல பட்டுச்சு. அந்தச் சமயத்துலதான் போட்டோகிராபர் அனிதா, மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் கபுக்கி, மாடல் ரோஷினி முன்வந்தாங்க."

``தழும்புகள் தீட்டிய ஒப்பனையோடு, சாலையில் படம்பிடித்தபோது மக்களின் ரியாக்ஷன் என்ன?"

``முதல்ல ஸ்டுடியோ உள்ளேதான் ஷூட் பண்ணினோம். ஆனா, திடீர்னு எனக்கு ஒரு ஐடியா, வெளில போய் பண்ணுனா என்னன்னு! கேமரா ஒளிச்சுவெச்சு, முழு மேக்-அப்போட மாடலை பஸ் ஸ்டாப்ல போய் நிக்க வெச்சோம். அங்க இருந்தவங்க அந்தப் பொண்ணைப் பார்த்தும், யாருமே எந்த ரியாக்ஷனும் கொடுக்காம இருந்தது எங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருந்துச்சு. இதுபோலதான் இந்தச் சமூகம்  பல விஷயங்களை கண்டும் காணாமல் கடந்துபோகுதுனு தோணுது."

``மறக்க முடியாத பாராட்டு?"

```பரியேறும் பெருமாள்' டீம் எங்க வேலைகளைப் பாராட்டி ஷேர் பண்ணுனது எங்களுக்குக் கிடைச்ச மிகப் பெரிய வேற்றினே சொல்லுவேன். மூணு மாசம் தனி ஆளா கஷ்டப்பட்டதுக்கான பலன். இது இல்லாம நெறைய பொதுமக்களும் அவங்க பாராட்டுகளை பதிவு செஞ்சிருந்தாங்க."