Published:Updated:

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

Published:Updated:
தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

‘‘நான் பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில், பெண்களால் இந்த உலகில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’’ என்கிறார் மலாலா.

தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்குப் பலியாகி, வாழ்வின் கடைசி நிமிடங்களை அனுபவித்துவிட்டு மீண்டுவந்த பிறகு, ஐ.நா-வில் இப்படித்தான் பேசினார் மலாலா.

அப்படியென்றால், பெண்களின் அரசியல் அதிகாரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மசோதா நிறைவேறியதற்குப் பின்னால் வலியுடன்கூடிய ஒரு போராட்ட வரலாறு இருக்கும். ஆனால், ஒரு மசோதா நிறைவேறாததற்குப் பின்னால் அத்தகைய வலியுடனான வரலாறு இருக்கிறதென்றால்,  அது மகளிருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாதான்.

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேற்றுமை உள்ளது. கடந்த காலங்களில் பிரதமர்கள் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் இருவரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க முயற்சி செய்தார்கள். ஆனால், முடியவில்லை. அதற்குப் பிறகு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின்போது, பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் எதிர்த்தன. மீண்டும் 2003-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு என்று நிரூபிக்க, அன்றைய பிரதமர் வாஜ்பாய் முற்பட்டார். அவரது முயற்சிக்கு காங்கிரஸ் இடதுசாரிகள், தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, தெலுங்கு தேசக் கட்சி போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தும் பலனில்லை.

யார் எதிர்த்தார்கள்... ஏன் எதிர்த்தார்கள்?

மகளிர் மசோதாவிலும் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்குத் தனியே இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா கட்சி தலைவர் சரத்யாதவ் ஆகியோர் எதிர்த்தனர். மேலும், `ஒவ்வொரு தேர்தலின்போதும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு இடங்கள் காலியாவதால், அந்த இடங்களுக்கு மீண்டும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அதுமட்டுமல்ல... மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மற்றும் முன்னேறிய உயர்சாதி பெண்கள் பொது தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், சாதி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் மத ரீதியாகச் சிறுபான்மையினர் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் அபாயம் உள்ளது. சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகள், தொடர்ந்து பணியாற்ற முடியாமல் ஒதுக்கப்படுவார்கள். தங்கள் தொகுதிகளிலே அந்நியப்பட்டுப்போவார்கள். இதனால், அவர்கள் மீதான நம்பகத்தன்மை குறையும் ஆபத்தும் உள்ளது' என்று காரணம் கூறினர். பெண்களுக்கு ஒதுக்கீடு என்று வரும்போது, ஆண்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற முக்கியமான காரணத்தை துணைக்காரணமாக வைத்துதான் நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர். 33 சதவிகிதம் என்பது நாடாளுமன்றத்தில் பெண்களுடைய பங்கைச் சுருக்குவது என்றெல்லாம்கூட சொன்னார்கள்.

`பெண்களுக்குக் கட்சிகளுக்குள் மட்டும் இட ஒதுக்கீடு வழங்கலாம்' என்று 2004-ம் ஆண்டில், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், `சமூக நீதி' என்ற தலைப்புக்குள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பி.ஜே.பி துணையோடு மக்களவையில் நிறைவேற்றியது. அதுதான் அவையின் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களை சட்டமன்றத்திலும் மக்களவையிலும் பங்கேற்கவைப்பது என்பதாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின தொகுதிகளில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் அம்சமும் அடங்கியிருந்தது. 2008-ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மசோதா வரைவில், 1996-ம் ஆண்டு, இந்த மசோதாவை ஆராய உருவாக்கப்பட்ட கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிந்துரைத்த பல அம்சங்கள் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டை மாநிலங் களவைக்கும் நீட்டிக்கத் தேவையில்லை என்றது. மேலும், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் உறுப்பினர்களின் செயல்பாடுகளைச் சோதனைசெய்து மாற்றங்கள் செய்வதை ஏற்காமல், அப்படியே தொடர்ந்து நீடிக்கச் செய்வது, இதர பிற்படுத்தப்பட்ட மகளிர், ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசியது. கட்சி மற்றும் கட்சி உறுப்பினர்களின் குற்றப்பின்னணி, கறுப்புப் பணப் புழக்கம், கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் ஆகியவற்றைக் கணக்கில்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஆண்களுக்குப் பதிலாகப் பெண்கள் வெறும் பொம்மைகளாக இந்த இடங்களைப் பிடித்திருப்பார்கள்; அதிகாரம் ஆண்களின் கைகளில்தான் இருக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டிய மசோதா என்பதுதான், 1996-ம் ஆண்டு கீதா முகர்ஜி குழுவின் பிரதான அறிக்கை சொன்னது. ஆனால், இதில் பல அம்சங்கள் 2008-ம் ஆண்டு, மசோதாவில் இல்லை.

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து தலைவர்களின் பேச்சு

இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இழுத்தடிக்கப்படும் இந்த மசோதா குறித்து நம்மை ஆளக்கூடிய தலைவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் இதைக் கடுமையாக எதிர்த்ததோடு, செயலிலும் அவரது கோபத்தைக் காண்பித்தார். 1996-ம் ஆண்டில், பிரதமர் தேவகவுடா ஆட்சிக் காலத்திலிருந்து 2008 வரை எப்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாலும் உடனடியாகச் சென்று அந்த மசோதாவைக் கிழித்துப்போடும் வேலையை சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வார்கள். ஒருமுறை சட்ட அமைச்சர் பரத்வாஜ் தாக்கல் செய்யும்போது, சமாஜ்வாதி எம்.பி-யான அபு அசிம் ஆஸ்மி ,அதைப் பிடுங்கி கசக்கி எறிந்தார். காங்கிரஸ் அமைச்சர்கள் குமாரி ஷெல்ஜா மற்றும் அம்பிகா சோனி இருவரும் பரத்வாஜுக்கு அரணாக இருபுறமும் இருந்தபோதுதான் இந்த மசோதாவைத் தாக்கலே செய்தார். அமைச்சர் பரத்வாஜைத் தாக்க முற்பட்டபோது காங்கிரஸ் பெண் அமைச்சரான ஜெயந்தி நடராஜன், மற்றொரு காங்கிரஸ் எம்.பி அல்கா பல்ராம் ஷத்ரியா ஆகியோர் தாக்குதலை, தடுத்து நிறுத்தினர். அன்றைய அமைச்சரவையில் இருந்த ரேணுகா சவுத்ரி, அபு அசிமை கடுமையாகக் கண்டித்து அவையைவிட்டு வெளியேற்றினார். இவ்வளவு கூத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் முன்புதான் நடந்தது. இதையெல்லாம் மனதில்கொண்டுதான் `ராஜீவ் கண்ட கனவை நிறைவேற்ற கூட்டணிக் கட்சிக்குள்ளேயே போராட்டம் நடத்துகிறேன்' என்றார் சோனியா காந்தி. இச்சட்டத்தை எதிர்த்த ராஷ்ட்ரிய ஜனதாதளம்குறித்துப் பேசும்போது, ‘‘ஏழு மகள்களைக் கொண்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ் இந்த மசோதாவை எதிர்ப்பதில் நியாயமில்லை’’ என்றும் கூறினார்.

``இந்த மசோதாவை 50 சதவிகிதம் ஆக்குங்கள். உள்ஒதுக்கீடு கொடுங்கள். இப்படியே நிறைவேற்றினால் நாடாளுமன்றத்திலேயே விஷம் குடிப்பேன்'' என்றார் சரத்யாதவ். கூடவே, நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பெண்களைப் பார்த்து, ``இந்தக் குட்டைமுடி வைத்திருக்கும் பெண்கள்தாம் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் கோடானுகோடி பெண்களுக்கு உரிமையை மீட்டுத் தரப் போகிறார்களா?'' என்று கிண்டல் செய்தார்.

``பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றால் அது அவர்களுக்கு இழைக்கும் அநீதி. சமூக நீதியைக் காக்க வேண்டும் என்றால் 50 சதவிகிதம் ஆக்குங்கள்'' என்றார் மாயாவதி.

மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி, கட்சிகளுடன் முறையான ஆலோசனை செய்யவில்லை என்கிற காரணத்தைக் கூறி, நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. சிவசேனை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் எதிர்த்தன.

`மகளிர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு புறக்கணிக்கக்கூடியதல்ல. ஆனால், அந்தக் காரணத்தைக் காட்டி இந்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது' என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தனது ஆதரவை இம்மசோதாவுக்கு அளித்தார்.

2010-ம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றிய அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், `என் நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான தருணம் இது' என்றார்.

`ஒரு கட்சி நினைத்தால் அக்கட்சிக்கு செல்வாக்கு இல்லாத தொகுதிகளில் மகளிரை நிறுத்தி தோற்கடித்துவிட்டு, இந்த மசோதாவால்தான் ஆனது என்று பொய் காரணம் கூறப்படும். ஒரு கட்சி, தொகுதியில் செல்வாக்குள்ள, பண பலம் - ஆள் பலம் உள்ள ஓர் ஆண் நபரை நிறுத்தி ஓட்டுகளைப் பெறும்போது, மகளிரை நிறுத்துவதன் மூலம் தொகுதி மக்களிடம் நம்பகத்தன்மை இழக்க நேரிடும்' என்பன போன்ற எண்ணிலடங்கா பொய் காரணங்கள் அன்றைக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விவாதங்களில் கூறப்பட்டன.

இம்மசோதா நிறைவேறாததற்கு சிறிய கட்சிகள்தாம் காரணம் என்று தேசியக் கட்சிகள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான எத்தனையோ சட்டங்களைத் தாங்கள் நினைத்த மாத்திரத்தில் எளிதில் சட்டங்களாக, அவசரச் சட்டங்களாக - ஏன் பொடா போன்ற சட்டங்களாக நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் நிறைவேற்றிய இரு தேசிய கட்சிகளின் அரசுகளும் மகளிர் விஷயத்தில் ஏதோ ஒரு காரணம் சொல்வது ஏற்புடைய தல்ல. அவ்வளவு ஏன்... அனைத்துக் கட்சிகளின் உயர்மட்ட பொறுப்புகள், மாவட்டச் செயலாளர்கள் போன்றவற்றிலும் ஆண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பெண்களுக்கு கட்சிகளுக்குள் மிகச் சொற்ப பொறுப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

2014-ம் ஆண்டில், மோடி பொறுப்பேற்றதும் நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின், `விரைவில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படும்' என்று கூறினார். சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய நம்பிக்கை வார்த்தைகள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் கம்யூனிஸ்ட் கட்சி உயர் குழு உறுப்பினரான பிருந்தா காரத்தையும் கட்சி பேதத்தைத் தாண்டி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி இருவரும் பரஸ்பரம் தட்டிக்கொள்ளவைத்தது. ஒருமுறை கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த பிரதமர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ‘‘கூட்டத்தொடரின் வழக்கமான நடைமுறையாகச் சட்டம் இயற்றினாலும் இயற்றாவிட்டாலும் விவாதிக்கும் மசோதா பட்டியல்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இருக்கும். ஆனால், இந்த முறை சம்பிரதாயத்துக்குக்கூட பா.ஜ.க அரசு விவாதிக்கும் பட்டியலில் சேர்க்கவில்லை’’ என்று கூறியது, இந்த இடத்தில் நினைவுக்கூரத்தக்கது.

அவசரச் சட்டம் இயற்றுவதற்குப் பெயர் பெற்ற மோடி அரசு, ஏன் மகளிர் நலன் சார்ந்து இந்த மசோதாவை நிறைவேற்ற இதுவரை முயற்சி செய்யவில்லை என்பது மோடியை நோக்கி எழும் கேள்வி. அதுவும், மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஆறு பெண் அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன் பெண்களுக்குக் கிடைத்தது என்பது அதைவிட மிக முக்கியமான கேள்வி. அவர்களால் கட்சி, அரசு இயந்திரங்களில் எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது என்பதும் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

- காத்திருப்போம்!

-சுகிதா சாரங்கராஜ்