Published:Updated:

வயது 70... தினமும் 30 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து கோயில்களில் பூஜை செய்யும் கண்ணன் குருக்கள்!

''நான் பல வருஷங்களாகச் சைக்கிளிலேயே பயணம் செய்வதால், இதுவரை எனக்கு சுகர், பிரஷர் என்று எந்த வியாதியும் வந்ததில்லை. எப்போதேனும் தலை வலித்தால் ஒரு காபி குடித்தால் சரியாகிவிடும்."

வயது 70... தினமும் 30 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து கோயில்களில் பூஜை செய்யும் கண்ணன் குருக்கள்!
வயது 70... தினமும் 30 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து கோயில்களில் பூஜை செய்யும் கண்ணன் குருக்கள்!

சைக்கிள் பயணம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த பயிற்சியாகும். 5 கி.மீ தொலைவு சைக்கிளில் சென்றாலே சோர்ந்துபோகும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், 70 வயதிலும் ஒருநாளைக்கு சுமார் 30 கி.மீ தொலைவு சைக்கிளில் பயணிக்கிறார் மதுரையைச் சேர்ந்த அர்ச்சகர் டி.கே.கண்ணன் குருக்கள். விசேஷ நாள்களில் சுமார் 150 கி.மீ வரையும் சைக்கிளில் பயணம் செய்து கோயில் பூஜைகளையும் விசேஷங்களையும் நடத்தி வருகிறார் என்பது வியப்புக்கு உரிய விஷயம்தான்!

மதுரை அண்ணா நகர், முத்து விநாயகர் கோயிலில் பூஜைகள் செய்துகொண்டிருந்த அர்ச்சகர் கண்ணன் குருக்களைச் சந்தித்துப் பேசினோம்.

``சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை அடுத்த பக்கநாடு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளேன். சிறு வயதில் பள்ளிக்குச் செல்ல சுமார் 6 கி.மீ தொலைவு செல்ல வேண்டும். நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்ட சமூக ஆர்வலர் ஒருவர்தான் எனக்குப் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அப்போது தொடங்கிய என் சைக்கிள் பயணம், 70 வயதிலும் தொடர்கிறது. சைக்கிளில் பயணம் செய்வதும் எனக்குப் பிடித்துப்போனது’’ என்றவரிடம், ``மதுரைக்கு எப்போது வந்தீர்கள்?’’ என்று கேட்டோம்.

``நான் படிப்பை முடித்ததும் மதுரை வைகை காலனியில் இருந்த என் மாமா வீட்டுக்கு வந்துவிட்டேன். என் அத்தையும் மாமாவும் அவர்களுக்குக் குழந்தை இல்லாத காரணத்தால் என்னை மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொண்டனர். ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை கிடைத்தது. தொடர்ந்து பல வேலைகள் செய்தாலும், சைக்கிளில் செல்வதை மட்டும் நான் நிறுத்தவில்லை. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வேதங்கள் கற்பதில் ஈடுபட்டேன்.

சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் முத்து சுந்தரம் குருக்களுடன் பூஜை செய்ய பல்வேறு இடங்களுக்கும் சைக்கிளிலேயே சென்றேன். பின்னர் முழுநேரமும் கோயில்களில் பூஜை செய்வதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்’’ என்று சொல்லும் கண்ணன் குருக்கள், மதுரையில் 15-க்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜை செய்து வருகிறார். இத்தனைக்கும் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருந்தாலும், அவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல், அவர்களுக்குத் தொந்தரவு தராமல், அர்ச்சகர் பணியைச் செய்து வருகிறார். 

மேலும், நம்மிடம் தன்னுடைய அன்றாடப் பணிகளை விவரித்தார். ``தினமும் 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டுப் புறப்பட்டுவிடுவேன். காலையில் அண்ணாநகர் முத்து விநாயகர் கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு, பிறகு மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் பூஜை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.

கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், கோயில் கும்பாபிஷேகம் என்று விசேஷ நாள்களில் காரைக்குடி, தேவகோட்டை, பழநி, புதுக்கோட்டை, திருப்பத்தூர் என்று பல ஊர்களுக்கும் செல்வேன். 150 கி.மீ தொலைவு வரை சைக்கிள் பயணம்தான். அதற்கு மேலான தொலைவு செல்ல வேண்டும் என்றால்தான் பஸ்ஸில் பயணம் மேற்கொள்வேன்’’ என்றார்.

சைக்கிளில் செல்வதால் தனக்கு ஏற்பட்ட நன்மைகளையும் அவர் தொடர்ந்து நம்மிடம் விளக்கமாகக் கூறினார். ``நான் பல வருஷங்களாகச் சைக்கிளிலேயே பயணம் செய்வதால், இதுவரை எனக்கு சுகர், பிரஷர் என்று எந்த வியாதியும் வந்ததில்லை. எப்போதேனும் தலை வலித்தால் ஒரு காபி குடித்தால் சரியாகிவிடும். காலையில் வடையும் காபியும்தான். மதியம் தயிர் சாதம் அல்லது காய்கறிக் கூட்டுடன் சாப்பாடு. இரவு இட்லி அல்லது தோசை சாப்பிடுவேன்.

மற்றபடி கோயில்களில் எனக்குக் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் போன்றவற்றை வழியில் பார்க்கும் மக்களுக்குக் கொடுத்துவிடுவேன்...’’ என்று சொல்லும் கண்ணன் குருக்கள், தினமும் சொல்லி வைத்ததுபோல் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுவாராம். இத்தனைக்கும் அலாரம் எதுவும் வைப்பதில்லை. மார்கழி மாதம் என்றால் அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிடுவாராம். 

``இத்தனை வருட சைக்கிள் பயணத்தின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்கிறதா?’’ என்று கேட்டதற்கு,
``ஒரே ஒருமுறைதான் நான் கீழே விழுந்திருக்கிறேன். ஒரு மாடு குறுக்கிட்டபோது அதன் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரேக் போட்டேன். சறுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். மற்றபடி ஆண்டவன் புண்ணியத்தில் விபத்தில்லாமல்தான் சைக்கிள் ஓட்டுகிறேன். இந்த வயதில் நான் சைக்கிள் ஓட்டுவதைப் பலரும் ரசித்துப் பார்க்கிறார்கள்.

சிறுவர்களோ, ``பார்த்தியா இந்தத் தாத்தா ஸ்டைலாக சைக்கிள் ஓட்டுவதை என்று கிண்டலடிப்பார்கள்'’’ என்று சிரித்தபடி கூறும் கண்ணன் குருக்களுக்கு வசதி இருந்தும் பைக், கார் வாங்க வேண்டும் என்ற ஆசையே வந்ததில்லை.

தேவை இருக்கிறதோ இல்லையோ... ஆடம்பரத்துக்காக வாகனங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மத்தியில், இயல்பான வாழ்க்கையை வாழும் கண்ணன் குருக்கள் பாராட்டுக்குரியவர்தான்!