Published:Updated:

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்!

வாழ்க்கை

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

வாழ்க்கை

Published:Updated:
ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்!

து ஒரு திருவிழா இரவு. மதுரைப் பக்கத்து கிராமம். மாராப்பு இல்லாத ரவிக்கை, தொப்புள் தெரியக் கட்டிய குட்டைப் பாவாடை, திகட்டும் அலங்காரம், மினுங்கும் ஜிகினா என ஆடிக்கொண்டிருக்கும் அந்தக் கரகாட்டப் பெண்களை, ஆயிரம் கண்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. 10, 20 ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதாகச் சொல்லி வரும் சில கைகளின் வன்மமான தீண்டல்களை லாகவமாகத் தவிர்த்தபடி, நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தன அந்தப் பெண்களின் கால்கள். தவிலும் தாளமும் சற்று ஓய்வெடுத்திருந்த இடைவேளையில், ஓட்டமும் நடையுமாக உடைமாற்றும் கொட்டகைக்குள் விரை கிறார்கள் அவர்கள். அங்கு, உறக்கத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளின் அருகில் அமர்ந்த அவர்களின் தவிப்பும் சோர்வும் ஒருவேளை புரிந்திருந்தால், வயது நாற்பதை ஒட்டிய அந்த ‘இளம்’ குடிமகன் கொட்டகை ஜன்னலைக் கள்ளப்பார்வையுடன் வெறித்திருக்க மாட்டான். சத்தம் பெரிதாக, ‘ஆட்டக்காரிங்கன்னா கொஞ்சம் நீக்குப்போக்காதான் இருக்கணும்’ என்று பேசிய ஊர்ப் பெரியவர்களிடம்(!) போராடத் திராணியற்று, அரை நாள் கூலியுடன் நள்ளிரவிலேயே கண்ணீரும் கம்பலையுமாக மதுரைக்கு பஸ் ஏறியது, அந்த நாட்டுப்புறக் கலைக்குழு.

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

அந்தக் கண்ணீர் நம் மனதில் ஈரம்காயாமலே இருக்க, அவர்களைத் தேடிச் சென்றோம். மதுரை அவனியாபுரத்தில், ‘ஆட்டக்காரவுக வீடு’ என்று கேட்டாலே, பெரியவர்கள் முதல் பொடிசுகள் வரை ஞானாம்பாள் வீட்டுக்கு ‘கூகுள் மேப்’ போட்டுக் கொடுக்கிறார்கள். முதலில் பேசத் தயங்கினாலும், பின்பு வார்த்தைகள் தடைபடவே இல்லை ஞானாம்பாளுக்கு.

“எங்களுக்குச் சொந்த ஊரு மதுரதேன். பச்சப் புள்ளையிலயிருந்தே ஊரச் சுத்தி எங்க திருவிழா, கச்சேரின்னு நடந்தாலும் பொண்டு புள்ளைகளோட போய் கும்மி கொட்டிப் பாடுறதும் மெட்டுக்கட்டி ஆடுறதும்தேன் எங்க வேலை. எங்க அப்பாரும் மேளக் காரவுகதேன். அவுககிட்டதேன் நான் ஆட்டம் கத்துக்கிட்டேன். 13 வயசுல கத்துக்க ஆரம்பிச்ச கூத்தும் கும்மாளமுந்தேன் இப்போ முழுநேரப் பொழப்பே. தானானே கொட்டு றது, கரகாட்டம், கொறத்தியாட்டம், தேங்காய் உடைக் குறது, சட்டியெடுத்து ஆடுறதுன்னு அம்புட்டையும்  இந்த 50 வயசு வரைக்கும் செஞ்சுக்கிட்டுதேன் இருக்கேன். எல்லாம் இந்தப் பாழாப்போன ஒடம்புக்கு அரை வயித்துக்காச்சும் கஞ்சி ஊத்தத்தேன் தாயி, வேறேன்ன. எங்க குடும்பத்துல எல்லாருமே ஆட்டக்காரவுகதேன். ஒவ்வொருத்தரும் ஓர் ஆட்டம் பழகி வெச்சுருப்போம். கரகமெடுத்து ஒயிலா ஆடவும் எங்க சனம்தேன்... கருமாதிக்கு ஒப்பாரி வெக்கவும் எங்க சனம்தேன். மட்டைக்கு (இறந்த வீடு) ஆடப்போறவுக, கோயிலு கச்சேரியலுக்கு ஆடக் கூடாதுன்னு எங்களுக்குள்ள வரமொற இருக்கும். ஆனா, இப்பெல்லாம் வயித்துப்பொழப்புக்காகச் செல நேரத்துல ரெண்டுக்குமே போற குரூப்புகளும் இருக்காக.

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

ஆட்டக்காரப் பொம்பளையா இருந்துக்கிட்டு நாங்க படாதபாடு இல்ல. எனக்கு மருமகப் புள்ள இருக்கு. என் மகன் சரியில்ல. அதனால என் மருமக, ரெண்டு கொழந்தைங்கனு எல்லாருமாதேன் கச்சேரிக்குப் போவோம். போற எடத்துல புள்ளைக்குப் பாலு கொடுக்க ஒதுங்குனாகூட தண்ணியப் போட்டுட்டு சுத்தி வந்து நின்னுக்குவாக. ஊருக்காரவுககிட்ட சண்டையடிச்சாலும் ஒருநா கூலி போயிடும். எப்படியோ சமாளிப்போம்.

எங்களுக்கு மட்டுமென்ன அரகொறையா ஆடணுமின்னு ஆசையா தாயி, நீயே சொல்லு. நாங்க மாராப்பு போட்டுக்கிட்டு ஆடுனா, ஊர்க்காரவுக வந்து மாராப்பில்லாம ஆடச் சொல்லுவாக. செலநேரம் மூணு நாளு திருவிழா ஆட்டத்துக்குக் கூப்புட்டிருப்பாக. ராப்பொழுதுக்கு அங்கேயே தங்குற மாதிரி ஆயிடும். நடுச்சாமத்துல வந்து கதவத் தட்டி, ‘ஆடுறதுக்குத்தானே காசு கொடுக்குது, வெளிய வாங்கடி பொண்டுகளா’ன்னு கெழடுக மொதக்கொண்டு வம்பு பண்ணுவாக. அப்புடித்தேன் ஒருதடவ கூத்துப் பாடப் போன எடத்துல, அன்னிக்கு மொதமொதல்ல ஆடவந்திருந்த எளவட்டப் புள்ளைய சீண்டலு பண்ணி, அதுக்கப்பறம் அந்தப் புள்ள ஆடாமயே போச்சு” - அவர்களின் வலியுணர்த்திய கனத்த மௌனத்தைக் கலைக்க முடியாமல் நாம் திணற, நினைந்து மகிழ்வதற்கான சில நினைவுகளைப் புரட்டிக்கொண்டு வந்து மீண்டும் ஞானாம்பாளே தொடர்ந்தார்.

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

“அட விடு தாயி, அது எங்க தலையெழுத்து. எம்புட்டு நடந்தாலும் எங்களுக்கும் அந்த ஆண்டவன் சிரிச்சுக் கெடக்க நாலு சந்தோசத்தக் கூடவா கொடுக்காம போயிடுவான்? நான் சிங்கப்பூரு, புனேவுக்கெல்லாம் போயி ஆடியிருக் கேன். பிளேன்லயெல்லாம் போனேன் தாயி. இங்க பாத்தியா, சூப்பர் ஸ்டாரு ரஜினி சாருகூட நான் எடுத்துக்கிட்ட போட்டோ! இது, ‘சிவாஜி’ படத்துல ‘பல்லேலக்கா’ பாட்டுக்கு நாங்க ஆடுறதுக்காகப் போனப்போ ஷூட்டிங்குல எடுத்தது. எங்களுக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுக் கேட்டு செஞ்சு பாத்துக்கிட்டது மட்டுமில்லாம, அங்க வந்திருந்த எல்லா கலைஞர்களுக்கும் அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தாரு ரஜினி. ‘அருள்’ படத்துல, விக்ரம் தம்பிகூடவும் நடிச்சிருக்கேன்” என்கிறவரின் கண்களில் நெகிழ்ச்சி.

‘`எங்க புள்ள குட்டிகளுக்கு நாங்க ஆடுறது புடிக்கல. ‘பள்ளிக்கூடப் பக்கமெல்லாம் வராத... அசிங்கமாயிருக்கு’னு சொல்லுதுக. அதுவும் சந்தோஷம்தேன் தாயி, அதுகளாச்சும் நாலு எழுத்துப் படிச்சுப் பொழச்சுக்கட்டும். இந்தப் பொழப்பு எங்களோட போகட்டும். ஆடி சம்பாதிக்கிறதெல்லாம் அரை வயித்துக் கஞ்சிக்கும் காணல. அரசாங்கம் பாத்து எங்களுக்கு ஏதாச்சும் உதவுனா கோடிப் புண்ணியமாப் போகும்” - சோர்வுடன் சொல்கிறார் ஞானாம்பாள்.

“ஆட்டக்காரம்மா... மட்டைக்கு அசலூருக்குப் போகணும், கெளம்பி யிருங்க’’ என்ற குரல் கேட்க, பரபரப்பு மீள்கிறது அந்த மக்களுக்கு!

-பூ.பவித்ரா

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்