Published:Updated:

‘இதை மட்டும் இறந்த வீரர்களுக்காகச் செய்யுங்கள்!’- விராட் கோலிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்

‘இதை மட்டும் இறந்த வீரர்களுக்காகச் செய்யுங்கள்!’- விராட் கோலிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்
‘இதை மட்டும் இறந்த வீரர்களுக்காகச் செய்யுங்கள்!’- விராட் கோலிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 14-ம் தேதி மாலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு இந்தியத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசியல் தலைவர் உள்பட உலகத் தலைவர்களும் வலியுறுத்திவருகின்றனர். இதற்கிடையில், முன்னதாக இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கிய இணக்கமான நாடு என்ற அந்தஸ்தைத் திரும்பப் பெற்றது. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்துள்ளது மத்திய அரசு.

இதைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்கத் தலைமையகத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனுமாக இம்ரான் கானின் புகைப்படத்தை மறைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இம்ரான் கானின் புகைப்படத்தை முழுவதுமாக அங்கிருந்து நீக்க, இந்திய கிரிக்கெட் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம்தான் தயாரிப்பு பங்குதாரராக இருந்துவருகிறது. புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்,  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்பான்சரை நிறுத்தப்போவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சூப்பர் லீக் போட்டிகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மிக முக்கியமான ஸ்பான்சராக உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளது. அதில், ‘ சூப்பர் லீக்ஸ் போட்டிக்கு இந்தியா அளித்துவந்த ஸ்பான்சரை நிறுத்தியது ஏமாற்றமளிக்கிறது. இது தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்திவருகிறோம். விரைவில் எங்களுக்கான புதிய ஸ்பான்ஸரை தேடிப்பிடித்து அறிவிப்போம்’ என குறிப்பிட்டுள்ளனர். 

இதற்கு அடுத்தபடியாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பாகிஸ்தானுக்கு எதிராகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து சில ரசிகர்கள், இந்திய கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரை டேக் செய்து தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். 

அதில் , ‘வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்பதே அனைத்து ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. நாம் அவர்களுடன் விளையாடாமல் இருந்தால், இரண்டு புள்ளிகள் குறைந்து அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது. புள்ளிகள் குறைந்தாலும் பரவாயில்லை. இதை நீங்கள் இந்திய ராணுவத்தினருக்காகச் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

’உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதைப் புறக்கணிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.