Published:Updated:

"ஆஸ்கர் புறக்கணித்த லீ சாங்-டாங்கின் கொரியன் படம் #Burning எப்படியிருக்கிறது?!"

பாபு சுப்ரமணியன்

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் `பார்ன் பர்னிங்' (Barn Burning) சிறுகதையின் தழுவல்தான், இந்த `பர்னிங்' கொரியன் படம்.

"ஆஸ்கர் புறக்கணித்த லீ சாங்-டாங்கின் கொரியன் படம் #Burning எப்படியிருக்கிறது?!"
"ஆஸ்கர் புறக்கணித்த லீ சாங்-டாங்கின் கொரியன் படம் #Burning எப்படியிருக்கிறது?!"

கொரிய இயக்குநர் லீ சாங்-டாங் `ஒயேசிஸ்' (2002), `போயட்ரி' (2010) போன்ற அருமையான படங்களின் மூலம் திரைப்பட விழாக்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர். 8 வருடங்கள் கழித்து இவர் எடுத்த `பர்னிங்' (2018) கேன்ஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களால் கொடுக்கப்படும் FIPRESCI பரிசு பெற்று, ஆஸ்கர் 2019 குறும் பட்டியலில் இருந்தது. ஆனால், அது ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்படாததில், சாங்-டாங் ரசிகர்களுக்கு வருத்தம்தான். `பர்னிங்' ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் `பார்ன் பர்னிங்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட த்ரில்லர்.

முரகாமியின் `பார்ன் பர்னிங்'கில் கதை சொல்லும் நாயகன், தனக்குத் தெரிந்த பெண் ஒருத்தியின் கோடீஸ்வர நண்பன் மற்றவர்களுக்குச் சொந்தமான களஞ்சியங்களுக்குத் தீ வைத்து எரிப்பதாகச் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து, அதில் அப்செஸ் (obsess) ஆகிறான். ஊரில் இருக்கும் களஞ்சியங்கள் எல்லாவற்றையும் தேடிப் பார்த்து அவற்றில் ஒன்றுகூட எரிக்கப்படாதது நாயகனுக்குப் பெரிய புதிராக இருக்கிறது. களஞ்சியங்களை எரிப்பதாக கோடீஸ்வரன் சொன்னது, நாயகனை மிகவும் பாதித்து, அதற்காகப் பல நாள் காத்திருந்த பின் அவனே ஒரு களஞ்சியத்திற்குத் தீ வைக்கலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதிலிருந்து தன்னைத் தடுத்துக்கொள்கிறான். இருக்கும் மர்மம் போதாதென்று, அந்தப் பெண் வேறு காணாமல் போகிறாள். 

முரகாமி கதைக்குச் செய்யப்பட்ட மாற்றங்களும், சேர்க்கைகளும்:  

படத்தில் சாங்-டாங் முரகாமியின் கதையில் சில மாறுதல்கள் செய்து, பல விஷயங்களைச் சேர்த்துள்ளார். நாயகனுக்கு லீ ஜாங்-சு என்று பெயரிட்டு அவனை இளைஞனாக, திருமணமாகாதவனாக மாற்றியுள்ளார். நாயகனுக்குத் தெரிந்த பெண் ஷின் ஹே-மி மேல் நாயகன் ஜாங்-சு காதல் கொண்டிருப்பதாகக் காட்டியிருக்கிறார். நாயகனின் குடும்ப விவரங்களைச் சேர்த்திருக்கிறார். சிறு வயதில் சேர்ந்து படித்த ஹே-மியைப் பல வருடங்கள் கழித்து சந்திக்கிறான் ஜாங்-சு. அவனுடைய தந்தை ஓர் அதிகாரியைக் கோபத்தில் அடித்த சிறிய குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போனதால், அவன் பசு மாட்டைப் பார்த்துக்கொள்ள ஸௌல் (Seoul) நகரை விட்டு வடகொரிய எல்லைக்கு அருகே இருக்கும் பஜு எனும் தன் சொந்த ஊருக்குப் போகிறான்.

படத்தில் இன்னொரு சேர்க்கை, ஜாங்-சு தன் முதல் நாவலை எழுதுவதற்காக உலகைக் கூர்ந்து பார்த்துப் புரிந்துகொள்ள முயலும் எழுத்தாளன். நீதி நெறியற்ற `தீமூட்டி'யான கோடீஸ்வரனுக்குப் படத்தில் பெயர் பென் (Ben). அவன் ஸௌல் நகரத்தில் தென்கொரியாவின் பெவர்லி ஹில்ஸ் என்றழைக்கப்படும் கன்னம் (Gangnam) என்ற பகுதியில் வசிக்கிறான். ஜாங்-சுவுக்கும், பென்னுக்கும் இடையே இருக்கும் வர்க்க வேறுபாடு அழுத்தமாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஜாங்-சு ஹே-மியை நேசிப்பதால், இது ஒரு முக்கோணப் படம். தென்கொரியாவில் பைங்குடில்கள் (greenhouses) அதிகமாக இருப்பதாலும், அவை படத்தில் காட்டுவதற்குப் பார்வையாக இருப்பதாலும், களஞ்சியத்துக்குத் தீ வைப்பதற்குப் பதிலாக பைங்குடில்களை எரிப்பதாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தீ இந்தப் படத்தின் மீள் கருத்து (recurring motif). பைங்குடில் எரிப்பது பற்றிய பேச்சைத் தவிர, கலஹாரி புஷ்மென் (bushmen) இனத்தினர் தீ வைத்து சொக்கப்பனையைச் சுற்றி ஆடுவதுபோல ஹே-மி ஆடிக் காண்பிக்கிறாள். ஜாங்-சு தன் தாய் அவனுடைய சிறிய வயதில் வீட்டை விட்டுப்போன பின் அவளுடைய துணிகளைக் கொளுத்தி எரியவிட்டதை நினைவு கொள்கிறான். மர்மத்தை அதிகரிக்க இன்னும் சில விஷயங்களைச் சேர்த்துள்ளார், சாங்-டாங். ஹே-மி கென்யாவுக்குப் போகும் முன் ஜாங்-சுவிடம் அவளுடைய பூனைக்குத் தீனி வைக்குமாறு சொல்கிறாள். ஜாங்-சு அவள் குடியிருப்புக்குப் போகும்போதெல்லாம் பூனையைப் பார்க்க முடிவதில்லை. இதைத் தவிர, ஜாங்-சுவுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவன் தொலைபேசியை எடுத்ததும் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. எல்லாமே புரியாத புதிராகப் போனதும், ஜாங்-சு முரகாமி கதையின் நாயகனைக் கடந்துபோய் பென்னை அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்கிறான்.

சாங்-டாங் எவ்வாறு முரகாமியிடமிருந்து வேறுபடுகிறார்? 

முரகாமியிடமிருந்து சாங்-டாங் விலகி, ஜாங்-சு நிஜத்தை உணர்வதில் ஹே-மியிடமிருந்து எப்படி மாறுபடுகிறான் என்பதில் ஆர்வம் காட்டுகிறார். ஜாங்-சு ஒரு பிரச்னை இருப்பதால் ஊருக்குப் போகிறேன் என்று சொல்லும்போது, ஹே-மி என்ன ஏது என்று கேட்பதில்லை. ஊமைக்கூத்து (pantomime) கற்று வரும் ஹே-மி நிஜத்தை நோக்குவதிலும், அதை ஆராய்வதிலும் நாட்டமில்லாமல் கற்பனை உலகத்தில் மிதக்கிறாள். ஜாங்-சு அவளிடம் பென் ஏன் அவளைச் சந்திக்கிறான் என்று கேட்க, அவளை மாதிரி மனிதர்களை அவனுக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னான் என்கிறாள். அவள் அப்பாவித்தனத்தால் பலியாகிவிட்டாளோ என்று தோன்றுகிறது.

ஹே-மியாக ஜியோன் ஜாங்-சியோ தன் முதல் படத்திலேயே உயிரோட்டம் காட்டி நடித்திருக்கிறார். ஜாங்-சுவாக நடிக்கும் யூ ஆ-இன் கொஞ்சம் தூங்கி வழிவது போலிருக்கிறார். ஜாங்-சு ஹே-மிக்கு நேரெதிர். அரும்பும் எழுத்தாளனான அவன், தனது பார்வையில் நிஜத்தைக் கூராக நோக்கி அதன் ஆழத்தை உணரப் பார்க்கிறான். ஹே-மி சொல்வதுபோல நிஜமாகவே ஊரில் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் கிணறு இருந்ததா என்று எல்லோரிடமும் விசாரிக்கிறான். பைங்குடில் ஒன்றும் எரியாமலிருக்கும் புதிரைக் கட்டவிழ்க்க, பென்னின் பார்ஷ் வண்டியைத் தனது பிக்அப் டிரக்கில் அப்செஸ்ஸிவாகத் தொடர்கிறான். போகப்போக அவனுக்குப் பைங்குடில் எரிக்கும் உருவகத்தின் பொருள் புரிந்து எல்லாம் விளங்குகிறது. ஆனால் அவனுடைய கூர்மையான நோக்கும் ஆய்வும் அந்தப் புதிரைத் தீர்க்க உதவினாலும், கூடவே அவனை அவன் வெறுக்கும் தந்தையின் பிரதிபலிப்பாக்குகிறது. ஜாங்-சு காதலிக்கும் ஹே-மியை, பென் அவனிடமிருந்து பறித்துக் கொண்டுபோய் அவனுக்குக் கையிலெட்டாதவளாக்கிய பின், அவள் தொலைந்து போகிறாள். ஹே-மிக்கு என்ன ஆகியிருக்கலாமென்று அவன் ஊகித்ததும் ஆத்திரமடைவது துயரமான முடிவில் கொண்டுபோய் விடுகிறது. அவன் பார்ப்பதையெல்லாம் ஆய்வது, அவள் எதையுமே பாராமலிருப்பது ஆகிய இரு வேறு தீவிர அணுகுமுறைகளும் பெரிய இழப்பைத்தான் வாங்கிக்கொடுக்கும் போலிருக்கிறது.

பென்னின் மாறுபட்ட கதாபாத்திரம் :

முற்றிலும் மாறுபட்ட பென் கதாபாத்திரத்திற்கு ஸ்டீவன் யான் சரியாகப் பொருந்தி, நன்றாக நடித்திருக்கிறார். ஜாங்-சுவின் பார்வையில்தான் படத்தில் பென் நமக்குத் தெரிவதால் பென் பற்றி நுணுக்கமான நோக்கை (insight) படம் நமக்கு அளிக்கவில்லை. ஜாங்-சுவுக்குப் பென் இள வயதிலேயே குபேர வாழ்க்கை வாழ்வது ஆச்சர்யமளிக்கிறது. ஜாங்-சு பென்னை `கிரேட் கேட்ஸ்பி' என்று ஸ்காட் பிட்ஸ்ஜெரல்டின் இதே பெயர் தாங்கிய நாவலில் வரும் இதே பெயர் கொண்ட மர்மமான கோடீஸ்வரனைக் குறித்து அழைக்கிறான். பென் அப்படி என்னதான் செய்கிறான் இப்படிப்பட்ட பணக்காரனாக இருக்க, என்று ஜாங்-சு வியக்கிறான்.

அதேசமயம் ஜாங்-சு பார்க்கும்போதெல்லாம் பென் சிரித்த முகத்துடன் அவனை வரவேற்று உபசரிக்கிறான். பென் நண்பர்களுடன் கொட்டமடிக்கும்போதுகூட கொட்டாவி விடுவதை ஜாங்-சு காண்கிறான். பென்னின் பார்வையில் நிஜம் அவனுக்கு அலுப்பூட்டுவதால், அவன் சுவாரஸ்யமூட்டிக்கொள்ள ஏதாவது செய்ய விழைகிறான். பைங்குடில்களை எரிப்பதாகவும், அவை கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து பரவசம் அடைவதாகவும் கூறுகிறான். அதை நியாயப்படுத்த அவன் வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை உதாரணம் காட்டுகிறான். இதுதான் இயற்கையின் நெறியாதலால், இதில் நல்லது கெட்டது என்று ஒன்றும் கிடையாது என்கிறான். பென் அந்தக் கொடூரமான செயலைச் செய்தானா, இல்லையா என்பதில் தெளிவின்மை (ambiguity) முரகாமியின் கதையைவிடப் படத்தில் குறைவாக இருக்கிறது. ஆனால், ஜாங்-சு மேல் பென்னின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

படம் எப்படி?

சாங்-டாங்கின் முந்திய படங்களைவிட `பர்னிங்'கில் ஹாங் க்யுங்-வின் ஒளிப்பதிவு பிரமாதமாக இருக்கிறது. ஜாங்-சு, ஹேமி, பென் மூவரும் பஜுவில் ஜாங்-சுவின் வீட்டுக்கு வெளியே அந்தி நேரத்தில் கஞ்சா புகைக்கும் காட்சியில் லூயி மாலின் 'எலிவேடர் டு தி கேலோஸ்' படத்தில் வரும் மைல்ஸ் டேவிஸின் வரலாறு படைத்த டிரம்பெட் இசை பின்னணியில் ஒலிக்கிறது. பென்னின் போர்ஷும், ஜாங்-சுவின் பிக்அப் டிரக்கும் மாறுபாடாக இருக்கின்றன. இந்தக் காட்சியில்தான் பென் களஞ்சியங்களை எரிப்பதாகச் சொல்லி, ஜாங்-சுவை அதிர வைக்கிறான். ஹே-மியை நிழலுருவில் (silhouette) காட்டும் அருமையான ஷாட் இந்தக் காட்சியில் வருகிறது. எனினும் `ஒயேசிஸ்'ஸிலும், `போயட்ரி'யிலும் இறுதிக் காட்சிகள் அந்தப் படங்களை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. `பர்னிங்', சாங்-டாங்கின் முந்தைய படங்களின் அருகே சென்றும்கூட அவற்றின் உயரத்தைத் தொடாவிட்டாலும், 2018-ல் வந்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகத் திகழுவதன் காரணம், படம் பார்த்து வெகுநேரம் கழித்தும் நினைவிலிருந்து நீங்காமல், ஹான்டிங்காக (haunting) இருப்பதுதான்.