Published:Updated:

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

Published:Updated:
எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

ழுப்பு நிறக் காகிதப் பையில் தனது புதிய துப்பாக்கியை மறைத்துவைத்திருந்த வேலரி சோலானஸ், நியூயார்க் ஸ்டூடியோ ஒன்றின் வாசலில் ஆண்டி வார்ஹோலுக்காகக் காத்திருந்தார். பேருந்துக்கோ, ரயிலுக்கோ காத்திருப்பதைப்போல மிக இயல்பாக நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஒருவருக்கும் தெரியாது. ஒருவேளை வாய்ப்பு கேட்டு வந்திருப்பாரோ? ஆண்டி அப்படியல்லர். ஓவியம், சிற்பம், மேடை நாடகம், புகைப்படம், திரைப்படம் எனப் பல தளங்களில் இயங்கிவந்த அவர், அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவர். வேலரியை ஆண்டிக்கு முன்பே தெரியும் என்பதால், உள்ளே நுழையும்போதே கையசைத்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ``சொல்லுங்கள், எதற்காக என்னைக் காண வந்தீர்கள்?’’

வேலரி பைக்குள் இருந்த ரிவால்வரை எடுத்து ஆண்டியை நோக்கிச் சுட்டார். முதல் குண்டு அவரைத் தாக்கவில்லை. இன்னொருமுறை சுட்டார். அதுவும் குறி தவறிவிட்டது. மூன்றாவது குண்டு வயிற்றுப் பகுதியில் பாய்ந்ததும் ஆண்டி சுருண்டு கீழே விழுந்தார். ஆண்டி இறந்துவிட்டதாகத்தான் மருத்துவர்கள் முதலில் அறிவித்தனர். ஆனால், சுவாசம் இருப்பது தெரிந்ததும் விரைந்து சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினார்கள். சுட்டுமுடித்த கையோடு வேலரி, காவல் துறையினரிடம் சரணடைந்தார். ஆனால், அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது. தனது ஆற்றாமையை அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார். `நான் இன்னும் நன்றாகப் பயிற்சி எடுத்துவந்து சுட்டிருக்க வேண்டும். அவன் பிழைத்துக்கொள்வான் என எதிர்பார்க்கவேயில்லை. பெருந்தவறு செய்துவிட்டேன்!’

எதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்

எல்லாவற்றிலும் முழுமையையும் துல்லியத்தையும் வலியுறுத்திய வேலரியை, இந்தப் பெருந்தவறு உள்ளுக்குள் போட்டு வாட்ட ஆரம்பித்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோது, இது தன்னுடைய தவறல்ல என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தார். `கண்டுபிடித்துவிட்டேன். எனக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ரகசியக் கருவிதான் குறி தவறியதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அந்த ரகசியக் கருவியை என் ஒப்புதலின்றி எனக்குள் எப்படியோ நுழைத்துவிட்டார்கள். அதை வெளியேற்ற முடியவில்லை. நான் நடப்பது, பேசுவது, சிந்திப்பது அனைத்தையும் அந்தக் கருவி கண்காணித்துவருவதோடு, அந்தச் செய்திகளை நிழல் உலகுக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. அந்த நிழல் உலகக்காரர்கள் என்னைத் தங்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர விரும்புகிறார்கள். என்னைச் செயலிழந்தவளாக மாற்றுவதற்கு அவர்கள் ஓயாமல் சதித்திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நான் சாப்பிட விரும்பினால் சாப்பிடவிடாமல் செய்வார்கள். ஆண்டியைக் கொல்ல விரும்பினால் கொல்லவிடாமல் தடுத்துவிடுவார்கள். என் விருப்பங்களையெல்லாம் தடுத்துக்கொண்டே வருகிறார்கள். இன்று நீ வெற்றி பெற்றிருக்கலாம்; என் புகழுக்குக் களங்கமும் ஏற்படுத்தி யிருக்கலாம். ஆனால், உன் அழிவு என் கையில்தான் கருவியே!'

`மெஜாரிட்டி ரிப்போர்ட்’ என்னும் பெண்ணியப் பத்திரிகையை அவர் வாங்குவது வழக்கம். படிப்பார். பிறகு, ஒரு பேனாவை எடுத்து அதில் எங்கெல்லாம் எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன என ஊன்றிக் கவனித்து எல்லாவற்றையும் சுழிப்பார். ஏன் சமூகம் இப்படியிருக்கிறது? பத்திரிகைகள் தவறு செய்கின்றன. ஆண்டி ஏமாற்றுகிறான். சாலைகளில் குப்பை சேர்கிறது. கருவி பொருத்தி ஒரு பெண்ணைக் குலைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டிருக்கிறது. அதைக் கண்டும் காணாமலும் மக்கள் இயல்பாகத் தங்கள் வேலைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எதைப் பற்றியும் ஒருவருக்கும் அக்கறையில்லை. எல்லாமே அழுக்காகிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் வீசியெறியும் குப்பைகள் குப்பைத் தொட்டிகளைக் கடந்து சாலையெங்கும் வீடெங்கும் கட்டடங்களெங்கும் நாடெங்கும் உலகெங்கும் நிறைந்து அனைவரையும் மூச்சுத் திணறடித்துச் சாகடிக்கும்போது, இறுதியாகக் கண்ணீர் பொங்க ஒப்புக்கொள்வார்கள். வேலரி சோலானஸ், நீ சொன்னதை அன்றே கேட்கத் தவறியதால் வந்த வினை இது!

``எதற்காக ஆண்டியைக் கொல்ல விரும்பினாய்?’’ என்று கேட்கப்பட்டபோது வெடித்தார் வேலரி.

``சும்மாவா ஒருவரைச் சுடுவேன்? என் கைப்பட ஒரு நாடகத்தை எழுதி இந்த ஆண்டியிடம் அளித்தேன். `இதை நீங்கள் தயாரித்தால் நன்றாக இருக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். `சரி, பார்க்கிறேன்’ என்று வாங்கி வைத்துக்கொண்டாரே தவிர, பதிலே இல்லை. ஒருநாள் நேரில் சென்று கேட்டபோது, `வேலரி, நீ கொடுத்த காகிதங்களைத் தொலைத்துவிட்டேன். சரி, அதில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய்?’ என்று மிகவும் இயல்பாக என்னிடம் கேட்டபோது, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என் கதையைத் தொலைத்த ஆண்டியும் தொலைந்து போகவேண்டியவன்தான் என்று முடிவெடுத்தேன். தப்பா?’’

இது நடந்தது, 1968-ம் ஆண்டு, ஜூன் 3 அன்று. சரியாக ஓராண்டுக்கு முன்புதான் வேலரியின் முதல் புத்தகம் வெளிவந்திருந்தது. பெயர், `ஸ்கம்'. எஸ்.சி.யு.எம் என்னும் எழுத்துகளை ஒன்றுகூட்டிப் படித்தால் கழிவுப்பொருள் என்று பொருள் தரும். ஆனால், வேலரி அந்த முதல் எழுத்துகளை வைத்து இன்னொரு பெயரை உருவாக்கியிருந்தார். `சொஸைட்டி ஃபார் கட்டிங் ஆஃப் மென்’. அதாவது, `ஆண்களை அழித்தொழிக்கும் அமைப்பு.' அந்த அமைப்பின் தலைவர் அவர். அமைப்பில் அங்கம் வகிக்கவும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் நிர்வாகிகள், உதவியாளர்கள் என, பலர் அவருக்குத் தேவைப்பட்டனர். கொள்கையை உலகெங்கும் கொண்டுசெல்லவும் ஒரு தனிப்படை வேண்டுமல்லவா?  `ஆள்கள் தேவை’ என்று விளம்பரம் கொடுத்து, நேர்காணல் நடத்தவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒருவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஒருவரும் வராவிட்டால், எனக்கு அமைப்பு நடத்தத் தெரியாதா என்ன?

இந்தப் புத்தகத்தை `ஒலிம்பியா பிரஸ்’ என்னும் அச்சகம் பதிப்பிக்க முன்வந்தது. தலைப்பைக் கண்டு மிரண்டு ஓடியவர்கள் பலர் என்றால், படித்துப் பார்த்துவிட்டுக் கோபமும் எரிச்சலும் அடைந்தவர்கள் பலர். பயந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகம். `இது நிஜமாகவே ஆண்களை வெட்டிப்போடும் அமைப்பா? இந்தப் பெண் ஒரு பயங்கரவாதியா? ஆண்களைப் பிடிக்காததால்தான் இவள் ஆண்டியைச் சுட்டாளா? கடவுளே, இந்தக் கொலைகாரியை வெளியே விட்டுவிடாதீர்கள். இவள் ஒரு நச்சுக்கிருமி. இவளால் நிஜமாகவே ஆண்களுக்கு ஆபத்து.’

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது, கொல்லும் நோக்கில் சுட்டது ஆகிய காரணங் களுக்காக, வேலரிக்கு அமெரிக்க நீதிமன்றம்  மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வேலரிக்குத் தீவிர மனச்சிதைவு இருப்பதைக் கண்டுகொண்டதைத் தொடர்ந்து, `மனநோய்க் காப்பகத்திலும் அவர் சேர்க்கப்பட வேண்டும்’ என்று கூறினர்.

``ஹாஹா... மனநோய் எனக்கா அல்லது சமூகத்துக்கா?’’ என்று சிரித்தார் வேலரி. ஸ்கம் புத்தகத்தின் தொடக்கம் இது. `வாழ்க்கை மிக மிக அலுப்பூட்டுவதாக இருக்கிறது. சமூகத்தின் எந்த ஓர் அம்சத்தோடும் பெண்களால் அனுசரித்துப்போக முடிவதில்லை. அப்படியானால் பொறுப்புமிக்க, துடிப்பான, ஆற்றல்மிக்க பெண்கள் தங்களுடைய திறமைகளையெல்லாம் எப்படிப் பயன் படுத்துவதாம்? நான் ஒரு வழி சொல்கிறேன். பெண்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்; இந்தப் பொருளாதார அமைப்பைத் தகர்ப்போம். தானியங்கி இயந்திரங்கள் இந்த உலகை நடத்திக்கொள்ளட்டும். மிக முக்கியமாக, ஆண் இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்போம்!

எங்கெங்கும் நிறைந்திருக்கும் குப்பை என்பது, உண்மையில் ஆண்தான். எனக்குள் இருக்கும் கண்காணிக்கும் கருவியைப் பொருத்தியவன் ஆண். ஆண்டி தொடங்கி என்னை இதுவரை ஏமாற்றியவர்கள் அனைவரும் ஆண்கள். எல்லாப் பெண்களும் என்னைப்போலவே ஆண்களால் கண்காணிக்கப்படு கிறார்கள்; கட்டுப்படுத்தப்படு கிறார்கள்; ஏமாற்றப்படு கிறார்கள்; வதைக்கப்படு கிறார்கள். சமூகம் ஒழுங்கற்ற தாக இருப்பதற்குக் காரணம், ஆண்கள். சீரழிவுக்கும் குற்றங்களுக்கும் காரணம் ஆண்கள். அந்த ஆணா... இந்த ஆணா... என்று கேட்காதீர்கள். அனைவரும். அவன் அப்படியில்லை, இவன் அப்படியில்லை என சாதிக்காதீர்கள். அனைவரும் அயோக்கியர்கள்.

சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்களே வேலரி என்கிறீர்களா? ஆம்... ஆனால், அவர்கள் அந்தத் திறமையையும் பெண்களுக்கு எதிராகத்தானே திருப்புகிறார்கள்? யார் போரிடுகிறார்கள்? யார் ஆயுதம் தயாரிக்கிறார்கள்? யார் பெண்களின் வாழ்வை நாசப்படுத்துகிறார்கள்? காற்றில் யார் நச்சு கலக்கிறார்கள்? இது யார் நடத்தும் அரசு? இந்தப் பொருளாதாரம் யாருடையது? இந்த உலகை நானே நடத்துகிறேன் என்று பெருமிதப்பட்டுக்கொள்ளத் தெரியும். ஆனால், நீ நடத்துவது குப்பை என்று சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருமா? குப்பையை அள்ளியணைத்துக்கொள்ளவா முடியும்... மூக்கை மூடிக்கொண்டு ஒரு பெரிய பையில் மொத்தமாக அள்ளி எடுத்து வீசியெறிவதுதானே சரியான செயல்... ஸ்கம் செய்யவேண்டியது அதைத்தான்!'

சிறையிலிருந்து வெளியில் வந்த வேலரியைப் பார்த்து, ``இப்போதாவது திருந்திவிட்டாயா?’’ என்று கேட்டார்கள். ``பேச நேரமில்லை. கிருமி வளர்ந்துகொண்டேபோகிறது, அழித்தாக வேண்டும்’’ என்று பதிலளித்தார். 1988-ம் ஆண்டு, தனது 52-வது வயதில் இறக்கும்வரை ஸ்கம் அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். குடும்பத்தினர், தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை ஓர் அபாயமாகவே கண்டனர். தன் மகளின் உடைமைகள் அனைத்தையும் (ஸ்கம் புத்தகம் உட்பட) தீயிட்டுக் கொளுத்தி அழித்தார் அவர் அம்மா. ``உண்மையிலேயே அவள் இறந்துவிட்டாளா? அவளது இறப்புச் சான்றிதழ் வெளிவந்திருக்கிறதா?’’ என்று சந்தேகத்தோடு கேட்டார்கள் மக்கள்.

இறுதிவரை புதிராகவே இருந்திருக்கிறார். 20 பெயர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார். தனக்குத்தானே பேசிக்கொள் வார். அவருக்கு மட்டும் சில `காட்சிகள்’ தெரியும்; `குரல்கள்’ கேட்கும். புன்னகைப்பார், சீறுவார், அழுவார். `பெரும்பணி இருக்கிறது, தோழிகளே வாருங்கள்’ என்பார். எழுதுவார். கிழித்தெறிவார். கருவியை வெளியில் எடுக்க முடியாமல் திணறுவார். ``இன்று `ஸ்கம்' தனித்துவமான ஒரு பெண்ணியப் படைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பெண்களின் அறிவார்ந்த வரலாறு எழுதப்படும்போது ஸ்கம்மை நீங்கள் குறிப்பிட்டாக வேண்டும்’’ என்றார் பிரெஞ்சு தத்துவவியலாளர் தெரிதா.

ஆற்றல்மிக்க ஒரு பெண்ணின் கோபத்தை, வெறுப்பை, குமைச்சலை, அழுத்தத்தை ஸ்கம் சுமந்துநிற்கிறது. வேலரியிடம் அளவுகடந்த வெறுப்பு இருந்தது, அளவுகடந்த நேசமும் இருந்தது. அவரே ஓரிடத்தில் சொல்கிறார். `நான் ஆண்களை ஏன் வெறுக்கிறேன் எனக் கேட்கிறீர்கள். நான் பெண்களை உயிருக்குயிராக நேசிக்கிறேனே, என்ன செய்வது?’

-மருதன்